tamilnadu

img

அதானிக்கு முன்கூட்டியே தெரிந்த திவால் செய்தி? ‘யெஸ்’ வங்கியுடனான பரிவர்த்தனையை பிப்.25 அன்றே நிறுத்திவிட்டது

புதுதில்லி:
‘யெஸ்’ வங்கி திவாலாகும் நிலைக்குப் போனதால், அந்த வங்கியின் நிர்வாகத்தை மார்ச் 5-ஆம் தேதி ,ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வங்கியின் நிதி நிலைமையை அறியாமல் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் பலர், தற்போது தேவைக்குப் பணம் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ந்நிலையில், ‘யெஸ்’ வங்கி திவாலாகப் போகிறது என்ற விஷயம், அதானி நிறுவனத்திற்கு முன்கூட்டியே தெரிந்து இருந்ததாகவும், அதனடிப்படையில் ‘யெஸ்’ வங்கியில் பணம் போட வேண்டாம் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து, தகவல் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானிக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனம், இந்தியாவின் பல நகரங்களில் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில், எரிவாயு பில் தொகைக்கான காசோலைகளை, வழக்கமாக ‘யெஸ்’ வங்கியின் ஏடிஎம் மூலமாக, அதானி நிறுவனம் பெற்று வந்தது. ஆனால், கடந்த 25-ஆம் தேதி அதானி எரிவாயு நிறுவனம் திடீரென தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதில், வாடிக்கையாளர்கள், தங்களின் எரிவாயு பில் தொகைக்கான காசோலைகளை ‘யெஸ்’ வங்கி ஏடிஎம் மூலம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ‘யெஸ்’ வங்கியின் சேவையை நிறுத்திக் கொண்டதால், ஆக்சிஸ், ஐடிபிஐ, ஐசிஐசிஐ, காலுபூர் மற்றும் எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்களை பயன்படுத்துமாறும் கூறியுள்ளது.

இதுதான் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. ‘யெஸ்’ வங்கி பரிவர்த்தனையை அதானி நிறுவனம் திடீரென கைவிட்டதற்கான காரணம் என்ன? அந்த வங்கி திவாலாகப் போகிறது என்று முன்கூட்டியே தெரிந்து விட்டதா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. ‘யெஸ்’ வங்கியின் பணமெடுப்பு கட்டுப்பாடுகள் அமலாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, குஜராத்தைச் சேர்ந்த அரசு காண்ட்ராக்ட் நிறுவனம் ஒன்றும், இதேபோல சுமார் ரூ. 265 கோடியை அவசர அவசரமாக திரும்பப் பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

;