புதுதில்லி, ஜூலை 11- கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பைக்குச் சென்று ஓட்ட லில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், 10 எம்எல்ஏக்களும் வியாழனன்று மாலை 6 மணிக்கு சபாநாயகரை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அவர்கள் ராஜினாமா செய்வது என்று விரும்பினால் மீண்டும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி னர். 10 எம்எல்ஏக்களுக்கும் உரிய பாது காப்பு வழங்குமாறு கர்நாடக டிஜிபிக்கு உத்தரவிட்டனர். சபாநாயகரும் எம்எல்ஏக்களை அனுமதித்து, அவர்கள் கூறுவதை கேட்டு, இன்றே முடிவெடுத்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
சபாநாயகர் முறையீடு
இதற்கிடையே, கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத் தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், தன்னை உடனடியாக முடிவெடுக்குமாறு, நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட்டதை ஒத்திவைக்க வேண்டும். இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, கர்நாடகா மற்றும் கோவா விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.