tamilnadu

img

பிஎம் கேர்ஸ் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

நாக்பூர்:
பிரதமர் நிவாரண நிதியம் (Prime Minister’s Relief Fund - PMRF) இருக்கும் போது, கொரோனா நிவாரண நன்கொடைகளுக்காக, மோடி அரசு. ‘பிஎம் கேர்ஸ்’ (PM CARES FUND) என்ற பெயரில் துவங்கிய நிவாரண நிதியம் ஒரு மர்ம அமைப்பாக மாறியிருக்கிறது. பிரதமர் மோடியைத் தலைவராகவும், உள்துறை, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும் ‘பிஎம் கேர்ஸ்’ அமைப்பு, அதன் வரவு - செலவுக் கணக்குகளை வெளியில் சொல்லாது; சிஏஜி (CAG) தணிக்கைக்கும் உட்படாது என்று கூறப்படுவதால், எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் இதன்மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், “பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரதமர் மோடி, மற்றும் 3 உறுப்பினர்கள் தவிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் உட்பட கூடுதலாக 3 உறுப்பினர்களை நியமித்து, பொதுநல அறக்கட்டளையாக செயல்படுத்த வேண்டும்; இதில் திரட்டப்படும் நிதியை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும்; அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியி்ல் அந்த அறக்கட்டளையின் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என வழக்கறிஞர் அரவிந்த் வாக்மாரே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.பி. சுக்ரே, ஏ.எஸ். கிலோர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அணில் சிங் ஆஜாராகினார்.

அவர் வாதிடுகையில், “இதேபோன்ற ஒரு மனு கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் இதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்ஆனால். நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். அத்துடன், “பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து, எந்தெந்த நிவாரணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றே மனுதாரர் கேட்டுள்ளார். எனவே இன்னும் இரு வாரங்களுக்குள் அதற்கான பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசு ‘பிஎம் கேர்ஸ்’ கணக்கு விவரங்களை அளிப்பதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்பினால், அதைப் பிரமாணப் பத்திரமாக அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

;