tamilnadu

img

நெற்களஞ்சியத்தில் பருத்தி விவசாயம்... துயரம் மட்டும் மாறவில்லை... கொரோனா ஆபத்தும் துரத்துகிறது...

திருவாரூர்:

டெல்டா மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் உருவாகியுள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சனை, கட்டுப்படியாகாத விலை, உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மூன்றுபோக நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் ஒருபோக சாகுபடிக்கு மாறினர். இச்சூழலில் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் பேரில் மிகுந்த நம்பிக்கையில் பலநூறு விவசாயிகள் பருத்தி விவசாயத்திற்கு மாறினர். இந்த மாவட்டத்திற்கு பருத்தி விவசாயம் முற்றிலும் புதிது என்றாலும் நம்பிக்கையோடு களம் இறங்கிய விவசாயிகள், தற்போது “ஏன் தான் பருத்தி விவசாயத்தில் இறங்கினோமோ” என்று மிகுந்த குழப்பத்திலும் பரிதவிப்பிலும் உள்ளனர். 

தற்போது மாவட்டத்தில் பருத்தி விவசாயிகளின் நிலைமை மோசமாக இருப்பதால் பலதொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.உற்பத்தி மற்றும் வணிகம் போன்ற அனைத்தும்பிரச்சனையாக மாறியிருப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் விவசாயிகள் நூற்றுக்கணக்கில் விளைவித்த பருத்தியை விற்பதற்காக குவிவதால் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட பருத்தி விவசாயிகளின் நிலை  குறித்து அறிய மாவட்டத்தில் சில கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எஸ்.தம்புசாமி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டதலைவர் எஸ்.தம்புசாமி கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துப் போன நிலையில் இம்மாவட்டவிவசாயிகள் மாற்று சாகுபடி முறைக்கு மாறினர். அதன்படி தற்போது மாவட்டத்தில் பருத்திவிவசாயம் செய்யும் விவசாயிகள் அதிகரித்துள்ளனர். 45 ஆயிரம் ஏக்கரில் கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலைங்கமான், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. கடந்தஆண்டை விட கூடுதலான விவசாயிகள் பருத்திவிவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பருத்தி உற்பத்தி செய்வதற்கு பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு ரூ.2500, பருத்தி எடுக்க கூலி ஒரு கிலோவிற்கு 10 ரூபாய், தாட் எனப்படும் சாக்கு செலவு ரூ.40, டிரான்ஸ்போர்ட் செலவு என ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. மத்திய அரசு நீண்ட இலை ரகத்திற்கு ரூ.5 ஆயிரத்து 515 ரூபாய், குட்டை இலை ரகத்திற்கு 5 ஆயிரத்து 825 ரூபாய் பரிந்துரை விலையாக அறிவித்துள்ளது. ஆனால் அரசுவேளாண்மைத்துறை ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 600 ரூபாய் என்ற அளவில் ஏலம் கோரப்பட்டுள்ளது. தனியார்வியாபாரிகள் 3 ஆயிரத்து 200 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகின்றனர். வியபாரிகள் தங்களுக்குள் ‘சிண்டிகேட்’ அமைத்துக் கொண்டு விவசாயிகளை சுரண்டுகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் ஓய்வு எடுப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. பலமுறை இதுகுறித்துஅரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தமுன்னேற்றமும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

பருத்தி விவசாயி செந்தில்
கொரடாச்சேரி ஒன்றியம், மணக்கால் அய்யம்பேட்டை மூலங்குடி பகுதியைச் சார்ந்த பருத்தி விவசாயி கே.செந்தில் கூறும் போது,பணப்பயிர் என்ற அடிப்படையில் பருத்தி சாகுபடிக்கு மாறினோம். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் வரை செலவாகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் மருந்து அடிக்க வேண்டியிருக்கும். யூரியா தட்டுப்பாட்டின் காரணமாகஒரு மூட்டை 450 ரூபாய் கொடுத்து தெளித்துள்ளேன். மத்திய - மாநில அரசுகள் நிர்ணயித்த விலை எங்களுக்கு கிடைக்கவில்லை. தனியார் வியாபாரிகள் கிலோ 28 ரூபாய் வரை தான்கேட்கிறார்கள். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தியை கொண்டுபோய் சேர்த்துவிற்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நெல் கொள்முதல் செய்வதை போலபருத்தி கொள்முதல் செய்வதற்கும் பருத்தி விளையும் ஏக்கருக்கு ஏற்ப இரண்டு மூன்று கிராமங்களை இணைத்து பருத்தி கொள்முதல் நிலையங்களை அரசு உருவாக்க வேண்டும். மேலும் அரசே பருத்தி மூட்டைகளுக்கு சாக்கு (தாட்) வழங்க வேண்டும். கொள்முதலில் தேக் கம் இல்லாமல் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு பருத்தி விற்பனை  செய்ய சென்றால் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் விவசாயிகள் குவிவதால் கோயம்பேட்டைப் போல நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகிறது என்றார்.

பருத்தித் தொழிலாளர்கள்
பருத்தி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களான முத்தையா, ஆத்தாபொண்ணு, மலர், செல்லம்மாள், ராதிகா ஆகியோர் ஒரே குரலில், எங்களுக்கு கூலி கட்டுப்படியாகாது. ஒரு கிலோ பருத்தி எடுப்பதற்கு எட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். அதற்கு பதிலாக 10 ரூபாய் கொடுக்க வேண்டும். விவசாயிகள்  சம்பளம் அதிகம் கொடுக்கவிரும்பினாலும் அவர்களுக்கு பருத்தி விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் அதிகமான சம்பளம் கொடுக்க முடியவில்லை. மேலும் தற்போதுள்ள கொரோனா நோய்க் காலத்தில் வேலை வாய்ப்புகளை இவர்கள் தான் கொடுத்துகொண்டிருக்கிறார்கள். கடந்த 3 மாதகாலத் திற்கு மேலாக வேலை இல்லாமல் “அரை வயிற்றுக்கும், கால் வயிற்றுக்கும்” கஞ்சி குடித்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் மனது வைத்து விவசாயிகளுக்கு நல்லது செய்தால் எங்களுக்கும் நியாமான கூலி கிடைக்கும் என்றனர். 

செ.மு.ராமமூர்த்தி
திருவாரூர் மாவட்ட விவசாய இயக்க முன்னோடியான செ.மு.ராமமூர்த்தி கூறுகையில், மிகுந்த நம்பிக்கையோடு பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட இம்மாவட்ட விவசாயிகள் அரசின் “கொள்கையற்ற கொள்முதல் கொள்கையால்” தனியார் வியபாரிகளின் ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை பாதைக்குச் சென்றுவிடுவார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. மத்தியஅரசு ஜவுளித்துறையின் கீழ்செயல்படும் காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 35 சதவீதம் அளவிற்கு பருத்தி கொள் முதல் செய்கிறது. மீதமுள்ள பருத்தியை தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். அரசின் துறைக்குள் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வது என்பது அதிகாரிகளின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. மேலும் தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் நெல் விவசாயிகளை போல பருத்தி விவசாயிகளும் பாதிப்பிற்குள்ளகின்றனர். ஈரப்பதத்தை காரணம் காட்டி விலை குறைக்கப்படுகிறது. அரசின் பாதுகாப்பற்ற நடவடிக்கையின் காரணமாகவே பருத்தி பாழாகிறது. எனவே பருத்தி தரமற்றதாக ஆவதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். தனியார் வியபாரிகள் முற்றிலுமாக பருத்தி ஏலத்தில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். திருவாரூரிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்களில் விவசாயிகள் நாட்கணக்கில் காத்து கிடப்பதை நேரில் காணமுடிகிறது. இதுகுறித்து விற்பனை கூட செயலாளரை தொடர்பு கொண்ட போது ஞாயிற்றுக் கிழமை இரவிற்குள்ளாக அனைத்து விவசாயிகளின் பருத்திகளும் எடுத்துக் கொள்ளப்படும். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

===எஸ்.நவமணி===

;