tamilnadu

img

ஆதார் கட்டாயமில்லை: சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல்

புதுதில்லி:
தனிநபர் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயமில்லை என்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதனன்று (ஜூன் 12) டெல்லியில் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்தும், அதில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “முத்தலாக் தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது. வரும் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.மேலும், மத்திய அமைச்சரவையில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது தவிர, எந்தத் திட்டத்துக்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோலவே மத்திய கல்வி நிறுவனங் களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. 7,000 ஆசிரியர் காலிப் பணி யிடங்களை இதன்மூலம் நேரடியாக நிரப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன்மூலம் ஜூலை 3ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலத்துக்கு ஜம்மு- காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சர்வதேச அளவில் மத்தியஸ்த மையமாக உருவாக்கும் முயற்சியாக, தில்லி சர்வதேச நடுவர் மன்ற மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியில் ‘சீர்திருத்தங்கள்’ ஏற்படுத்தும் நோக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் சீர்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது போலவே ஹோமியோபதி மத்திய குழுவுக்கான பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டித்தும், பல் மருத்துவச் சட்டத் திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்களைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

;