tamilnadu

img

கட்சிக் கல்விக்கு ஒரு வழிகாட்டி முகாம் - கே.என்.கணேஷ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்கத்தா சிறப்பு மாநாடு (பிளீனம்) கட்சி உறுப்பினர்களின் அரசியல் உணர்வை மேம்படுத்திட வேண்டும் எனப் பணித்துள்ளது. நிகழ்காலத்தின் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாட்டை மக்களிடையே கொண்டு செல்வதற்கு முதலில் கட்சி உறுப்பினர்களின் அரசியல் தரம் உயர வேண்டும் எனவும் அதற்காக அவர்களுக்கு அரசியல் கல்வி போதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது விரைவாக செய்யப்பட வேண்டும் என்பதையும் சிறப்பு மாநாடு வலியுறுத்தியது. ஆளும் வர்க்கங்களின் சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடுவதற்காக நடுத்தர வர்க்க அறிவுசார் கற்றறிந்தோரை கட்சியை நோக்கி ஈர்ப்பதன் அவசியத்தையும் சிறப்பு மாநாடு சுட்டிக்காட்டியது. 

இந்துத்துவாவின் அரசியல் மேலோங்கியுள்ள இந்த காலகட்டத்தில் இது மிக முக்கியமானது என்பது கூறத்தேவை இல்லை. அரசின் சித்தாந்தமாக இந்துத்துவா ஆகியுள்ள பின்னணியில் ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகளும் ஊடகங்களும் எளிய மக்களை அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைக் கூட சிந்திக்கவிடாமல் அவர்களை இந்துத்துவா கருத்தியலை நோக்கி திருப்பிவிடும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய தருணத்தில் கட்சி உறுப்பினர்களின் அரசியல் தரம் உயர்த்துவது என்பது மிகப் பெரிய அவசர கடமையாக முன்வந்துள்ளது. கொல்கத்தா சிறப்பு மாநாட்டின் இந்த முன்னோக்கு வழிகாட்டுதலின் அடிப்படையில் கட்சியின் கேரள மாநிலக்குழு அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை ஏழு நாள் கட்சிப் பள்ளி பயிலரங்கத்தை திருவனந்தபுரத்தில் உள்ள இ.எம்.எஸ். அகாடமியில் நடத்தியது. கேரளத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 158 தோழர்கள் கலந்து கொண்டனர். முதல்வரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

பயிலரங்கம் கற்பித்த வகுப்புகள் 

  • மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படை கோட்பாடுகள், 
  • கட்சியின் திட்டம் முன்வைக்கும் பல்வேறு கருத்தாக்கங்கள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்குதல். 
  • கட்சி அமைப்பின் (ஸ்தாபன) கோட்பாடுகள் 

-ஆகியவை குறித்து தெளிவான புரிதலை உருவாக்கும் விதமாக கட்சிப் பள்ளியின் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டது.  பாடத்திட்டம் 24 தலைப்புகளை கொண்டதாக இருந்தது. 24 தலைப்புகளும் 6 தொகுதிகளாக வரையறுக்கப்பட்டன. இவை கீழ்கண்டவாறு உருவாக்கப்பட்டன:

தொகுதி 1: இயக்கவியல் பொருள் முதல்வாதம்

அ) இந்தியாவில் கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும்
ஆ) நிகழ்கால அறிவியலின் வளர்ச்சி
இ) இயக்கவியலின் கோட்பாடுகள்
ஈ) மார்க்சிய அறிவு ஆய்வியல் (Marxist epistemology)
 

தொகுதி 2: வரலாற்றியல் பொருள் முதல்வாதம்

அ) நவீன சமூக சிந்தனையின் வளர்ச்சி.
ஆ) மார்க்சியத்தின் வரலாற்று வேர்கள்.
இ) மார்க்சிய வரலாற்றுப் பார்வை.
ஈ) “புரட்சி” பற்றிய மார்க்சிய கோட்பாடு.
 

தொகுதி 3: முதலாளித்துவமும் கம்யூனிஸ்ட் இயக்கமும்

அ) வணிக மூலதனத்திலிருந்து முதலாளித்துவம் உருவாதலும் நவீன காலனியாதிக்கமும்
ஆ) நிகழ்கால முதலாளித்துவம்
இ) கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்து சோசலிச புரட்சிகள் வரை- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு.
ஈ) நிகழ் கால போக்குகள்.
 

தொகுதி 4: இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு

அ) இந்திய சமூகத்தின் வரலாற்று வேர்கள்.
ஆ) இந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி.
இ) இந்திய ஆளும் வர்க்கங்களின் உருவாக்கம்.
ஈ) இந்தியாவில் 1964 வரை கம்யூனிச இயக்கம்.
 

தொகுதி 5: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) திட்டம்

அ) கட்சித் திட்டம் உருவாக்கத்தில் சித்தாந்த விவாதங்கள்.
ஆ) இந்திய புரட்சி குறித்த வர்க்கப் பார்வை.
இ) கட்சித் திட்டம் அடிப்படையிலான புரிதலில் 1964 முதல் இன்று வரை உருவான மாற்றங்கள்.
ஈ) கட்சியின் அரசியல் உத்தியின் பரிணாம வரலாறு.
 

தொகுதி 6: கட்சி அமைப்பின் கடமைகள்

அ). கட்சி அமைப்பின் கோட்பாடுகள்.
ஆ). கட்சியும் வெகு மக்கள் அமைப்புகளும்.
இ). கேரளாவில் சமூக அரசியல் போக்குகள்.
ஈ). மக்களிடையே கட்சிப் பணி.
 

ஒவ்வொரு தொகுதியும் நான்கு வகுப்புகளாக பிரிக்கப்பட்டன. நான்கு வகுப்புகள் வெவ்வேறு தோழர்களால் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம் என்பது கால அளவு. ஒவ்வொரு தொகுதியும் முடிந்த பிறகு அந்த தொகுதி முழுமைக்கான (4 வகுப்புகளுக்கும் சேர்த்து) குழு விவாதம் நடந்தது. வகுப்பின் கால அளவு மிகவும் துல்லியமான தன்மையுடன் இந்த பயிலரங்கத்தின் இயக்குநர் எம்.வி. கோவிந்தன் அவர்களால் முறைப்படுத்தப் பட்டது. ஒரு நாளைக்கு ஒரு தொகுதி எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆறு நாட்களில் ஆறு தொகுதிகள் முடிக்கப்பட்டன. ஒவ்வொரு தொகுதியின் கீழ் உள்ள நான்கு வகுப்பாசிரியர்களும் இணைந்து பதில் அளிக்கும் குழுவாக உரு வாக்கப்பட்டது. குழு விவாதத்தில் உருவான கேள்விகளுக்கு ஆசிரியர்களின் இந்த குழு பதில்களை அளித்தது.  இப்பயிலரங்கில்,  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ‘இந்திய சமூகத்தில் வர்க்கமும் சாதியும்’ என்ற தலைப்பிலும் பிருந்தா காரத் ‘பெண்ணிய பிரச்சனை’ குறித்தும் விசேட உரைகள் நிகழ்த்தினர். இந்த இரண்டு உரைகளும் மிக ஆழமான விவாதங்களை பங்கேற்பாளர்களிடம் உருவாக்கியது.

பங்கேற்பாளர்களின் புரிதல் அதிகரித்ததா  என்பதை அறிய தேர்வு!

நான்கு ஆவணங்கள் பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்பட்டன. அவை:
 

1.அனைத்து வகுப்புகளுக்கும் உரிய குறிப்புகள் மற்றும் பிரகாஷ் காரத் / பிருந்தா காரத் சிறப்பு உரைகள்.
2.கட்சித் திட்டத்தை விளக்கும் ஆவணங்கள்
3.கட்சி மற்றும் வெகு மக்கள் அமைப்புகள் குறித்த மத்தியக் குழுவின் ஆவணங்கள்
4.வரலாற்றியல் முதல்வாதம் குறித்த மார்க்ஸ்/ஏங்கெல்ஸ்/லெனின் ஆகிய மார்க்சிய ஆசான்களின் படைப்புகள்.

 

இன்னொரு முக்கிய அம்சம், பங்கேற்பாளர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு ஆகும். ஒவ்வொருவரும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றனர் என ஒப்பீடு செய்யப்படும் அடிப்படையில் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக எடுக்கப்பட்ட வகுப்பின் உள்ளடக்கம் குறித்த பங்கேற்பாளர்களின் திறன் மற்றும் புரிதலில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அரசியல் மதிப்பீடு செய்யப்பட்டது.

மதிப்பீடுக்கு கீழ்கண்ட மூன்று கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன:

1. எத்தகைய தகவல்களை தோழர்கள் கற்று கொண்டனர்
2.பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் அரசியல் நிலைபாடு குறித்த தோழர்களின் கூர்மையான சரியான புரிதல்.
3.இயக்கவியல் மதிப்பீடுகள் குறித்த தோழர்களின் திறமை.
 

வகுப்புக்கு முன்பும் வகுப்புக்கு பின்பும் என இரண்டு முறை இந்த மதிப்பீடு செய்யப்பட்டது. வகுப்புக்கு பின்பு பெரும்பான்மையான தோழர்களிடம் முன்னேற்றம் தெரிந்தது. பெண் பங்கேற்பாளர்கள் மிக சிறப்பாகவும் மிக அதிகமாகவும் தமது புரிதலை வெளிப்படுத்தினர். இது மிகவும் ஊக்கம் தருவதாக அமைந்தது. 

புதிய முயற்சி! புதிய அனுபவம்!

இன்னொரு முக்கிய அம்சம் ஒவ்வொரு நாள் காலையும் 6 மணிக்கு யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன. பயிலரங்க இயக்குநர் சுய கட்டுப்பாடு மற்றும் உடல் நலம் மற்றும் வலிமை குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  

நவம்பர் 3 இரவு பயிலரங்கத்தில் தோழர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தோழர்கள் பாடல்/கவிதை/நடனம்/ நடிப்பு ஆகியவை குறித்து தமது திறமைகளை வெளிப்படுத்தினர். மிகவும் ஊக்கம் தரும் அம்சம் என்னவெனில் பங்கேற்பாளர்களுக்கு இடையே உருவான ஒற்றுமையும் தோழமையும் ஆகும்.

பயிலரங்கத்தின் முடிவில் பங்கேற்பாளர்கள் வகுப்புகள் குறித்த தமது மதிப்பீடுகளை கொடுத்தனர்.  புதிய முயற்சி குறித்து தோழர்கள் பாராட்டினர். பயிலரங்கத்தின் முக்கிய வகுப்புகளை கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு செல்ல ஏற்றுக் கொண்டனர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி மற்றும் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை ஆகியோர் பயிலரங்கம் முழுவதும் இருந்து தேவைப்படும் தருணங்களில் தலையிட்டு வழிகாட்டினர். 

ஒட்டு மொத்தமாக கட்சியின் இந்த பயிலரங்கம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருந்தது. கட்சி கற்றலுக்கு புதிய உற்சாகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த பயிலரங்கத்தில் கற்றுக் கொண்டதை மக்களிடம் தொடர்புகளை உருவாக்கி அவர்களிடம் கொண்டு செல்வதற்கு உற்சாகம் அளித்துள்ளது. கட்சிக் கல்வி குறித்து இதே உற்சாகத்தை இனி வரும் காலங்களிலும் முன்னெடுத்து செல்வது என தோழர்கள் உறுதி கொண்டுள்ளனர்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில்: அ.அன்வர் உசேன்