புதுச்சேரி, மே. 31- புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: புதுச்சேரியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அதில் ஒருவர் ஜிப்மர் மருத்துவ மனையில் கோவிட் பிரிவில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஆவார். புதுவையில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை. மற்றொருவர் ஜிப்மரில் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண் ஆவார். மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுவையில் மொத்தம் இதுவரை 70 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதியுள்ளவர்களில் 36 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 பேர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் சேலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரியில் ஏற்கனவே 13 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலப்பகுதியாக உள்ளன. தற்போது புதியதாக 7 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஞாயிறன்று ஒரு இடம் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது 19 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரியில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லாமல் இருந்தது. பின்னர் ஒன்று, இரண்டு என சிலருக்கு மட்டும் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தினசரி 4, 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற் போது அதிகபட்சமாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.