tamilnadu

img

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்கமே அதிர்ச்சியளிக்கிறது -டி.கே.ரங்கராஜன் எம்.பி., நேர்காணல்

டி.கே.ரங்கராஜன் எம்.பி., நேர்காணல்

 

17 வது மக்களவைத் தேர்தலில் அறுதிப்பெரும் பான்மை பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் 17 ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது. 35 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் 30 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. 30 மசோதாக்களில் ஒன்று, இரண்டைத் தவிர மற்ற எதுவுமே பரிசீலனைக்கு உட்படுத்தப் படவில்லை. வழக்கமாக மசோதாக்களை அதிகார வர்க்கம் தயாரிக்கும். அதில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை சரி பார்க்க நாடாளுமன்றத்தில் 24 நிலைக்குழுக்கள்உண்டு. அதில் இரண்டு அவைகளிலும் இருக்கக்கூடிய உறுப்பி னர்கள் அந்த மசோதாக்களை விவாதிப்பார்கள். அதன் பின்னர் தான் மக்களவைஅல்லது மாநிலங்களவையில் அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். இதுதான் நடைமுறை. 

ஆபத்தான அவசர சட்டங்கள் 

மோடி அரசு 2வது முறையாக பதவி ஏற்ற பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுக்களையே அமைக்கவில்லை என்பது ஒரு குறை. திட்டமிட்டு இக்குழுக்கள் அமைக்கப்ப டாமல் இருக்கலாம். பத்து மசோதாக்கள் குடியரசுத்தலை வரின் அவசரச்சட்டத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டன. இந்த அவசரச்சட்டம் கொண்டுவருவது மிகவும்  ஆபத்தா னது, அது ஜனநாயக நெறிமுறைகளுக்கே வேட்டு வைக்கக் கூடியது. நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடியது என்ற விவாதம் 1950-54 ஆம்ஆண்டு காலத்தில் இருந்தே  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அவரச்சட்டம் அமலான பிறகு நாடாளுமன்றத்தில் நடை பெறும் விவாதங்கள் அனைத்தும் ரப்பர் ஸ்டேம்பாகத்தான் மாறிவிடும். அதில் மாறுதல் செய்வது எளிதான விஷய மல்ல. இந்த முறை மோடி அரசு கொண்டு வந்த 30 மசோ தாக்களில் 10 மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஆணை யுடன் அவரச்சட்டமாக வந்துள்ளது. இந்த அவசரச்சட்டம் மிகவும் தவறானது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சொல்லி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர்கள் ஒவ்வொரு மசோதாவுக்கும் அதை எதிர்த்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்புக்கு விடச்செய்தோம்.  

மசோதாக்கள் விவாதத்திற்கு வரும்போதும், அதை எதிர்த்தது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய  பட்ஜெட் உரையில் விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ, வேலை யில்லாத வாலிபர்களுக்கோ சிறு உற்பத்தியாளர்களுக்கோ  சிறப்பான அம்சங்கள் எதுவுமே இல்லை என்பது மிக மிக முக்கியமானது. தலித் மக்களுக்கும்  பழங்குடியின மக்க ளுக்கும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பதை பற்றிக்கூட அவர்கள் பெரிய அளவில் கவலைப்பட்டதாக தெரிய வில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு கருணை  

பெரும்பாலும்  கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எல்லை யில்லாத  சலுகைகளை வழங்கக்கூடியதாக நிதி மசோதா  இருந்தது. நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையை கூட நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் தெளிவாக சொல்லப்படவில்லை. அரசிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? என்பதும் சொல்லப்படவில்லை. இப்படிப்பட்ட நிதிநிலை அறிக்கையை  படித்த முதல் பெருமை நிர்மலா சீதாராமனையே சாரும்.  நிதியமைச்சரின் பட்ஜெட் உரைக்கு பிறகு வந்திருக்கக் கூடிய பல்வேறு மசோதாக்கள் நிதியமைச்சரின் உரையை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. உதாரணமாக கம்பெனி திருத்தச்சட்டம் 2019. ஏற்கனவே உள்ள கம்பெனிகள் தொடர்பான சட்டத்தை மேலும் திருத்தக்கூடியது. ஏற்கனவே மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே நாடாளுமன்றம் ஒவ்வொரு முறை கூடும் போதும் கம்பெனிகள் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திருத்தமும்  பெருமுதலாளிகளுக்கு சாதகமான திருத்தமாக உள்ளது.  உதாரணமாக இந்த முறை அந்த சட்டத்தில் திருத்தம் செய்யும்போது பைன் (Fine)  என்பதை penalty  என்று மாற்றிவிட்டார்கள். தண்டனை என்பது கிரிமினல் குற்றம் செய்தவர்களுக்கு பொருந்தும். பெனாலிட்டி என்பது சிவில் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த இரண்டு வார்த்தைக ளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

போலீசில் மாட்டிக்கொண்டால் பைன் கட்டவேண்டும், கட்டவில்லை என்றால் சிறைக்கு செல்லவேண்டும், ஆனால் இங்கே பெனால்டியோடு நிறுத்திக்கொண்டார்கள். இது மிக மிக முக்கியமான ஒன்று. இனி எந்தஒரு முதலாளியை யும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கமுடியாது. இரண்டாவது மிக முக்கியமானது பெரு நிறுவனங்கள் சமூகப் பொறுப் புக்காக (சிஎஸ்ஆர்)  தங்களுடைய லாபத்தில் 2 விழுக்காட்டை ஒதுக்க வேண்டும். அந்த காலகட்டத்தை நோக்கினால் பல பெருமுதலாளிகள் கல்லூரிகளை உருவாக்குவார்கள், மருத்துவமனைகளை உருவாக்குவார்கள்.அப்படி உரு வானது தான் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்க லைக் கழகம் மற்றும் மருத்துவக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி உள்ளிட்டவை.  வசதிப்ப டைத்தவர்கள் ஒரு கொடையாளர் கண்ணோட்டத்துடன் உரு வாக்கக்கூடியவை இவை.  பெரு நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2விழுக்காடு தொகையை சமூக பொறுப்பு திட்டங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்ற சட்டத்தை அரசு ஆதர வுடன் முதலாளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். அந்த சட்டத்தை மீறக்கூடிய வர்களுக்கு தண்டனை உண்டா? அல்லது வேறு வித மான நடவடிக்கை உண்டா என எதையும் புதிய சட்டத் திருத்தத்தில் சொல்லப்படவில்லை.  இரண்டாவது முக்கியமான விஷயம் செயல்படாத நிறுவனங்கள் என்று ஒன்றை உருவாக்குகிறார்கள். 2லட்சத்து 50ஆயிரம் நிறுவனங்களை செயல்படாத நிறுவ னங்கள் என்று அறிவித்த பிறகு அந்த நிறுவனங்களோடு தொடர்பில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கியை செலுத்துவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை. இந்த 2லட்சத்து 50ஆயிரம்  தொழிற்சாலைகளுக்கு சிறு தொழில் நிறுவ னங்கள் உபகரணங்களை அனுப்பியிருந்தால் அதற்கு உரிய பணத்தை வழங்காமல் பெரு நிறுவனங்கள் பாக்கி வைத்திருந்தால் அதை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடு இந்த சட்டத் திருத்தத்தில் இல்லை. 

தொழிலாளர்களின் சம்பளமோ வருங்கால வைப்பு நிதியோ (பிஎஃப்)அல்லது ஈஎஸ்ஐ போன்றவற்றில் அவர்கள் பாக்கி வைத்திருந்தால் அதை பெற்றுத் தருவதற்கான எந்த ஏற்பாடும் சட்டத்திருத்தத்தில் இல்லை. கம்பெனிகளின் இயக்குநர்கள் கட்டவேண்டிய பணத்திற்கான ஏற்பாடுக ளும் இல்லை. மூடப்பட்ட நிறுவனங்கள் எவ்வளவு ஜிஎஸ்டி பாக்கி வைத்தி ருக்கின்றன, வருமானவரி எவ்வளவு பாக்கி வைத்திருக் கின்றன? அதை பெறுவதற்கான வழி என்ன என்பது குறித்தும் அதில் எதுவும் இல்லை. இந்தமுறையில் இந்தநிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. சில நிறுவனங்கள் அம்பானியுடையதாக இருக்கலாம். அதானியுடையதாக இருக்கலாம், டாட்டாவுக்கு சொந்த மானதாக இருக்கலாம். இது பெரு முதலாளிகளுக்கு சாதக மாக அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்யக்கூடிய சட்டப்பூர்வ ஏற்பாடாகும். இதை நாம் பட்ஜெட் உரையோடு சேர்த்து பார்க்கவேண்டும்.

தனியார்மய தாகம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இப்போது ஒவ்வொரு நிறுவனத்தையும் தனியார்மய மாக்குவதற்கான  ஏற்பாட்டை செய்து கொண்டிருக்கிறது. இந்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கும். இந்த மசோதாவின் முதற்கட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டன. வெளிநடப்பு செய்து அவைக்குள் வருவதற்குள் இந்த மசோதாவை  அரசு முன்மொழிந்து நிறைவேற்றி விட்டது. மாலை 6.30 மணிக்கு மேலும் சபை நடக்கும் என்று சொல்லி இந்த மசோதாவை நிறைவேற்றினார்கள். அதே போல் நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு மசோ தாக்களில் குறிப்பிடத்தக்க மசோதாக்களில் மோட்டார் வாகன திருத்தச் சட்டமும் அடங்கும். இம் மசோதா மாநிலங்களின் உரிமைகளில் அப்பட்டமாக கைவைக்கிறது.  இம்முறை அவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் சட்டமாக்கப்பட்ட முறை மாநிலங்களின் உரிமைகளில் மத்திய அரசு அப்பட்டமாக தலையிடுவதை காணமுடிந்தது. ஒரு பக்கம் கூட்டாட்சி  என்று சொல்லிக் கொண்டே புதிய புதிய  சட்டங்களின் மூலமாக மாநிலங்க ளை ஒரு முனிசிபாலிட்டியாக மாற்றக்கூடிய போக்கை மத்திய அரசு செய்து வருகிறது. ஒரு முனிசிபாலிட்டிக்கு இருக்கக்கூடிய அதிகாரம் தான் மாநில அரசாங்கங்களுக்கு இருக்கவேண்டும் என்று அரசு கருதுகிறது. அதில் ஒன்று தான் மோட்டார்வாகன திருத்தச்சட்டம். இந்தமசோதாவை சிபிஎம் கடுமையாக எதிர்த்தது. சில திருத்தங்களையும் முன்மொழிந்தது. இறுதியாக மசோதா நிறைவேற்றும்போது நமது திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்கு கிடைக்கவில்லை என்று சொன்னாலும் மசோதா கடுமையான எதிர்ப்புடன் தான் நிறை வேறியது. அதேபோல் ஆர்.டி.ஐ எனப்படும் தகவல்பெறும் உரிமைச்சட்டம். இந்த சட்டத்தை உண்மையான உருவத்தில்  இருந்து மேலும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளை அரசு மேற்கொண்டது.   

ஒரு மசோதா மூலமாக பல தொழிலாளர் சட்டங்களை இணைத்து ஒரே மசோதாவாக அரசு தாக்கல் செய்தது. குறிப்பாக இந்த மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு சென்ற மசோதாக்கள். ஆனால் நிலைக்குழுவின் பரிந்துரை கள் பலவும் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தமசோ தாக்களில் மாநிலங்களவையில் ஒருமசோதாவும் மக்கள வையில் இரண்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கின் றன. இதில் சில வினாக்கள் எழுகின்றன. ஏற்கெனவே பீடித் தொழிலாளர்களுக்கு என ஒரு சட்டம் இருந்தது. பீடித்தொழி லாளர்களுக்கான நிதி ஏற்பாடுகளும் இருந்தன. அது என்ன வாகும் என்பது தெரியவில்லை. அமைச்சர் பதில் சொல்லும் போது பரிசீலிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் எந்த பரிசீலனையும் இல்லாமல் சபைக்குள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படுவதை நாம் கவனிக்கவேண்டும்.

காவிரி நடுவர் மன்றத்தின்  கதி?
 

மற்றொரு முக்கியமான மசோதா மாநிலங்களவைக்கு வரவில்லை. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் தாவா பற்றியதாகும். இதற்கான அமைப்பை ஒரே அமைப்பாக மாற்றுகிறார்கள். காவிரி நடுவர் மன்றம் போல் ஐந்து ஆறு நடுவர்மன்றங்கள் நாட்டில் இருந்தன. 50 ஆண்டுகள் ஆகியும் கூட காவிரி நடுவர் மன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது உச்சநீதி மன்றத்திற்கு போய்தான் பிரச்சனைக்கு தீர்வு காணப் பட்டதே தவிர  நடுவர் மன்றம் நியாயமான முடிவை வழங்க முடிவில்லை. பல மாநிலங்கள் இடையே கடந்து வரும் நதிநீர் பங்கீடு குறித்த தாவாக்களை  தீர்ப்பதற்கான ஒரு அரசியல் உறுதி என்பதற்கு பதிலாக அதை வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் மீதோ, மக்கள் நலன் மீதோ அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குறித்த மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா என்ஐஏவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரணை நடத்தும் உரிமை  வழங்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்றங்களை அவர்க ளால் இனி உருவாக்கமுடியும். மாநில அரசுக்கு தெரியா மலேயே ஒருவரை கைது செய்யமுடியும். நீண்ட வற்புறுத்த லுக்கு பிறகு தகவல் சொல்லுவோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வெறும் தகவல்தான். அதை யொட்டி வந்துள்ள மசோதாதான் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம். இதனுடைய மிகப்பெரிய ஆபத்து என்ன வென்றால் எந்த ஒரு தனிநபரையும் அவர் பயங்கரவாதி என்று சொல்லி கைது செய்யமுடியும். இதில் பெரும்பா லான எதிர்க்கட்சிகள் இணைந்திருந்தார்கள். ஆனால் இம்மசோதா வாக்கெடுப்புக்கு வரும் போது ஆளும்கட்சி பித்தலாட்டம் செய்து ஒருபகுதி எதிர்க்கட்சிகளை தன்வயப் படுத்திக்கொண்டு வெற்றி பெற்றது. அமைப்பு மட்டுமல்ல அமைப்பில் இல்லாத ஒரு தனிநபரையும் இனி பயங்கர வாதி என்று முத்திரை குத்தமுடியும். பல நாட்களாகவே நகர்புற நக்சல் என்ற பட்டத்தை புதிதாக கண்டுபிடித்தார்கள்.அதைத்தான் இப்போது மத்திய அரசு சட்டத்திற்குள் கொண்டு வருகிறது. யாரை நினைத்தாலும் அரசு இனி கைது செய்ய முடியும்.8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து போராடி னாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி னாலும் பயங்கரவாதி என்று சொல்லமுடியும். பயங்கர வாதிக்கான இலக்கணம் எதுவுமே இனி கிடையாது. அந்த முறையில் இது ஆபத்தான சட்டம். மாநில அரசுக்கு தெரியா மல் கைது செய்த பிறகுதான் மாநில அரசின் காவல்துறை அதிகாரியோ உள்துறை அமைச்சரோ முதலமைச்சரோ தெரிந்து கொள்ள முடியும்.

மாநிலங்களின் உரிமை பறிப்பு

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு நாடுமுழுவ தும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த மசோதா மீது கூட அடிப்படையான விஷயங்களில் விவாதம் நடத்த அரசு தயாராக இல்லை. இந்த கவுன்சிலில் மாநிலங்களுடைய பிரதி நிதிகள் இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 25 பேருக்கு பதிலாக 33 பேர் கொண்ட ஒரு அமைப்பாக அது இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களை மத்திய அரசு நியமிக்கும். இதில் மாநிலங்களுக்கு பங்கு என்பது சுற்றுமுறையில் வரும். எல்லா மாநில அரசுகளும் ஒரே நேரத்தில் பிரதிநிதியாக இருக்க முடியாது.  இந்த மசோதாவில் தான் நீட் தேர்வும் இருக்கிறது. நெக்ஸ்ட் தேர்வும் இருக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து சிபிஎம் சில திருத்தங்களை முன்மொழிந்தது. நீட் தேர்வு வேண்டும் என்று சொல்லி வாக்களித்தவர்கள் 106 பேர். நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னவர்கள் 51 பேர்.   அந்த மசோதா சட்டமாக்கப்பட்டதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டி யது என்னவென்றால் இனி நீட் தேர்வு  இருக்கும். இது தமிழகத்திற்கும்  நீட்தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்க ளுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் இரு அவைகளிலும் கடுமையாக விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு அந்த சட்டத்தை தண்டனைக்குறிய சட்டமாக மாற்றியுள்ளது. பொதுவாக திருமணம் என்பது சிவில் சம்பந்தப்பட்ட ஒன்று, ஆனால் இதை மத்திய அரசு கிரிமினல் சட்டமாக மாற்றிவிட்டது. இதற்கான நியாயங்களை சொல்லி வாக்கெடுப்பும் நடந்தது. அப்போது ஆட்சியாளர்கள் மாநிலங்க ளவையில் தங்களுக்கு வேண்டிய வாக்குகளை பெற சில மாநில கட்சிகளை வளைத்துப்போட்டுக்கொண்டார்கள். 

இனி எந்த மாநிலமும்  காஷ்மீர் போல் பிரிக்கப்படலாம்

நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடரில்  கடைசியாக கொண்டுவந்த சட்டம் காஷ்மீர் சம்பந்தமான 370 சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பானது. ஒரு மாநில அரசை கலந்து பேசா மலேயே மத்திய அரசு அந்த மாநில அரசின் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு ஒரு தேர்ந்தெடுக்கப்படாத, நியமிக்கப் பட்ட ஆளுநரின் பரிந்துரையை வைத்துக்கொண்டு ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்க முடியும் என்று சொன்னால் இதுதான் அவர்கள் வருங்காலத்தில்  மாநிலங்களை  நடத்தக்கூடிய விதமாக மாறப்போகிறது.  திரிணாமுல் காங்கிரஸ் ஒவ்வொரு மசோதா மீதான விவாதத்தின் போதும் அந்த மசோதாவின் பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி அழுத்தமாக பேசினார்கள். ஆனால் மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போது வெளிநடப்பு செய்து விட்டனர். அதிமுக உறுப்பினர்கள் பல மசோதாக்கள் மீது சிறப்பாகவே பேசினார்கள். வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்பே அவர்கள் சிறப்பாக வெளிநடப்பும் செய்துவிட்டனர். ஏன் வெளிநடப்பு செய்தீர்கள் என்று கேட்டால், “மத்திய அரசு எங்களை மிரட்டுகிறது’’என்கிறார்கள். இதை நான் அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதிமுக தலைவர்களை யும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மத்திய அமைச்சர் கள் அழைத்துப்பேசுவார்கள், அவர்கள் ஒத்து வரவில்லை என்றால் முதலமைச்சரிடம் பேசி அவர்களை வெளிநடப்பு செய்ய வைத்து விடுவார்கள். இதன் மூலம் செயற்கை யாகவே ஒரு பெரும்பான்மையை மாநிலங்களவையில் பாஜக அரசு  உருவாக்கிக்கொண்டது.

மக்களவையில் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கி றது. மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடையாது, 17வது நாடாளுமன்றத்தின் துவக்கம் மிக மிக அதிர்ச்சியளிக்கக் கூடிய முறையில் தான் இருந்தது. இது தொடரும் என்று சொன்னால் நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மாநிலங்களின் உரிமைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதகத்தை ஏற்படுத்தும். பொதுவாக ஜனநாயக எண்ணம் கொண்டோர், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மக்கள் இந்த போக்கை தடுப்ப தற்கு பொங்கி எழவேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்.

சந்திப்பு: அ.விஜயகுமார்



 

;