புதுதில்லி:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் தில்லி செங்கோட்டையைச் சுற்றியுள்ளபகுதிகளில் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து, போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்க தில்லி எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், தில்லியின் சிலபகுதிகளில் அரசு அதிகாரிகளின் உத்தரவுள்படி, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டவுடன் மீண்டும்சேவைகள் தொடங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல அரசின் உத்தரவுபடி வோடாபோன் நிறுவனமும் தில்லியின் சில பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.ஜியோ, பிஎஸ்என்எல் சேவைகளும் குறிப்பிட்டபகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன.மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வியாழன் காலை முதலே செங்கோட்டை பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தி வந்தனர். ஸ்வராஜ் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாட்டில் சட்டம் ஒழுங்குமோசமாக இருப்பதாகவும், நாட்டு மக்கள் மனதில் இன்றுபயம் பரவி உள்ளதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த சட்டத்தை விட்டுவிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.
ராமச்சந்திர குஹா கைது
உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதாக வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். ஒருசெய்தியாளரிடம் காந்தி குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, காவல்துறையினர் தன்னை கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார். “என்னை எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள்” என்று மெசேஜ் மூலம் அவர் தெரிவித்தார்.பெங்களூர் டவுன் ஹாலில் நடந்த போராட்டத்தில் ராமசந்திர குஹா கைதுசெய்யப்பட்டார். அவரைகைது செய்து அழைத்து சென்ற காட்சிகள் இந்தியாவின் களங்கமாக வெகு நாட்கள் இருக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் சேகர் குப்தா ட்வீட் செய்துள்ளார்.போராட்டத்தில் கலந்துகொண்ட பல பெண்களும்கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
2 பேர் பலி
கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். குல்பர்கா நகரத்திலும் பலர் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத்தில் சார்மினார் அருகேபோராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.