tamilnadu

img

பிற்படுத்தப்பட்ட மக்களை மத்திய பாஜக அரசு பழிவாங்குவது ஏன்?

மருத்துவப் படிப்பிற்கான இடஒதுக்கீடு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

 இந்திய சமூகத்தில் வர்ணாசிரம அதர்மத்தின் கொடுமையால் சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்கும் இடஒதுக்கீட்டு கொள்கையினை மத்திய பாஜக அரசு அமலாக்க மறுப்பதின் மூலம், இம்மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையை தட்டிப் பறிக்கிறது.  தாங்கள் இந்துக்களின் கட்சி என்று பறைசாற்றிக் கொள்ளும் பாஜக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இந்து மக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

சென்னை, ஜூலை 24- மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் பிற்படுத்தப்பட்ட மக்களை மத்திய பாஜக அரசு பழிவாங்குவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.   இதுதொடர்பாக  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள விரிவான அறிக்கை வருமாறு: 

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையில் தொடர்ந்து மத்திய பாஜக அரசு சண்டித்தனம் செய்து வருகிறது. இதேபோல ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையை முழுமையாக அமல்படுத்த மறுத்து வருகிறது. உதாரண மாக, 2015 முதல் 2019 ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்தம் உள்ள 25,007 இடங்களில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு மொத்தம் 8605 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் 12,379 இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சற்றேறக்குறைய 3774 மாணவர்களது கல்வி வாய்ப்பு பறிபோய்விட்டது.

இதே அணுகுமுறையைத் தான் மருத்துவப் படிப்பில் மாநிலங்கள் வழங்கும் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. உச்சநீதிமன்றம் 1986 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் மாநிலங்களிலிருந்தும் மத்திய கல்வி நிறுவனங்களிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களை பெற்று அகில இந்திய தொகுப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.,   மாணவர்களுக்கு நீண்ட காலமாக இட ஒதுக்கீடு வழங்கப்பாடாத நிலையில், 2006 ஆம் ஆண்டு அபயநாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஜூலை 27ல் தீர்ப்பு

ஆனால் இப்போது வரை ஓ.பி.சி., மாணவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான ஓ.பி.சி. மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் மேற்கண்ட அகில இந்திய தொகுப்பில் தமிழகத்திலிருந்து வழங்கப்படும் இடங்களுக்கு  தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு சட்டம் 1996ன் படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. வழக்கின் தீர்ப்பு ஜூலை 27 ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் சாரம்

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாக்குமூலத்தின் ஒட்டுமொத்த சாரம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், அப்படியே வழங்கினாலும் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தான் வழங்க முடியும் என்று கூறியதுடன்,  மேலும் ஒருபடி சென்று ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு (சலோனிகுமார்) உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுதாரர்கள் உச்சநீதி மன்றத்தில் தான் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது எனவும் அந்த வாக்குமூலத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் அதிரடியான வாக்குமூலத்தை பார்த்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் சற்று அதிர்ச்சி அடைந்து உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன வருகிறது என பார்த்து பிறகு விசாரிக்கலாம் என்ற அடிப்படையில் வழக்கை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

டி.கே.பாபு வழக்கு

இதற்கிடையில் டி.கே.பாபு என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமார் வழக்கிற்கும், சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பினை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என 13.07.2020 அன்று உத்தரவிட்டது.   இதன் மூலம் மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் தவிடு பொடியாக்கியது. இதன் பிறகாவது மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கில் நியாயமான முறையில் நடந்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பது வேதனை அளிப்பது மட்டுமல்ல, மத்திய அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது.மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 17.07.2020 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இடமில்லை எனவும், அப்படி இட இதுக்கீடு வழங்க வேண்டுமானால் உச்சநீதிமன்றம் மட்டுமே வழங்க முடியும் என வாதிட்டனர். இதையே அடுத்த இரண்டு நாளில் வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

யார் நலனுக்காக?

1     மத்திய அரசின் வாதப்படி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாகத் தான் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு செய்ய முடியும் என்பது உண்மையானால், உச்ச நீதிமன்றமே சென்னை உயர்நீதிமன்றத்தை இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கலாம் என உத்தரவிட்டது தவறா? உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்ட பின்னரும் மீண்டும் பழைய பல்லவியையே மத்திய அரசு திரும்ப திரும்பப் பாடுவது யார் நலனுக்காக?

2     உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீட்டை அமலாக்க முடியும் என வாதிடுகிற மத்திய அரசு, அவர்கள் தாக்கல் செய்த வாக்கு மூலத்திலேயே இதை மறுத்துள்ளனர். தங்களது வாக்குமூலத்தில் “மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டம் 2006-ன் படி” ஓ.பி.சி. பிரிவினருக்கும்,  அதேபோல 2019 ஆம் ஆண்டு மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய இடத்தில் உள்ள ஏழைகளுக்கு 10 சதமான இட ஒதுக்கீட்டையும் அமலாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த இடஒதுக்கீட்டை அமலாக்கும் படி உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பையும் சொல்லவில்லை. மத்திய அரசின் ஆணையின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடுகள் அமலாக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும் போது ஓ.பி.சி.க்கான இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என வாதிடுவதன் நோக்கம் என்ன என்பதே கேள்வி?

உள்ளதையும் பறித்து...

3     மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளில் இடஒதுக்கீட்டு கொள்கையை எவ்வாறு அமலாக்க வேண்டுமெனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகள் 5(4), 9(7) ஆகிய விதிகளின் படி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கையையே அமலாக்கிட வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இந்த விதிகளில் அகில இந்திய தொகுப்பு இடங்கள் அல்லது மாநில இடங்கள் என பாகுபாடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் மத்திய அரசு இந்த விதிகள் அகில இந்திய தொகுப்பிற்கு பொருந்தாது, இது மாநிலங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டும் தான் பொருந்தும் என அடாவடியாக வாதிட்டு வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதியின்படி மாநிலங்கள் வழங்கி உள்ள அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை செயல்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. இதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 50 சதமான இட ஒதுக்கீடும் பட்டியலினத்தவர்களுக்கான 18 சதம், பழங்குடி மக்களுக்கான 1 சதம் இடம் கிடைப்பதற்கு சகல வாய்ப்பும் உள்ளது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீட்டினை அமலாக்குவதில் கூட மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு தமிழ்நாடு இடஒதுக்கீட்டின் படி கிடைக்க வேண்டிய 18 சதமானத்தை, 15 சதமானமாக குறைத்தே அமலாக்கி வருகிறது.

4     பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிப்படி 27 சதமான இடங்களை வழங்கலாம் எனவும், அப்படி வழங்குவதால் மொத்த இட ஒதுக்கீடு 50 சதமானத்திற்கு மேலே  போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது மத்திய கல்வி நிறுவனங் களில் எஸ்.சி. - 15,எஸ்.டி.-7.5, ஓ.பி.சி. - 27, இ.டபிள்யூ.சி. - 10  ஆக மொத்தம் 59.5 சதமான இடஒதுக்கீட்டினை அமலாக்கி வருகிறது. இதே நியாயம் அகில இந்திய தொகுப்பில் உள்ள மாநிலங்கள் அளிக்கும் இடங்களில்  ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்?

5     2006ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இடஒதுக்கீடு சட்டம் என்பது, மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மத்திய அரசு நிறுவனங்களுக்கான இந்த சட்டத்தை மாநிலங்களிலிருந்து கொடுக்கப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கும் விஸ்தரிக்க முயற்சி செய்வது மாநிலங்களின் உரிமையை தட்டிப் பறிப்பதாகும்.

இவர்கள் இந்துக்கள் இல்லையா?

    இந்திய சமூகத்தில் வர்ணாசிரமத் தர்மத்தின் கொடுமையால் சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு குறைந்தபட்சம் நிவாரணம் அளிக்கும் இடஒதுக்கீட்டு கொள்கையினை மத்திய பாஜக அரசு அமலாக்க மறுப்பதின் மூலம் இம்மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையை தட்டிப் பறிப்பதாகும். தாங்கள் இந்துக்களின் கட்சி என்று பறைசாற்றிக் கொள்ளும் பாஜக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இந்து மக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே இதன் உண்மையான அர்த்தம். மத்திய பாஜக அரசின் இந்த அநீதியை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டுமென்பதே இன்றையத் தேவையாகும்.




 

 



 

 

;