இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா இன்று உலகம் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது 415 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. நேற்று 396ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 19 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 29 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 28 பேருக்கும், கர்நாடகாவில் 26 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், 18 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த நாட்டின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.