tamilnadu

img

வேளாண் துறையை கார்ப்பரேட்மயமாக்காதே! விவசாயிகளின் வருமானத்திற்கு உத்தரவாதம் அளித்திடுக!

புதுதில்லி:
வேளாண்மைத்துறையைக் கார்ப்பரேட்மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வருமானம், சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, குறைந்தபட்ச ஆதாரவிலை, வேலை மற்றும் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம் செய்திட வேண்டும் என்றும் கோரி, குடியரசுத் தலைவருக்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுமற்றும் அதனையொட்டி பிறப்பிக்கப் பட்டுள்ள சமூக முடக்கத்தின் காரணமாக நாட்டில்உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமையை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்று கோரி இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம். இந்த நிலைமை, விவசாயத்திலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. விவசாயிகள் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியவில்லை, அறுவடை செய்தவற்றை சந்தைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. இவற்றின் விளைவாக விவசாயிகள் கடும் இழப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மத்திய அரசோ, பெரும்பான்மையான மாநில அரசுகளோ ஆய்வு எதனையும் மேற்கொள்ளவோ, அவ்வாறு பாதிப்புக்கும் இழப்புக்கும் ஆளான விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கவோ முன்வரவில்லை.

நாட்டில் செல்வத்தை உண்மையில் உருவாக்கும் விவசாயிகள் குறித்தோ, தொழிலாளர்கள் குறித்தோ அவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்தோ நரேந்திர மோடிதலைமையில் அமைந்துள்ள மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அவசரச்சட்டங் கள், அரசாணைகள் மற்றும் நிதித்தொகுப்புகள் அனைத்தும், விவசாய விளைபொருள் களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பது குறித்தோ மற்றும் வலுவான வேலைவாய்ப்பை அளிப்பது குறித்தோ மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பது குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படாமல், மாறாக வேளாண்மையைக் கார்ப்பரேட்மயமாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகின்றன. 

மீண்டும் அடிமை நிலைக்கு.....
மேலும் தொழிலாளர் வர்க்கத்தை மீண்டும் அடிமை நிலைக்குத் தள்ளும் விதத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்துசெய்துவிட்டு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்கு மாற்றஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. பிரதமர், விவசாய-வர்த்தகக் கார்ப்பரேட்டுகளின் பக்கம் சாய்ந்துகொண்டு, அவர்கள் பண்ணை விவசாயம் மூலமாகக் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருக் கிறார். மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில், அத்தியாவசியப் பொருள்கள் மீது ஊக வர்த்தகம் மற்றும் ஒப்பந்த விவசாய முறையை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்.  

இந்தப்பின்னணியில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம், மத்திய அரசு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்று கோரி இக்கடிதத்தை உங்களுக்கு எழுது கிறோம்.

கோரிக்கைகள்
1. வருமானவரி செலுத்தாத 23 கோடி குடும்பங்களுக்கு அடுத்த ஆறு மாத காலத்திற்கு, மாதத்திற்கு 7,500 ரூபாய் அளித்திட வேண்டும்.

2. சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை உத்தரவாதப்படுத்திட வலுவான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

3. வேளாண் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து,குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்திட, சட்டம் இயற்றிட வேண்டும். அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்.

4. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு 600 ரூபாய் வழங்கிட வேண்டும்.

அவசரச் சட்டங்களை விலக்கிடுக
5. மக்களின் உணவுப் பாதுகாப்பை அழித்திடும் விதத்திலும், விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கிடும் விதத்திலும் அமைந்துள்ள, 2020 ஆம் ஆண்டு விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதிசெய்துகொடுத்தல்) அவசரச்சட்டம், 2020ஆம் ஆண்டு விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தம் அவசரச்சட்டம்மற்றும் 2020ஆம் ஆண்டு இன்றியமையாப் பண்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம் ஆகிய மூன்று அவசரச் சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.  

6. தனியார்மயத்தினை ஊட்டி வளர்த்திடும், மின்கட்டணங்களை உயர்த்த வகைசெய்திடும் 2020ஆம் ஆண்டு மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவினையும் ரத்து செய்திட வேண்டும்.நாட்டின் அசாதாரண நெருக்கடி நிலைஉருவாகியிருக்கக்கூடிய இக்காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை உத்தரவாதப்படுத்தி டும் விதத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம். அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கத் தவறினால், அகில இந்திய விவசாயிகள் சங்கம், இதர விவசாயசங்கங்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களுடன் சேர்ந்து கோரிக்கைகளை வென்றெடு ப்பதற்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.  (ந.நி.)

;