tamilnadu

img

புதுகை மாவட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு

புதுக்கோட்டை, ஏப்.20-புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தை நடத்தவேண்டுமென இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் ஆகியோர் தலைமையில் கட்கிகளின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமையன்று அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப்பெண்களை இழிவாகப் பேசி வெளியான வாட்ஸ் அப் ஆடியோ செய்தியால் பொன்னமராவதி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்.19) மிகப்பெரிய அளவிலான போராட்டம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொன்னமராவதி பகுதி மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திண்டுக்கல் மாவட்டம் கொட்டாம்பட்டி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் விரும்பத்தகாத சம்பவங்கள்நடைபெற்றன.


ஒற்றுமையாக வாழ்ந்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் இத்தகைய இழிவான ஆடியோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. மாவட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வாட்ஸ் அப்பில் பெண்களைப் பற்றி மிகவும் தரம்தாழ்ந்த உரையாடல் நிகழ்த்தப்பட்டுள்ளதால், போராட்டங்களில் பெருமளவிலான பெண்களும் பங்கேற்று தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இத்தகைய சூழலில், மாவட்ட நிர்வாகம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறுநடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதே நேரத்தில், மாவட்டத்தில் பெரும்பகுதினராக உள்ள இரு சமூகத்தினரிடையே சாதிய மோதல்ஏற்படும் நிலையைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமான ஆடியோ வெளியிட்ட நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இதனைப் பயன்படுத்தி மக்களின் உணர்வுகளைத் தூண்டி சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்கு தமிழகஅரசும், மாவட்ட நிர்வாகமும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;