tamilnadu

img

‘புதிய இந்தியா’வின் கதை - சீத்தாராம் யெச்சூரி

பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

‘புதிய இந்தியா’வின் கதை, அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்பதால்தான், இவர்கள் ஊடகங்களின் உடந்தையுடன் இந்திய மக்களைப் பீடித்துள்ள உண்மையான பிரச்சனைகளை மறைத்தும், அவர்களின் வேதனைகளை வெளிக்கொணராது தடுத்தும், அவற்றுக்குப் பதிலாக பொய்ச் செய்திகள், கட்டுக்கதைகள் மூலமாக மக்களின் உணர்வுகளை மாற்றியமைத்திட, மழுங்கடித்திட முயல்கின்றனர்.

இந்திய சுதந்திரதினத்தின் 73ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடியிருக்கிற வேளையில், இந்தியாவின் எதிர்காலத்தில் அதற்கு மரண சாசனம் எழுதும் விதத்தில் புதியதொரு கதை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் அடைந்த இந்தியா, 2019 ஆகஸ்ட் 5இல் இந்திய அரச மைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்ததன் மூலமும், பின்னர் 2020 ஆகஸ்ட் 5 அன்று ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடி முறையாக அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலமும் இந்தியாவின் உண்மையான விடுதலைக்கான தினமாகும் என்று ‘புதிய இந்தியாவை’க் கதைப்பவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இவர்களின் இந்தப் புதிய கதை, வீரஞ்செறிந்த இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும், அதன்பின் உருவாகியுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும்  முற்றிலும் நேரெதிரா னதாகும். இதுதான் பிரதமர் மோடியின் அயோத்தி உரையின் சாரமாகும். 

திணிக்கும் முயற்சி  சமூக வெடிப்பை ஏற்படுத்தும்

இந்திய அரசமைப்புச் சட்டம் நம் மக்கள் மற்றும் நம் நாட்டின் வளமான பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாங்கினைப் பிரதிபலிப்பதாகும். இந்தி யாவில் உள்ள வேற்றுமைகளுக்கு இடையேயுள்ள பொது வான பண்புகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். மொழி ரீதியாக, இனரீதியாக, மத ரீதியாக மற்றும் இதுபோன்றுள்ள அனைத்து வேற்றுமைகளின் பன்முகத்தன்மைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் சமத்துவ அடிப்படையில் மதித்து, நடந்துகொள்ள வேண்டும். இவ்வேற்றுமைப் பண்புகளை ஒரே சீராக்குகிறோம் என்ற பெயரில் திணிக்கப்படும் எவ்வித முயற்சியும் சமூக வெடிப்புக்கே இட்டுச் செல்லும். ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அங்கமான பாஜக, அரசாங்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு மத அடிப்படையில் சீரான தன்மையைத் திணித்திடும் முயற்சிகள், ஓர் எதேச்சதிகார/சர்வாதிகார ஆட்சியின்கீழ் “உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரிகள்” (“internal enemies”) என அவர்களால் வர்ணிக்கப் படுபவர்களுக்கு எதிராக பாசிஸ்ட் முறைகளைப் பிரயோகிப்ப தன் மூலம் ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு வேட்டுவைத்திடும்.

இத்தகையதொரு ‘புதிய இந்தியா’வை நிறுவுவது என்பது, மோடி அரசாங்கத்தின் கண்டுபிடிப்பு அல்ல. இதற்கு சுமார் நூறாண்டுகால வரலாறு உண்டு. 1925இல் ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டதிலிருந்து, 1939இல் கோல்வால்கரால் ஒரு பாசிச இந்து ராஷ்ட்ரத்தின் குறிக்கோளை எய்திட, சாவர்க்க ரின் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் ஸ்தாபனக் கட்டமைப்பை ஏற்படுத்தும் வரலாற்றைப் பெற்றிருக்கிறது. இந்திய மக்கள் இவர்களின் சித்தாந்தத்தை நிராகரித்த துடன், விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்று அமைத்திட்ட சுதந்திர இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடிய ரசாக உறுதியானமுறையில் பிரகடனம் செய்தார்கள். இது, 1947இல் நாடு பிளவுண்டு பாகிஸ்தான் ஓர் இஸ்லாமியக் குடியரசாக அமைக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிரானதாகும். எனினும், அப்போதிருந்தே, இந்தியக் குடியரசின் மதச்சார் பற்ற ஜனநாயகக் குடியரசு குணாம்சத்தை மாற்றியமைப்ப தற்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கடந்த எழுபதாண்டு காலமாக செயல்பட்டு, இன்றுள்ள நிலையை எட்டியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள்

இவர்களின் ‘புதிய இந்தியா’விற்கு முதலாவதாகவும், முதன்மையானதாகவுமான தேவை என்பது இந்திய அரச மைப்புச்சட்டத்தால் வரையறுக்கப்பட்டு, கெட்டிப்படுத்தப் பட்டுள்ள பழைய இந்தியாவை ஒழித்துக்கட்டுவதாகும். அரச மைப்புச்சட்டத்தின் மீதான இத்தாக்குதல்கள் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியில் உக்கிரம டைந்துகொண்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். அரசமைப் புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் மதச் சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு என அனைத்தும் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசமைப்புச்சட்டத்தின் மீதான இத்தாக்குதல் மூலம், அரசமைப்புச்சட்டத்தின் செயல்பாடுகளையும், மக்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்த உத்தரவாதங்களையும் பேணிப் பாதுகாத்திடக்கூடிய விதத்தில், சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து, செயல்பட்டுவந்த அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில் அவற்றை அரித்துவீழ்த்த வேண்டியது அவசியமாகிறது. அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டபடி, நம் குடியரசின் மூன்று முக்கிய அங்கங்களாக ஆட்சி அதிகாரம், நாடாளுமன்றம்/சட்ட மன்றங்கள் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் விளங்கு கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனிதான். ஆனாலும் ஒன்றுக் கொன்று தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறை வேற்றுவதற்கு உதவுவனவாகும்.

நாடாளுமன்றம் மிகவும் மோசமானமுறையில் ‘பெரும் பான்மையின் கொடுங்கோன்மை’யை (‘tyranny of the majority’) அமல்படுத்தும் ஒன்றாக குறைக்கப்பட்டு, அரித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற நடைமுறைகள், கமிட்டி செயல்பாடுகள் மற்றும் விவாதங்கள் அனைத்தும் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போக்கு மிகவும் ஆபத்தானதாகும். எப்படியெனில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மையக்கருவே, மக்களின் இறையாண்மையை மக்களுக்குப் பதில்கூற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுவதன் மூலமும், அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய விதத்திலும் செயல்படுத்துவதன் மூல மேயாகும். இப்படித்தான், “நாம், இந்திய மக்களாகிய நாம்…” என்று அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் அளிக்கப் பட்டுள்ளது போன்று நாம் நம்முடைய இறையாண்மையை நடைமுறைப்படுத்துகிறோம். நாடாளுமன்றம், செயல்படா நிலைக்கு மாறுமானால், பின், மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்வது என்பதற்கோ, ஆட்சியாளர் கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் சொல்வது என்பதற்கோ, விடைகொடுக்கப்பட்டுவிடுகிறது. இதன்மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக் கொண்டுவிடுகிறது.

நீதித்துறை

அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துக்கள் ஆட்சி செய்பவர்க ளால் மீறப்படக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்திலும், அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களை உயர்த்திப்பிடித்திடும் விதத்திலும் ஒரு சுயேச்சையான நீதித் துறை நிறுவப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக மிகவும் அபாயகரமானமுறையில் நாம் பார்த்துவருவதைப்போன்று, நீதித்துறையின் பாரபட்சமற்ற போக்கும், சுதந்திரமும் சமர சத்திற்கு உள்ளாக்கப்படுமானால், பின் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்படுவது என்பது தொடர்பாக நீதித்துறையின் மேற்பார்வை என்பதே இல்லாது ஒழிந்துவிடும்.

தேர்தல் ஆணையம்

நாட்டில் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துவதன் மூலமும், போட்டியிடும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை அளிப்பதன் மூலமும் நம் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போக்கை நிலைநிறுத்திட இந்தியத் தலை மைத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் ஒரு மைல்கல்லாக இருந்து வந்திருக்கிறது. இதுவும் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது, பின் அரசாங் கங்கள் உண்மையில் மக்களின் தீர்ப்பையோ அல்லது மக்களின் குரலையோ பிரதிபலிப்பதாகக் கூற முடியாது. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிடும் நிறுவனங்களான மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கத் துறை, இலஞ்ச ஒழிப்புத்துறைகள் (Vigilance Department, etc.,) முதலானவை நாட்டில் கிரிமினல் மற்றும் சிவில் குற்றங் கள் புலனாய்வு செய்யப்படுவதையும், அக்குற்றங்களைப் புரிந்தோர் நாட்டின் சட்டங்களால் தண்டிக்கப்படுவதையும் உத்தரவாதம் செய்யும் விதத்தில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தன. இவையும் அரசின் அரசியல் அங்கமாக சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு செயல்படத் தொடங்கினால், பின் ஆளும் கட்சியினரின் அனைத்துக் குற்றங்கள் மற்றும் ஊழல்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதோடு, அவர்களை எதிர்ப்போரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படு வார்கள், மிரட்டப்படுவார்கள் மற்றும் வாய்மூடி மௌனிக ளாக்கப்படுவார்கள்.

இவ்வாறு அரசமைப்புச்சட்டம் முழுமையாக அரிக்கப்படு வதும் அதன்கீழ் இயங்கிடும் நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுத்து, ‘கூட்டுக்களவாணி முதலாளித்துவம்’ கொழுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதும், ஆளும் கட்சி யால் மாபெரும் அளவில் பணபலத்தைக் குவிப்பதற்கு வழி வகுத்துக் கொடுத்திடும். இது, ஒரே அடியில், ஜனநாயகத்தின் தரத்தை அரித்துவீழ்த்திடும். இது, எந்தவொரு தேர்தலிலும் ஓர் அரசாங்கம் அமைவதற்கான மக்களின் தீர்ப்பை குதிரை பேரத்தின் மூலமாக மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைமைக ளை உருவாக்கி விடும். (இப்போது பல மாநிலங்களில் பாஜக தேர்தலில் தோற்றாலும் பின்னர் அங்கே வென்ற சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கி அரசாங்கம் அமைவதற்கு வழிவகுத்துக்கொடுத்திருப்பது  வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது)  

அறிவியலற்ற முறையில்...

இத்தகைய ‘புதிய இந்தியா’வின் கதை வெற்றிபெற வேண்டுமானால், இவர்களின் சித்தாந்தத்திற்கேற்ப இந்திய வரலாற்றை மாற்றியமைத்திடும் வேலையைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனவேதான் இந்தியக் கல்வி அமைப்புமுறையையும், தங்களின் பகுத்தறிவற்ற, பத்தாம் பசலித்தனமான புராணக் குப்பைகளையும், கண்மூடித்தன மான மூட நம்பிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திடும் விதத்தில் பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பதும் இவர்களுக்கு அவ சியமாகிறது. அதற்காகத்தான் அறிவியல்மனப்பான்மை யுடன் விளங்கும் பாடங்களை அப்புறப்படுத்த வேண்டியதும் இவர்களுக்குக் கட்டாயமாகிறது. இதேபோன்று கலாச்சாரத் துறையிலும், அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும்  கல்வி மையங்களை, இந்தியக் கலாச்சாரத்தின் ஒத்திசைவு பரிணாமவளர்ச்சியை மூடிமறைத்துவிட்டு, தாங்கள் விரும்பும் ஒரேசீரான மற்றும் ஒரேவகையான கலாச்சாரத்தைத் திணித்தி டும் விதத்தில் மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகி றது. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையுடன் விளங்கும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாச்சாரத்திற்கு முற்றி லும் முரணான ஒன்றாகும். இதன் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதி, கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக இந் தியாவின் ஒத்திசைவு வரலாற்றைக் கற்பதைக் கைவிட்டுவிட்டு, அதற்குப்பதிலாக தங்கள் சித்தாந்தத்திற்கேற்ப புராண இதி காசங்களை வரலாறாக எழுதவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கி றது. அகழ்வாராய்ச்சி, கடந்தகாலத்தின் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டு மேற்கொள்வதற்கு எதிராக, இந்துத்துவாவின் அறிவி யலற்ற கருத்துக்களையொட்டி, வரலாற்றை எழுதக்கூடிய விதத்தில் சாட்சியங்களை உருவாக்கிட வேண்டியிருக்கிறது.

இவர்களின் ‘புதிய இந்தியா’வின் வெற்றி என்பது நம் சமூ கத்தில் ஒரு புதிய குறியீட்டுவாதத்தை உருவாக்குவதன் மூலம் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது. இதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்கூட, எப்படி ஹிட்லர் தன்னுடைய இழிபுகழ் கூம்பை (Dome) பெர்லினில் கட்டினானோ அதே போன்று இங்கேயும் மிகவும் அதிக அளவில் செலவு செய்து புதிய நாடாளுமன்ற வளாகத்தை (Central Vista), இவர்கள் கட்டத் துணிந்துள்ளார்கள். நேருவின் “நவீன இந்தியாவின் கோவில்கள்” என்று அழைக்கப்படுபவைகளுக்கு பதில் சொல்லக்கூடிய விதத்தில் புல்லட் ரயில்கள் மற்றும் நவநாகரிகப் பெயர்களில் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

‘புதிய இந்தியா’வின் கதை, அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்பதால்தான், இவர்கள் ஊடகங்களின் உடந்தையுடன் இந்திய மக்களைப் பீடித்துள்ள உண்மையான பிரச்சனைகளை மறைத்தும், அவர்களின் வேதனைகளை வெளிக்கொணராது தடுத்தும், அவற்றுக்குப் பதிலாக பொய்ச் செய்திகள், கட்டுக்கதைகள் மூலமாக மக்களின் உணர்வுகளை மாற்றியமைத்திட, மழுங்கடித்திட முயல்கின்றனர். தங்களின் உயிர்மூச்சாக விளங்கும் மதவெறி இந்துத்துவா வாக்குவங்கியை நிலைநிறுத்திக்கொள்வ தற்காக, தங்களுடைய ‘புதிய இந்தியா’வின் ஓர் அத்தியாவ சியமான பொருளாக, தலித்துகளுக்கு எதிராக, பழங்குடி யினருக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மதச் சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்களையும் வன்முறை வெறியாட்டங்களையும் கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாக எப்போதும் சமூகப் பதற்றச் சூழ்நிலையைப் பரப்புவதையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் அயோத்தி பேச்சு

அயோத்தியில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டு மானத்திற்காக அடிக்கல்நாட்டு விழாவில் ஆற்றிய உரை ஒருவிதத்தில் இவர்களின் ‘புதிய இந்தியா’வின் சிந்தனையை வெளிப்படுத்தும்விதத்தில் அமைந்திருந்தது. உச்சநீதிமன்றம், அயோத்தி தாவாவில் தீர்ப்பு வழங்கியது என்றபோதிலும், அது நீதி வழங்கிடவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, நாட்டில் உள்ள சட்டத்தின்படி ஒரு கிரிமினல் நடவடிக்கை என்று கூறியுள்ளது. அதனைச் செய்தோரை விரைவில் தண்டித்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால், தாவாவுக்குரிய அந்த இடத்தில் மசூதியை இடித்திட்ட நபர்கள் வசமே கோவிலைக் கட்டுவதற்கான பணியையும் ஒப்படைத்தும் தீர்ப்பளித்திருக்கிறது. ஆயினும் இந்தக் கட்டுமானப் பணியை ஓர் ‘அறக்கட்டளை’ மூலமாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது.

ஆயினும், கோவில் கட்டும் பணியை ஓர் அதிகாரப்பூர்வ மான அரசாங்க செயல்பாடாகவே பிரதமரும், அரசாங்கமும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி எடுத்துக் கொண்டிருக்கின் றன. மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள பிரதமர் அதனை மீறும் விதத்தில் சென்றுள்ளார். ஒவ்வொரு குடி மகனுக்கும் அவருடைய மதத்தைத் தேர்வு செய்யும் அர சமைப்புச்சட்ட உத்தரவாதங்களைப் பாதுகாப்பதும் உத்தர வாரதப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும். இந்த அரசாங்கத்திற்கும், நம் அரசமைப்புச்சட்டத்தின்படி, மதம் கிடையாது.  இத்தகைய அரசமைப்புச்சட்டத்தின் மீறமுடியாத முன்மொழிவு பிரதமராலேயே காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது. இவ்வாறு பிரதமர் மீறியிருக்கும் செயல், ஆர்எஸ்எஸ் அரசியல் திட்டத்தின் கீழான ‘புதிய இந்தியா’விற்கான சமிக்ஞையாகும். பிரதமர் மோடியின் பேச்சில் மிகவும் மோசமான அம்சம் என்பது அவர், நாட்டின் விடுதலைப் போராட்ட இயக்கத்தை, கோவில் கட்டும் இயக்கத்துடன் ஒப்பிட்டிருப்பதாகும். அவர் கூறியதாவது: “விடுதலைப்போராட்டத்திற்காக தியாகம் செய்யாத இடம் என்று நம் நாட்டில் எதுவும் இல்லை. ஆகஸ்ட் 15, பல லட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் உருவக மாகும். இந்திய சுதந்திரத்திற்காக ஆழமாக ஏங்கிய எண்ணற்ற மக்களின் ஏக்கமாகும்.  அதேபோன்றே, ராமர் கோவில் கட்டுவ தற்காக பல நூறாண்டுகளாக பல தலைமுறையினர் தன்னல மற்ற முறையில் தியாகம் செய்திருக்கிறார்கள்.”

ஒருங்கிணைக்கும் பார்வையும் கழித்துக் கட்டும் பார்வையும்

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டது. இவர்களின் ஆர்எஸ்எஸ் தொலை நோக்குப் பார்வையோ இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரை யும் கழித்துக்கட்டும் பார்வையைக் கொண்டது. இந்திய சுதந்திரப் போராட்டம் அனைவரையும் ஒன்றிணைக்கும் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக, நாட்டிலுள்ள வெகுஜனத் திரளுக்கு உத்வேகத்தை  ஊட்டி, அணிதிரட்டி, 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத்தை அடைவதற்கு இட்டுச்  சென்றது. இவர்களின் ‘புதிய இந்தியா’வின் தற்போதைய கதை யளப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொன்றையும் நேரடியாக மறுதலித்திடும் ஒன்றாகும்.

அதிலும் மிகவும் முக்கியமாக, ஆர்எஸ்எஸ் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அதற்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி டாம்லே ஆகியோரின் ‘காவியின் சகோதரத்து வம், 1987’ என்னும் நூல்கூட,  ஆர்எஸ்எஸ் இயக்கமானது விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல், அது அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற ஆதா யங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனாவாதியான, மறைந்த நானாஜி தேஷ்முக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்: “ஏன், ஆர்எஸ்எஸ் ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை?” உண்மையில், பம்பாய் உள்துறை, 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில், ஆர்எஸ்எஸ் குறித்துக் கீழ்க்கண்டவாறு கருத் தினை வெளியிட்டிருந்தது: “சங் பரிவாரம், சட்டத்திற்குட்பட்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டது. குறிப்பாக, 1942இல் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாது தவிர்த்தது.”

இந்த உண்மைகளை மூடிமறைப்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு கம்யூ னிஸ்ட்டுகள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இப்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக, அவதூறை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற, நாடாளு மன்றத்தின் நள்ளிரவு அமர்வின்போது அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா என்ன கூறினார் என்பதை நினைவுகூர்வது நலம் பயத்திடும். அப்போது அவர் கூறிய தாவது: “கான்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் அகமதாபாத் ஆலை களில் பெரிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தங்க ளுக்குப்பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டனில் உள்ள அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடி தத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி கூறப்பட்டிருந்த தாவது: அதன் உறுப்பினர்களில் பலருடைய நடத்தை, அவர்க ளில் பெரும்பகுதியினர் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களைக் கொண்டதாக இருப்பது என்பது எப்போதும் தெளிவாகத் தெரிகிறது.” இதைவிட அதிகமாக சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா?     

இந்தியாவின் எதிர்காலத்தை அழிப்பதைத் தடுத்திடுவோம்

இவர்களின் ‘புதிய இந்தியா’ என்பது, இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவது மட்டுமல்ல, இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தையும், அதனுடன் தொடர்புடைய அர சமைப்புச்சட்ட நிறுவனங்களையும், அதிகாரக்குழுமங்களையும், மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களையும், மக்களின் வாழ்க்கை மற்றும் சிவில் உரிமைகளையும் அழித்து ஒழிப்பது மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதன் மூலமும், தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலமும் இவர்க ளுக்கெதிராக சண்டையை மூட்டிவிட்டு இந்தியாவின் எதிர் காலத்தையே அரித்துவீழ்த்துவதுமாகும். இவர்கள் முன்வைத்திடும் ‘புதிய இந்தியா’வின் ஆபத்துக்க ளைத் தடுத்துநிறுத்தி, முறியடிப்பது அவசியமாகும். அதற்கேற்ற விதத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின சபதத்தை நாம் அனை வரும் எடுத்துக்கொள்வோம்.

தமிழில் : ச.வீரமணி




 

;