tamilnadu

img

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு... கால அட்டவணை வெளியீடு....

புதுதில்லி:
குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் முதல் நிலைத்தேர்வு , முதன்மை தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 4 அன்று நடைபெற்றது. இதற்கான முதன்மைத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி  8 ஆம் தேதி துவங்கி  9,10,16,17 என 5 நாட்கள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் முதன்மைத் தேர்வுக்கான கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ‘’முதல் நாள் மட்டும்ஒரு ஷிப்ட்டிலும் மீதமுள்ள நாட்களில் இரண்டு ஷிப்ட்டுகளிலும் முதன்மைத் தேர்வுநடக்கும். முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடக்கும்.கட்டுரைக்கான முதல் தாள் தேர்வு ஜனவரி 8 முதல் ஷிப்ட்டில் நடக்கும். ஜெனரல் ஸ்டடீஸுக்கான இரண்டாம் தாளின் நான்கு பிரிவுத் தேர்வுகளும் (I, II, III, IV) ஜனவரி9 மற்றும் 10-ம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும்.இந்திய மொழி மற்றும் ஆங்கிலம் தொடர்பான முதல் தாள் தேர்வு ஜனவரி 16 ஆம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளில் நடக்கும். விருப்பப் பாடத்துக்கான 1 மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு ஜனவரி 17-ம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளிலும் நடக்கும். கூடுதல் விவரங்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/TT-CSME-2020-Engl-061120.pdf இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.