tamilnadu

img

வகுப்புவாதம் பூசப்படும் உலகளாவிய தொற்றுநோய் - அஜய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா

கோவிட்-19 தொற்றுநோயின் கரங்களில் உலகம் சிக்கியிருக்கும் இந்த நிலையில், அறிவுத் தெளிவுடன் அனைவரும் இருக்க வேண்டும் என்று இயற்கை நமக்கு கூறினாலும், இந்த மனித துயரத்தை ஹிந்து - முஸ்லீம் என்று வகுப்புவாதமாக இந்திய வலதுசாரி வீரர்கள் சித்தரித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரியில், காவல்துறை அதிகாரி ரத்தன் லால் மற்றும் உளவுத்துறை ஊழியர் அங்கித் சர்மா ஆகியோரின் கொடூரமான கொலைகளைப் பற்றி மட்டுமே பேசியதோடு, ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் உசேனை வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என்று அவர் மீது கவனத்தை ஈர்த்ததன் மூலமாக, இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட டெல்லி கலவரங்களின் போது காவல்துறையினர் உடந்தையாக இருந்தது, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை ஆகியவற்றிலிருந்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்ப முயன்றனர்.

இப்போது கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்குள் பூட்டப்பட்டிருக்கின்றர். இடம்பெயர்ந்த ஏராளமான ஏழைத் தொழிலாளர்கள் வேலை அல்லது தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வலதுசாரி அமைப்புகள் தங்களுக்கு வழக்கமான பலிகடாக்களை - முஸ்லீம்களை அரக்கர்களாக சித்தரிப்பதற்கான மற்றொரு வழியை கண்டெடுத்துள்ளன. இந்த முறை இவர்கள், மார்ச் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாகவே ஏராளமான உறுப்பினர்கள் வந்து தங்கியிருந்த, டெல்லியில் நிஜாமுதீனில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற இஸ்லாமிய இறைநம்பிக்கையை பரப்புகின்ற தப்லீக் ஜமாத் (டி.ஜே) என்ற அமைப்பின் மீது, தங்களுடைய தாக்குதலை மையப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கோவிட்-19 அச்சுறுத்தலை தப்லீக் ஜமாத் அமைப்பு மட்டும்தான் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டதா?

தொற்றுநோயை லேசாக எடுத்துக்கொண்டதாக, டி.ஜே மீது மட்டும் நாம் குற்றம் சுமத்த முடியாது என்பதற்கு ஒரு எளிய தரவைக் காண்பிக்க முடியும். உண்மையில், மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்கள் யாரும் பொதுசுகாதார அவசரநிலை இந்தியாவில் இருந்ததாக நினைக்கவில்லை. மார்ச் மாத நிகழ்ச்சிகளை டி.ஜே முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது. இதற்காக வெளிநாட்டினர் உட்பட பல விசுவாசிகளும் முன்பதிவு செய்து, தங்களுக்கான விசாக்களைப் பெற்றிருந்தனர். இப்போது அவர்களில் பலரும் இந்த வைரஸைத் தாங்கி கடத்துபவர்களாக மாறியுள்ளனர் என்று கூறபப்டுகிறது. அது அவர்களின் தவறா என்பதுதான் இப்போது மிகமுக்கியமான கேள்வியாக உள்ளது.

இந்திய விமானநிலையங்களில் போதுமான அளவில் இல்லாத மருத்துவப் பரிசோதனைக்கு மத்திய அரசு மார்ச் 9 அன்றுதான் உத்தரவிட்டது. கோவிட்-19ஐ உலகளாவிய தொற்று நோயாக, உலக சுகாதார அமைப்பு (WHO) மார்ச் 11 அன்று அறிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும், சுகாதார அவசரநிலை அறிவிப்பதற்கான நிலைமை இதுவரையிலும் ஏற்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 13 அன்று கூறியது. அதே நாளில் 200க்கும் மேற்பட்டோர் கூடுகின்ற கூட்டங்களுக்கு தடை விதித்தும், திருமண நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளித்தும் ஆம்ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருந்தது. மிகச்சாதாரண இந்தியர்கள் கோவிட்-19இன் ஆபத்துக்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால், டெல்லியில் இருந்த பல்வேறு மதங்கள் சார்ந்த அலுவலகங்களும், பொதுப் போக்குவரத்து சேவைகளும் இயங்கிக் கொண்டே இருந்தன.

மார்ச் 16 அன்று, 50க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கு டெல்லி அரசாங்கம் தடை விதித்தபோதுதான், டெல்லியில் இருந்த மக்கள் இந்த விஷயத்தை கொஞ்சம் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினர். அப்போதும் கூட, மத்திய அரசு எழுந்திருக்கவில்லை. மார்ச் 19 அன்று மாலையில், ஒரு நாள் ’ஜனதா ஊரடங்கு உத்தரவை’ மார்ச் 22 அன்று கடைப்பிடிக்குமாறு பிரதமர் மக்களிடம் வலியுறுத்தினார். அந்த நேரத்திலும்கூட, நாட்டில் இயல்புநிலை இருப்பதாகக் காட்டுகின்ற வகையிலே, டெல்லி உட்பட பல சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தொடர்ந்து தங்களுடைய அமர்வை நடத்திக் கொண்டுதான் இருந்தன. உத்தரபிரதேச மாநில அரசு மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை ஒரு வார காலத்திற்கு சைத்ரா ராம நவமி மேளாவை நடத்த திட்டமிட்டு மார்ச் 20 அன்று அறிவித்தது. மார்ச் 24 அன்று மத்திய அரசு அனைத்து விமானங்களையும் தடைசெய்து 21 நாள் ஊரடங்கை விதித்ததற்கு அடுத்த நாளில்தான் தொற்று நோய் குறித்த  அச்சம் மக்களிடையே வந்து சேர்ந்தது.

கோவிட்-19 அச்சுறுத்தலை மிகவும் லேசாக எடுத்துக் கொண்டு, ஜனதா ஊரடங்கு உத்தரவு என்று மோடி அழைப்பு விடுத்த மார்ச் 19 வரையிலும், விடுதியாகச் செயல்பட்டு வருகின்ற தங்களுடைய தலைமையகத்தை காலி செய்யாத டி.ஜே தவறான, பொறுப்பற்ற முறையிலேயே செயல்பட்டுள்ளது என்று கூறி டெல்லி காவல்துறையினர் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த அமைப்பின் ஆறு பொறுப்பாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை இப்போது பதிவு செய்திருக்கின்றனர். மார்ச் 16 உத்தரவை மீறியதற்காக டி.ஜே.க்கு எதிராக நிச்சயமாக வழக்கு தொடரப்படலாம். ஆனால் கோவிட்-19ஐ பரவ விட்டதாக அந்த அமைப்பின் மீது மட்டும் குறை கூறுவது தவறானது மட்டுமல்ல, தீங்கை விளைவிக்க கூடியதாகும்.

செயலற்றுப் போன அரசாங்கம்

அரசாங்கத்தின் நடவடிக்கையை ஆராய்ந்து பார்த்தால், பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருப்பது தெரிய வரும். தங்களுடைய மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு உள்ள நோயாளிகளின் பயண விவரம் குறித்து விசாரித்த தெலுங்கானா அரசு, டி.ஜே. கூட்டம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னதாகவே தகவல் அளித்திருந்தது என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் தெளிவாகக் கூறுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு, மார்ச் 21 அன்று, தொற்றுநோய் பரவலுக்கு சாத்தியமான இடமாக டி.ஜே தலைமையகம் இருப்பது குறித்து மத்திய அமைச்சகத்தை தமிழக அரசும் எச்சரித்திருந்தது. இந்த வைரஸ் பரவலுக்கு சாத்தியமான இடமாக நிஜாமுதீன் இருக்கக்கூடும் என்பதை அறிந்திருந்தாலும், மத்திய அரசும், டெல்லி மாநில அரசாங்கமும்  நத்தை வேகத்திலேயே செயல்பட்டிருப்பது இப்போது தெரிய வருகிறது.

டி.ஜே. கூட்டம் குறித்தும், தெலுங்கானா, தமிழ்நாட்டைச் சார்ந்த நோயாளிகளுடனான அதன் தொடர்புகள் குறித்தும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மார்ச் 21 அன்று ஆலோசனை வழங்கப்பட்டதாக மத்திய உள்துறை  அமைச்சகம் மார்ச் 31 அன்றுதான் ஊடகங்களுக்குத் தெரிவித்தது. இருந்தாலும் மத்திய மற்றும் மாநில அரசுகள், டி.ஜே தலைமையகத்தில் இருந்த 1,000க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றவும் தனிமைப்படுத்தவும் என்ன செய்திருந்தன என்பது குறித்து தெளிவில்லை. தன்னுடைய தலைமையகத்தை மார்ச் 19 அன்றிலிருந்தே காலி செய்ய முயன்ற போதிலும், மார்ச் 23 அன்று டெல்லி அரசு விதித்த ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து சேவைகளில் திடீரென இடையூறு ஏற்பட்டதால், அங்கிருந்த பலரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்ததாக டி.ஜே கூறுகிறது.

அதைவிட முக்கியமாக, டெல்லி மாநில அரசாங்கத்தின் ‘50 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை’ என்ற விதியை டி.ஜே. மீறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும், டெல்லி காவல்துறை ஏன் செயல்படவில்லை? மார்ச் 24 அன்று  மார்க்கஸ் பொறுப்பாளர்களை வரவழைத்ததற்கு முன்னர் டெல்லி காவல்துறை டி.ஜே. விஷயத்தைப் பற்றி எதுவுமே பேசியிருக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் மார்க்கஸ் வளாகத்தைக் காலி செய்வதற்கான வழிமுறைகளை வழங்குவதைக் காட்டுகின்ற வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அது மார்ச் 23 அன்று நடைபெற்றதாக சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அது மார்ச்  24 அன்று நடந்தது என்று டி.ஜே. பொறுப்பாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.  காவல்துறையினர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவிலேயே, தங்களுடைய வளாகத்தில் சிக்கித் தவிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற உதவுமாறு டி.ஜே பொறுப்பாளர்கள் காவல்துறை அதிகாரியிடம் கோருவதைக் காண முடிகிறது. இதே பிரச்சினை தொடர்பாக, அதற்கு ஒரு நாள் முன்பாகவும், தாங்கள்  காவல்துறை அதிகாரிகளைச் சந்திக்க வந்தோம் என்று மார்க்கஸ் பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள்.

உதவி பெறுவதற்காக அவர்களை மாவட்ட நீதிபதியிடம் அந்த காவல்துறை அதிகாரி அனுப்பி வைக்கிறார். அதற்குப் பிறகும், மார்க்கஸில் இருந்த டி.ஜே உறுப்பினர்கள் அங்கிருந்து அகற்றப்படாததால், அவர்களை வெளியேற்றுவதற்காக டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி அரசாங்க அதிகாரிகள்  என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அங்கிருந்தவர்களை வெளியேற்றுவதற்கான செயல்முறை மார்ச் 28 மற்றும் 29 அன்றிலிருந்துதான் தொடங்கியது. இதுவரை நிஜாமுதீனில் உள்ள டி.ஜே கட்டிடத்திலிருந்து 1,033 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் மார்ச் 31 அன்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தகவல் அளித்தார்.  

டெல்லி அரசாங்கத்திற்கும், டெல்லி காவல்துறையினருக்கும் இந்த விவகாரத்தை குறிப்பாக ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டதா என்பதை உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. டி.ஜே. தலைமையகம் கொரோனா வைரஸைத் தாங்கிக் கொண்டிருந்தவர்களால் நிறைந்திருந்தது என்று இப்போது தெரிய வருவதால், மார்ச் மாதத்தில் டி.ஜே. கூட்டம் குறித்து அமைச்சகம் ஏற்கனவே அறிந்திருந்ததைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அவர்கள் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கை மிகமுக்கியமான தலையீடாக இருந்திருக்கும். ஆனாலும் நிஜாமுதீன் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கும் எந்தவொரு பொது ஆலோசனையும் அரசால் வழங்கப்படவில்லை.

இந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா?

இவையனைத்தும் சரியான கேள்விகள்தான். ஆனால் இந்தக் கேள்விகள் அவர்களுடைய அரசியல் நலனுக்குப் பொருந்தி வராதவை என்பதால், இந்த வலதுசாரி வீரர்கள் அவை குறித்து காது கேளாதவர்களாக இருக்கக்கூடும். ஜனநாயக நாடுகளில் உள்ளவர்கள், எழுந்திருக்கும் நெருக்கடி குறித்து தீவிரமாக சிந்திக்கும்படி கேட்டுக் கொண்டு, அதைத் தணிக்க தங்களுடைய தலைவர்கள் நடவடிக்கை எடுக்கும் போதுதான், அந்த நெருக்கடியை தீவிரமானது என்று எடுத்துக்கொள்ள முனைகிறார்கள். அரசாங்கத்தின் செயலற்ற தன்மை காரணமாக, பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல ஆலயங்களும் மார்ச் கடைசி வாரம் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில், தப்லீக் ஜமாத்தை தனிமைப்படுத்தி, அதன் மீது குறிவைப்பது, பெரும்பான்மை அரசியல் பிரச்சாரத்தின் மறுபிரவேசமாகவே இருக்கிறது.

நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வகுப்புவாத பிரச்சாரம், அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து கிடைத்த மௌனமான ஆதரவு இதனை நிரூபிப்பதாகவே இருக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதில் மத்திய அரசின் தயார்நிலை குறித்து இந்திய சமூகத்தின் பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியிருக்கும் இந்த நேரத்தில், இவ்வாறான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனைக் கருவிகளுடன் சுகாதார ஊழியர்கள் இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடி வருகின்ற இந்த நேரத்தில், மத்திய அரசு தன்னுடைய செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாம் கண்டுகொண்டிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனை மிகப்பெரிய இந்திய துயரங்களில் ஒன்றாக மாறக்கூடும். ஆனாலும் அரசாங்கம் தன்னை மூடி மறைத்துக் கொள்ள மட்டுமே பார்க்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிந்த தொழில்துறை சார்ந்த இடங்களில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர். 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கியிருந்த சிறிய கட்டிடங்களில், வைரஸால் பாதிக்கப்படும் நிலையில் இப்போது பலரும் வசித்து வருகின்றனர். தொலைக்காட்சி சேனல்களிலும், பிற இடங்களிலும் முஸ்லீம்கள் இழிவுபடுத்தப்படுகின்ற நிலையில், இன்னும் பல இடங்களில் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் சிக்கித் தவிக்கின்ற நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.

குடிமக்கள் இந்தியாவின் பொது சுகாதாரப் பாதுகாப்பு மேம்படுத்தப்படக்கூடிய பல வழிகள் குறித்து பல வழிகளில் விவாதித்திருக்கவோ அல்லது எதிர்காலத்தில் இந்தியா இதுபோன்ற சவால்களைச் சமாளிக்க எவ்வாறு சிறந்த முறையில் தயாராகலாம் என்பது பற்றி விவாதித்திருக்கவோ வாய்ப்புகள் இருந்திருப்பினும், அதுபோன்ற எதையும் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத நிலையே இப்போது உருவாக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இன்னும் கொஞ்சம் நன்றாக தங்களைச் சுற்றிப் பார்த்திருந்தால், முஸ்லீம்களும் வேறு எந்த சமூகத்தினரையும் போலவே  ஊரடங்கு உத்தரவை மதித்து நடந்திருக்கிறார்கள் என்பது இந்த வலதுசாரிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

முடிவில், நம்மை நாமே இந்தக் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்: இந்தியாவில் கோவிட்-19 பரவியதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது குற்றம் சாட்டுவதன் மூலமாக, இந்த  வைரஸை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? இதற்கான தெளிவான பதில் கிடைத்த பின்னரே, இந்திய வலதுசாரிகள் தொடங்கியுள்ள விவாதத்தில் ஈடுபடுவது அர்த்தமுள்ளதுதானா என்பது தெரிய வரும்.

https://thewire.in/communalism/covid-19-tablighi-jamaat-hindu-muslim    

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

;