tamilnadu

img

“எங்களிடம் ஒன்றும் இல்லை எல்லாம் மத்திய அரசுதான்”

முதலமைச்சர் ஒப்புதல்

சென்னை,பிப்.18- நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் மனோதங்கராஜ்,“இந்திய குடிமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சவாலுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பேரவையில்  ஒரு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசோடு நல்ல உறவு இருந்து வருவதால் அதை பகைத்துக்கொள்ள மாநில அரசு விரும்பவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் ஆவேசத்துடன் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை.  எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை. அப்படி யாராவது பாதிக்கப்பட்ட ஒருவரை தமிழ்நாட்டில் அடையாளம் காட்ட முடியுமா?  என்று தேவையில்லாமல் ஆவேசமடைந்தார்.  அந்த சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் எங்களிடம் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது என்றார்.

குழப்பத்தில் அமைச்சர்....

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப்.18) கேள்வி நேரத்தின்போது துணை வினா எழுப்பிய  திமுக உறுப்பினர் சக்கரபாணி,“தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் மூன்றரை லட்சம் ரூபாய் வரை நகைக் கடனாக விவசாயிகள் பெற்று வருகின்றனர். ஆனால், நகைக் கடன் கோரும் விவசாயிகள் இனிமேல் தங்களது நிலத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்தால் மட்டுமே வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் நகைக் கடன் வழங்க வழங்கப்படும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்த உத்தரவால் விவசாயிகள் பாதிக்கப்படுவ தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் நலிவடையும் என்பதால் மாநில அரசு என்ன முடிவு செய்துள்ளது” என்றார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,“பிரதமர் மோடியின் இந்த உத்தரவால் விவசாயிகள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு பாதிப்பில்லாத விவசாய கடன் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர்,  தலைமை செயலாளர் மூலம் ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என்றார்.

சிரிப்பலை....

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன் வழங்கப்படுவதில்லை என்ற எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து 432 கோடி ரூபாய் கடன் கொடுத்து தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது என்றும் பணமதிப்பிழப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டுறவு வங்கிகள் தனது பணியை சிறப்பாக செயலாற்றியதாகவும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்றும்  குறிப்பிட்டார். அப்போது அமைதியாக இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களை பார்த்து ‘என்னப்பா கை தட்ட மாட்டிங்கலா’ என்றதும் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.