tamilnadu

img

தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே... அம்பலப்படுத்துகிறது ‘தி கேரவன்’ ஏடு...

ஷதாப் ஆலம், 2020 பிப் 24 ஆம் தேதி தனது நாளை வழக்கம் போல் தொடங்கினார். அவர் வடகிழக்கு தில்லியிலுள்ள பழைய முஸ்தபாபாத்தில், கடந்த 5 வருடங்களாக வசித்து வரும் தனது வீட்டில் இருந்து காலை10 மணிக்கு, வசிராபத் சாலையில், பிரிஜ்ஜிபூரி சவுக்கில் உள்ள, சாம்ராட் மெடிக்கல் ஸ்டோர் நோக்கி புறப்பட்டார். அவர் அந்த மருந்து கடையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்தார், ஒவ்வொரு நாளும்காலையில் அந்த கடையைத் திறப்பது அவரது வேலை.

அதற்கு முந்தைய நாள் மதியம், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கபில் மிஸ்ரா, ஜப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பு மதவெறி கொழுந்து விட்டெரியும் பேச்சை பேசியிருந்தார். அந்த ரயில் நிலையம் அந்த கடையிலிருந்து சில கி.மீ. தூரத்தில்தான் இருந்தது. அந்த மெட்ரோ நிலையத்தில் நூற்றுக் கணக்கானபெண்கள் கடந்த ஆண்டு நரேந்திர மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கும்(சிஏஏ) தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும்(என்.ஆர்.சி) எதிராக தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

சிஏஏ, என்.ஆர்.சி. க்கு எதிராக போராட்டஅலைகள் தில்லியில் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது, நாடு முழுவதும் இந்த போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த போராட்டங்களில் இஸ்லாமியர்கள் பெருமளவில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், புதிய சட்டத்தின்விளைவாக இந்திய குடியரசில் தங்கள் நிலைஅச்சுறுத்தலுக்கு உள்ளானதாக கருதினர். பாஜகவும் இதர இந்துத்வா குழுக்களும் இந்த போராட்டங்களை இழிவுபடுத்தினர், ஏராளமான இடங்களில் இந்த போராட்டங்கள் மிரட்டல் களுக்கும் வன்முறைக்கும் உள்ளாகின. வடகிழக்கு தில்லியின் காவல்துறை துணை ஆணையர், பாஜக தலைவர்களில் மிஸ்ராவுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அவரைப் பார்த்து, ஜாப்ராபாத்திலும் அருகில் உள்ள சந்த் 
பாக்கிலும் உள்ள போராட்டக்காரர்களை காவல்துறை கலைத்து விரட்டாவிட்டால், “நாங்கள் வீதிகளில் இறங்குவோம்” என்று கூப்பாடு போட்டார்.

கபில் மிஸ்ராவின் பேச்சுக்குப் பிறகு முந்தைய நாள் இரவு அந்த பகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் என்பதை ஆலம்அறிந்திருந்தார், என்றாலும், அந்த கலவரங்கள் அதற்கு மேல் வளரும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை. அவர் மருந்துக் கடையில் சில மணி நேரம் வேலை செய்துவிட்டு, கசாப்பூரா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைக்காக கிளம்பி சென்றார். அவர் திரும்புவதற்கு முன் அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம், முஸ்லிம்கள் மீண்டும் தாக்கப்படுவதாக பதற்றத்துடன் தெரிவித்தார். ஆலம் வழக்கமாக வரும்பாதையை தவிர்த்து சுற்றி வரும் பாதை மூலமாக மீண்டும் கடைக்கு மதியம் 3 மணிக்கு வந்தார்.

வெகுவிரைவில் அந்த பகுதியில் பெரிய சத்தங்கள் கேட்டது. அந்த பக்கமாக சென்றவர்கள் வரக்கூடிய ஆபத்து குறித்து எச்சரித்தனர். அந்த கடையின் முதலாளி அனுராக் கய், கடையை உடனே அடைத்துவிட்டு கடையின் 4 சிப்பந்திகளோடு கடையின் மொட்டை மாடிக்கு சென்றார். அவரின் சிப்பந்திகளில் ஆலம் தவிர நவ்வியத், அக்யூப் ஆகிய இருவரும் இஸ்லாமியர்கள்.சிறிது நேரத்தில், சில போலீஸ்காரர்கள் பக்கத்து கட்டிடத்தின் மேல்மாடிக்கும் அவர்கள் இருந்த மேல் மாடிக்கும் இடையில் இருந்த சிறிய கதவின் அருகில் தோன்றி,  கய் மற்று ம் அவரின்  சிப்பந்திகள் இருந்த மாடிக்கு மேலேறி வந்தனர். அவர்களை உள்ளே அனுமதித்ததும் நடந்த விபரங்களை கய் தனது சத்திய வாக்கு மூலத்தில் விவரித்துள்ளார். அவர் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளபடி நடந்த விஷயங்கள்: காவல்துறையினர் முஸ்லிம் சிப்பந்திகளை சுற்றி வளைத்தனர். கய் அந்த காவல்துறையினரிடம், தனது சிப்பந்திகள் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் எந்த கலவரத்திலும் ஈடுபடவில்லை என கெஞ்சிக் கொண்டிருந்த போதே காவல்துறை அந்த சிப்பந்திகளை இழுத்து சென்றுவிட்டது. அவர் கீழே இறங்கி ஓடிப் பார்த்த போது காவலர்கள் அந்த சிப்பந்திகளை காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றுவிட்டனர்.

கய்யிடம், அருகில் இருந்த தயால்பூர்  காவல்நிலையத்திற்கு வந்து அவர்களை விடுவித்து செல்லலாம் என்று தெரிவித்து சென்றனர். அவர் அங்கு சென்றார், தொடர்ந்து 3 நாட்கள் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. எந்த காரணத்திற்காக ஆலம் கைது செய்யப்பட்டார் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை, எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் தெரி விக்கவில்லை. ஆலமின் சகோதரர் பலமுறை காவல்நிலையத்திற்கு சென்றார். ஆனால், அவராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

===பிரபி ஜித் சிங், அர்சு ஜான்===

தொடரும்...

                                                                                                                  ****************

தலைநகர் தில்லியின் வடகிழக்குப் பகுதியில் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் - கலவரம் தொடர்பான வழக்குகள் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த வழக்குகளில், கொடிய குற்றங்களைச் செய்த - வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்ட - 53 பேர் உயிர் பறிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்களின்அட்டூழியத்தை திட்டமிட்டு மறைப்பதற்கு முயற்சி நடக்கிறது. அதேவேளை, இந்த வன்முறை வெறியாட்டங்களை தூண்டிவிட்டதாகக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், பொருளாதார அறிஞரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெயதி கோஷ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது தில்லி மாநகர காவல்துறை பொய்களைப் புனைந்து, சதி வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், வடகிழக்கு தில்லியில் கலவரத்தை தூண்டியதும், நடத்தியதும் அப்பாவிகளின் உயிர்க் குடித்ததும் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே தனது விரிவான கள ஆய்வு மூலம் ‘தி கேரவன் இதழ்’ வெளிக்கொண்டுவந்துள்ளது. இதற்காக இந்த ஏட்டின் மீதும் குற்றவியல் வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது. எனினும் கேரவன் இதழின் அக்டோபர் பதிப்பில் அந்த புலனாய்வு முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. அதை தீக்கதிர் வாசகர்களுக்கு தமிழில் தருகிறார்

===தூத்துக்குடி க.ஆனந்தன்.===

;