tamilnadu

img

நீட் தேர்வு பிரச்சனையால் மற்றொரு மாணவி தற்கொலை.... நீதி கேட்டு வாலிபர், மாதர், மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
நீட் தேர்வு பிரச்சனையால் நிகழ்ந்த மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் அகியஅமைப்புகளின் சார்பாக ஆலங்குடியில்செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டி-களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகள்ஹரிஷ்மா(17). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இவ் வாண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். ஹரிஷ்மா சிறுவயது முதலேயே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியின் மூலமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ்மாவுடன் படிக்கும்சக மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்துள்ளது, ஹரிஷ்மாஆன்-லைனில் ஹால் டிக்கெட் எடுப்பதற்கான ஐடியை மறந்து விட்டதாக கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை மாணவி தொடர்பு கொண்டபோது சரியான வழிகாட்டல் இல்லை எனக் கூறப்படுகிறது. ஐடி-யைக்கூட குறித்து வைக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டாயே! என மகளிடம்பெற்றோரும் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், தனது மருத்துவக் கனவுகலைந்துவிடுமோ என்ற மன உளைச் சலில் வீட்டில் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை கடந்த 29 ஆம் தேதி குடித்துள்ளார். உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். யாருடைய அழுத்தத்தின் காரணமாகவோ தீராத வயிற்று வலியை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக உண்மையை மறைத்து ஆலங்குடி போலீசாருக்கு பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்படியே போலீசார் வழக்குப் பதிவுசெய்திருந்தனர்.இந்நிலையில் செவ்வாயன்று இரவுமாணவிக்கு ஹால் டிக்கெட் வராத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகதகவல் வெளியானது. மருத்துவ கனவோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவியின் மரணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்றுவரும் குளறுபடியால் மாணவர்களின் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு வருவதோடு, தொடர்ந்து அது உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, உயிரிழந்த மாணவியின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். மாணவிக்கு ஹால் டிக்கெட்பெற்று தர நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்துவரும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் எனவலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சிபிஎம் கண்டனம்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறுகையில், ஏழை, எளிய,ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிகபட்ச கனவு, தங்கள் பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். சிறு வயதுமுதலே ‘நீ படிச்சு பெரிய டாக்டரா வரணும்’ என அறிவுறுத்தியே பெற்றோர்கள் வளர்க்கின்றனர். அப்படியான லட்சியத்துடன் குறிப்பிட்ட மாணவ, மாணவிகள் வளர்ந்து வருகின்றனர். அப்படி கிராமப்புறத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய குடும்பத்திலிருந்து ஏராளமானோர் மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர்.

இதற்கெல்லாம் கொள்ளி வைத் தார்போல வந்துள்ளது நீட் தேர்வு. அனிதாவில் தொடங்கி தற்பொழுது ஹரிஷ்மா வரை பல உயிர்களை நீட் தேர்வு காவு வாங்கியுள்ளது. எனவே, நீட் தேர்வை தமிழகத்திலிருந்து முற்றிலுமாக அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் தற்கொலை குறித்து தீவிரவிசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

;