tamilnadu

img

மக்களை மீண்டும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசு.... நெடுவாசல் அருகே ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்பு.... பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு....

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே கருக்காக்குறிச்சி வடதெருவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒன்றிய அரசு விடுத்திருக்கும் ஏல அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில்ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் படும் என ஒன்றிய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மற்றும் அதனை சுற்றிய கிராம மக்கள் தொடர்ந்து 21 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்தது. அதன் விளைவாக அப்பகுதி மக்களின் அனுமதியின்றி ஒருபோதும் இத்திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்த மாட்டோம் என ஒன்றிய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது.

மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டவர்கொல்லை, வடகாடு, வாணக்கன்காடு, கருக்காகுறிச்சி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை எண்ணெய்க் கிணறுகளையும் அகற்ற வேண்டும் என அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ், இதுகுறித்து சம்பந்தப்பட்டஓஎன்ஜிசி நிறுவனத்திடம் பேசி 9 மாத காலத்திற்குள் ஐந்து இடங்களில் உள்ள எண்ணெய் கிணறுகளும் அப்புறப்படுத்தப்படும் என்று எழுத்துப் பூர்வமான வாக்குறுதி அளித்திருந் தார். ஆனால் இதுவரை அந்த எண்ணெய் கிணறுகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து கிராம சபைக் கூட்டங்களில் தொடர்ந்து விளை நிலத்தை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்றும்காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வந்தது.அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இதனால் விவசாயத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படாது என்றுவிவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு இருந்த நிலையில், தற்போது புதுக்கோட்டைமாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காகுறிச்சி வடதெரு ஊராட்சிக்குட்பட்ட வட தெருவில் 463 சதுர கிலோ மீட்டருக்குஎரிவாயு எடுப்பதற்கு ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை கடந்த 10 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கருக்காகுறிச்சி வடதெரு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தபிறகும் அந்த பகுதியில் விளைநிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும், இந்த திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த விடமாட்டோம். இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். இது ஒரு தவறான திட்டம் என்று ஒன்றியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஞாயிறன்று வடதெரு அருகே உள்ள கோட்டைக்காடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சோதனைக்காக போடப்பட்டுள்ள எண்ணெய் கிணறு பிளாண்ட் மீது ஏறி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாதுஎன்றும் உடனடியாக தமிழக அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;