tamilnadu

img

மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட 64 லட்சம் மூத்த குடிமக்கள்... ஓய்வூதியம் ரூ.9000 ஆக்குக: பி.ஆர்.நடராஜன் எம்.பி.,

புதுதில்லி:
நாடு முழுவதும் இபிஎஸ் 1995 எனும் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் உள்ள 64 லட்சம் மூத்த குடிமக்கள் தொடர்ந்து அரசாங்கத்தால்புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர்களது மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். 

இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது; இபிஎஸ் 1995 திட்டத்தின் கீழ் 64 லட்சம் பேர் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த அற்ப தொகையை சார்ந்து உள்ளனர். ஓய்வூதிய தாரர்களில் 25% பேர் மாதத்திற்கு ரூ.1000க்கும் குறைவாகவும் மற்ற 75% பேர் மாதாந்திரஓய்வூதியம் ரூ .1000 மற்றும் அதற்கு மேலும்பெறுகிறார்கள். நாட்டில் நிலவும் பணவீக்க நிலைமை குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதால், குடும்பத்தின் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சொற்ப தொகை போதுமானதாக இல்லை. இது 64லட்சம் ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால், நாம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கணக்கில் சேர்த்தால், இந்த எண்ணிக்கை சுமார் 2.5 கோடி மக்களாக ஆகிறது. இந்த சிக்கல்களை அவசரமாக கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இவர்களுக்கு ரூ .3000 இடைக்கால நிவாரணத்தை மாத ஓய்வூதியமாக நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது. ஆனால், அது அரசாங்கத்தால் இறுதி செய்யப்படவில்லை. உடனடியாக அது அமலாக்கப்படவேண்டும்.

மேலும் விலைவாசி உயர்வின் தாக்கத்தின் காரணமாக, நியாயமானதாக கருதப்படும் அவர்களது கோரிக்கையான, பஞ்சப்படியுடன் கூடிய, ரூபாய் 9000 த்தை குறைந்த பட்ச ஓய்வூதியமாக நிர்ணயிப்பதை, பரிசீலனையில் கொள்ள வேண்டும்.இபிஎஸ் -95 இன், கீழ் பஞ்சப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் , ரூ .9000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும்; 2013 ஆம்ஆண்டு, நாடாளுமன்றக் குழுபரிந்துரையின் படி, இடைக்கால நிவாரணம் ரூ .3000  மாத ஓய்வூதியமாக தரப்பட வேண்டும்; பிப்ரவரி 2015 இல் சிபிடியின் பரிந்துரையின் படி, தங்களின் 1/3 பங்கு பணத்தை கம்யூட்(Commute) செய்து, அதை 100 மாத தவணையில் திருப்பி செலுத்தியவர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை திரும்பக் கிடைக்க வேண்டும்; முந்தைய அரசாங்கத்தால் 2018 ஆம் ஆண்டில் ஒருதலைப்பட்ச மாக திரும்பப் பெறப்பட்ட சலுகைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என ஓய்வூதி யர்கள் சார்பில் அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறியுள்ளார்.

;