tamilnadu

img

ஆந்திராவில் சட்ட மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திராவில் சட்ட மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
ஆந்திர சட்டமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்னதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவை மேலவையை கலைப்பதற்கான முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய சில முக்கிய மசோதாக்களை மேலவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.
இந்நிலையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருப்பதால் 3 தலைநகர் அமைக்கும் மசோதா நிறைவேறும். ஆனால், மேலவையில் அக்கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்களே உள்ளனர். 58 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்களும், 8 நியமன மற்றும் இதர உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 3 தலைநகர் மசோதாவை மேலவையில் தோற்கடிக்க வாய்ப்புள்ளது.  இதையடுத்து, மேலவையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட ஜெகன்மோகன் முடிவு செய்து, அதற்கான மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு வசதியாக, ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூட்டப்பட்டு, மேலவை கலைப்பு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர சட்டப்பேரவையில் இது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதும், அது மத்திய அரசுக்கு அனுப்பி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;