tamilnadu

img

பாஜகவின் நோக்கம் நாடு முழுமைக்கும் ஒரே ஆரியக் கலாச்சாரம் கொண்டு வருவது தான் ப.சிதம்பரம் பேச்சு

பொன்னமராவதி, ஏப்.15- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகேபிரச்சார பொதுக்கூட்டம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.அடைக்கலமணி தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது, ஈவேராபெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், தோழர்கள் ஜீவா, பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், காயிதே மில்லத் போன்றோர்தான் தமிழ் சமூகத்தை அமைத்து தந்தவர்கள். இவர்கள் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்களாக இருந்தாலும் வெவ்வேறு காலங்களில் ஆட்சிப் பொறுப்புகளில் இல்லாமல் இருந்தாலும் இவர்களை எல்லாம் ஒன்றாக ஒரு சங்கிலி இணைத்தது, அந்த சங்கிலிதான் தமிழர். இந்த பெரியவர்கள் நமக்கு கற்றுத் தந்தபாடங்கள் என்ன? தமிழனுக்கு அடையாளம்என்ன? சுயமரியாதை இல்லாதவன் தமிழனாக இருக்க முடியாது. சுயமரியாதை இல் லாமல் வாழ முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, எம்மதமும் சம்மதம் என்கிற பரந்த மனப்பான்மை, ஜாதி வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மொழிப்பற்று, பெண்களுக்கு சொத்துரிமை இதையெல்லாம் தமிழினத்தை இந்தியாவிலேயே தனிமைப்படுத்தி அடையாளப் படுத்தி காட்டுகிறது.

இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தலில் வென்றுமுதல்வர், துணை முதல்வராக வரவில்லை.கட்சியை யார் கைப்பற்றுவது என்பதற்காக போட்டி போடுகிறார்கள். கட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் தான் போட்டியே தவிர தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி தர வேண்டும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. ஆர்எஸ்எஸ்என்பது நமது பகுத்தறிவுக்கு நேர் எதிரானஇயக்கம். அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸின் பிள்ளை தான் பாரதிய ஜனதா கட்சி, மேட்டுக்குடிகளின் கட்சி. பாஜக அவர்களுடைய நோக்கம் இந்தியா முழுமைக்கும் ஒரே ஆரியக் கலாச்சாரம் கொண்டு வருவது தான். இதைஎப்போதும் தமிழினம் ஏற்றுக் கொள்ளாது.இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி மீது எதிர்ப்பு உணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. காங்கிரஸ்காரர்களுக்கு பெரியார் தான் பாட்டன். பெரியாரை செருப்பால் அடிப்பேன் என பேசிய மனிதர் உங்கள் மக்கள் மத்தியிலே வாக்குகள் கேட்டு வந்தால் என்னபதில் சொல்லப் போகிறீர்கள். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். இந்த பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;