tamilnadu

img

அனைத்துமே ஆட்சிமொழிகளாக்கப்பட முடியும் - எம்.பசவபுன்னையா

 தேசிய ஒருமைப்பாடும் மொழிக் கொள்கையும்

பொருளாதார - அரசியல் - சமூக மேம்பாடு பற்றி...

இந்திய ஒன்றியத்தின் பொருளாதார - அரசியல் - சமுதாய மேம்பாடு அடைவது எங்ஙனம்? நமது மக்களின் பொருளாதாரச் சார்புநிலை, பின்தங்கிய நிலை, தாழ்வுபடுத்தும் வறுமை ஆகியவற்றின் மீது இந்திய ஒன்றியத்தின் அனைத்து மக்களும் சேர்ந்து ஒன்றுபட்டுத் தாக்குவதன் மூலமே அந்த மேம்பாடு சாத்தியமாகும். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பத்தாவது இடத்தை வகிக்கும் நமது நாடு, தேசியச் செல்வ உற்பத்தியில், தனிநபர் சராசரியைக் கணக்கிடும்போது, உலகத்தின் கடைசி முப்பது நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறப்பது விபரீதமாகவே முடியும். வளர்ச்சியடைந்த பல்வேறு முதலாளித்துவ நாடுகளின் தனிநபர் சராசரி வருமானம் ரூபாய் இருபதாயிரத்திலிருந்து, ரூபாய் பத்தாயிரம் வரை இருக்கும்போது, இந்தியனின் சராசரி வருமானம் ரூபாய் ஐந்நூற்றி ஏழு மட்டுமே என்ற பரிதாபமான நிலையிலேயே இருக்கிறது. இது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றின் சராசரியை விடக்குறைவு. இந்திய யூனியனில் வாழும் ஒவ்வொரு மொழிக் குழு, ஒவ்வொரு தேசிய இனம், மற்றும் மதக்குழுக்கள் ஆகியவற்றின் உய்வு, இந்தியா முழுவதுமாக உயிர்வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது. ஏனெனில், நாட்டின் பல்வேறு மொழிவழி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரம் ஒன்றையொன்று சார்ந்ததாகவும், ஒன்றுக்கொன்று உதவுவதுமாகவே அமைந்துள்ளது. எந்தவொரு மொழி மாநிலத்தையும், மற்றவற்றிலிருந்து பிரிப்பது, அந்தக் குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டுமல்லாமல், நாடு முழுமைக்குமே கேடு விளைவிப்பதாகும். மேலோங்கி நிற்கும் இந்தக் காரணம்தான் இன்றைய இந்திய யூனியனின் மொழிப் பிரச்சனை பற்றிய அணுகுமுறையில் நம்மை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.

அரசின் மொழிக் கொள்கையும், திணிப்பு முயற்சியும்

நமது நாட்டில் ஏறத்தாழ அறுபது மொழிகள் உள்ளன. இவைகளைத் தவிர, பல்வேறு கிளை மொழிகளும் உண்டு.  இந்த மொழிகளில், நம் நாட்டு மக்கள் தொகையில் 90 சதம் மக்கள் பேசக்கூடிய 14 பெரிய மொழிகள் உள்ளன. நம் நாட்டு மக்களில் எந்தப் பிரிவினரும் சமஸ்கிருத மொழியைப் பேசாவிட்டாலும்கூட, அதையும் சேர்த்து மொத்தம் 15 மொழிகளை அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்த நிலைமையில், எந்த ஒரு மொழி பேசும் மக்களாவது தங்கள் மொழியை மற்ற மொழிகளைப் பேசும் மக்கள் மீது திணிக்க முற்படுவார்களானால், அது தேசிய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிப்பதாகும். மொழித்திணிப்பு என்ற பிரச்சனை எழுவது ஏன்? இந்தி பேசும் மக்களிடையேயுள்ள சில வெறியர்கள், இந்திய நாட்டுக்கு கட்டாயமாக ஒரு ஆட்சி மொழி வேண்டுமென்றும், அது இந்தியாகத்தான் இருக்க முடியுமென்றும், காரணம் அந்த மொழிதான் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இல்லா விட்டாலும் கூட, பெரிய அளவு எண்ணிக்கையினரால் பேசப்படும், புரிந்து கொள்ளப்படும் மொழி என்றும் வாதிடுகின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 343-வது பிரிவில் “இந்திய யூனியனுக்கு இந்தி ஆட்சி மொழியாக விருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை இந்தி வெறியர்கள் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் அவசியம் இல்லை என்பதையும், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 14 மொழிகள் அனைத்துமே ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட முடியும் என்பதையும் அவர்கள் முழுவதுமாக மறந்துவிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது மொழிகளுக்கு மட்டும் ஆட்சிமொழி என்ற சிறப்புச் சலுகை வழங்கப்படுவதால் ஆளும் மொழி பேசும் மக்கள், ஆளப்படும் மொழி பேசும் மக்கள் என்று மக்களை இரு கூறாக்கும் அபாயம், இந்திய அரசமைப்பிற்குள் அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை அவர்கள் முற்றிலுமாக மறந்துவிடுகிறார்கள்.

முஸ்லிம் அரசர்கள் ஆட்சியின்போது, பாரசீக மற்றும் உருது மொழிகளை, அரசவை மொழியென்றும், ஆட்சி மொழியென்றும் அறிவித்ததும், பின்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆங்கிலத்தை ஆட்சி மொழி என்று திணித்ததும், இந்தியாவில் அன்று எதேச்சதிகார, ஜனநாயக விரோத ஆட்சிகள் நீடித்திருந்த போது சாத்தியமாயிருந்தன.  அத்தகைய அரசமைப்பு, இந்தியத் துணைக் கண்டத்தின் மற்ற அனைத்து மொழிகளையும் புறக்கணித்து, அடக்கியாண்டது மட்டுமல்லாமல், நாட்டிலும் மற்றும் நாட்டு நிர்வாகத்திலும் அதன் விவகாரங்களிலும் பங்கு பெறுவதினின்றும், பின்பற்றுவதினின்றும் இந்த நாட்டைச் சேர்ந்த 99 சத மக்கள் தடுக்கப்பட்டனர். இவ்வாறு நம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமும், ஜனநாயக வாழ்வும், முற்றிலும் மறுக்கப்பட்டது. அத்தகைய எதேச்சதிகார ஆட்சி, பல்வேறு மொழி பேசும் மக்களின் பொருளாதார - அரசியல் - கலாச்சார  விருப்பங்களைப் புரிந்து கொள்ளாத நிலைக்கு இட்டுச் சென்றது. அது மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கும், ஆளப்பட்டவர்களுக்குமிடையில் தீர்க்கப்பட முடியாத பகைமைகளையும் வளர்த்தது.

உலக வரலாற்றை, குறிப்பாக கடந்த மூன்று நூற்றாண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்குவோமானால், ஒன்று புலப்படும். ஒன்று திரண்ட, நெருக்கமான தொடர்பு கொண்ட, ஒருங்கமைந்த, பல்வேறு மொழிகள் பேசும் பெருந்திரளான மக்களும், நிலப்பரப்புகளும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை பலவந்தமாக ஆட்சி மொழியாகத் திணிக்கும் முயற்சிகள், சீர் குலைவுக்கும், சீர்கேட்டிற்குமே இட்டுச் சென்றன. பல மொழிகள் பேசும் இந்திய யூனியனில் ஜனநாயகம் என்பதும், அதற்கு தனி ஓர் ஆட்சி மொழி என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும்.

6 கோடி மேற்கு வங்காளிகள், 2 கோடி ஒரியர்கள், 6 கோடி தெலுங்கர்கள், 6 கோடி தமிழர்கள், 2.5 கோடி மலையாளிகள், 2.5 கோடி கன்னடியர், 6 கோடி மராட்டியர் ஆகியோரைத் தவிர இந்தி பேசாத பல்வேறு மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கியது தான் இந்திய யூனியன்.  இப்படி பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் மீது, ஆட்சி மொழியென்று இந்தியைத் திணிப்பது, பிரிவினைவாதிகளுக்கும், சீர்குலைவுவாதிகளுக்கும் தான் வலுவூட்டுமேயன்றி, இந்திய ஒன்றியத்தில் வாழ்கின்ற பெருந்திரளான மக்ளின் ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உதவப் போவதில்லை. இந்தியே ஆட்சி மொழி என்று வாதிடுபவர்கள், இந்த உண்மையைப் புரிந்து கொள்வதேயில்லை. மொழிப் பிரச்சனை என்பது, இந்திய ஒன்றியத்தின் தேசிய இனப் பிரச்சனையுடன், பிரிக்க முடியாதபடி தொடர்பு கொண்டதாகும்.

நாளை தொடரும்...
 

தஞ்சையில் நடந்த சிபிஎம் மாநில மாநாட்டில் பசவபுன்னையாவுடன் அ.சவுந்தரராசன், பி.ஆர்.பரமேசுவரன், 
ஏ.கே.பத்மநாபன்.

;