tamilnadu

img

புரட்சி என்றைக்கும் அழியாது...

“சே” எனும் அந்த சொல் - பயன்படுத்தப்படும் இடத்தாலும், உச்சரிக்கப்படும் முறையாலும் - ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அங்கீகாரம் அல்லதுஆட்சேபம் போன்ற மானுட உணர்வுகளின் ஒட்டு மொத்த பல வண்ணச் சித்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல்லாகும். இந்த வியப்புக் குறியீட்டுச் சொல்லின் மேல் கொண்ட காதலின் காரணமாகத்தான், கியூப புரட்சியாளர்கள் டான் எர்னஸ்டோவின் மகனாகிய எர்னஸ்டோவை “சே”என்று செல்லப் பெயர் சூட்டியழைத்தனர். இந்தச் செல்லப்பெயர் காலத்தை வென்று அவரது புனைப் பெயராயிற்று. அவரது பெயரோடு பிரிக்க முடியாத வண்ணம் இறுக்கமாக இணைந்து கொண்டது. கியூபா மட்டுமல்ல, உலகமெங்கிலும் அவர் எர்னஸ்டோ சேகுவேரா என்றே அறியப்படுகிறார்.

“சே” தெளிந்த சிந்தனை மிக்கவன், தன்னலம் மறுக்கும்பிடிவாதம், ஆஸ்துமா நோய்க்கே உரிய மூச்சு இறைப்பு, அகன்ற நெற்றி, அடர்ந்த முடி, உறுதியான முடிவுகள், பலம் மிகுந்த தாடை, அமைதியான நடவடிக்கைகள், உணர்ச்சி மிகுந்து ஊடுருவிப்பார்க்கும் பார்வை, ஆழ்ந்த தொனி, கம்பீரமான குரல் இவைகளுக்கு சொந்தக்காரன்.

எனது மகனின் நரம்புகளில்...
சேகுவேராவைப் பற்றி அவர் தந்தை கூறுகிறார்: “எனது மகனின் நரம்புகளில் அய்ரிஷ் புரட்சியாளர்கள், ஸ்பானிஷ் வீரர்கள், அர்ஜெண்டினா தேசபக்தர்கள் ஆகியோரின் ரத்தம் பாய்ந்திருந்தது. ஒருபோதும் ஓய்ந்தே இராத தமது மூதாதையர்களிடமிருந்து பல அம்சங்களை “சே” மரபுச் செல்வமாக பெற்றிருந்தான். தூர தேசங்களில் அலைந்து திரியும், அபாயகரமான சாகசங்களில் ஈடுபடவும், புதிய கருத்துக்களை கண்டுகொள்ளவும் அவனது இயல்பிலேயே சில அம்சங்கள் காரணமாக இருந்தன. அவன் நேர்மையான மனிதன். உண்மையான போர் வீரன்.” 

சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்ட சேகுவேரா, பள்ளிக்கூடத்தில் கூட சேர்க்க முடியாத நிலையிலிருந்தான். இதனால் வீட்டில் வைத்தே இரண்டு வருடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டான். தனது வாழ்வின் இறுதி காலம் வரை அவன் படிப்பதில் பேரார்வம் மிக்கவனாக விளங்கினான். பொலிவியாவில் போராடுகிறபோதும், எதிரிகல் தேடப்பட்ட போதும், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட போதும் “சே” எதையேனும் படித்துக் கொண்டே இருந்தான். குழந்தை பருவத்திலிருந்தே அவன்கவிதைகளை நேசித்தான். சிலிக்குயில் பாப்லோ நெரூடாவின் கவிதைகளை மனப்பாடம் செய்து வைத்திருந்தான். நிறைய கவிதைகளை எழுதிக்குவித்தான். அவன் தன்னை ஒருபோதும் கவிஞன் என்று கருதியதில்லை. அவன் தன்னை ஒரு புரட்சிக்காரன் என்று அழைத்துக் கொண்டான். கியூபாவை விட்டு கடைசியாக வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன் தன்னிடமிருந்த ஸ்பானிஷ் கவிதைகளின் தொகுப்பு ஒன்றைப் பெற்று அதிலிருந்து நெரூடாவின் “விடை பெறுகிறேன்” என்ற கவிதையைப் பிரதி எடுத்துக் கொண்டான். மரணிக்கும் வரை அவன் கவிதையைப் பிரிந்து இருந்ததில்லை. 

“சே” ஒரு சாகசப் பிரியன்; தன்னம்பிக்கையும், எல்லாம்நன்றாகவே முடியும் என்ற நன்னம்பிக்கையும் உடையவன். வெடிப்புறப் பேசும் இயல்பு கொண்டவன். சுருக்கெனதைக்கும்படி கேளிப் பேசக் கூடியவன். ஒரு தோழனுக்காக இறுதிவரை சளைக்காமல் உடன் நிற்கும் குணம் கொண்டவன். 

‘உண்மையான கதாநாயகன்’
புரட்சிகர அரசியல்வாதிகள், துறவிகள் போல் வாழவேண்டும் என “சே” அடிக்கடி கூறுவார். எப்போதும்போலவே லௌகீக சுபாவங்களை பொருட்படுத்தாதவராகவும், எளிமையானவராகவும் விளங்கினார். தமது திசைநோக்கி வந்த புகழையும், பிரபலத்தையும் அவர் நகைச்சுவை உணர்வோடு ஏற்றுக் கொண்டார். கியூப புரட்சியின் நாயகர்களில் ஒருவராகவும், கியூபாவின் அமைச்சராகவும் இருந்த போதும் எளிமையாகவே தொடர்ந்து வாழ்ந்து வந்தார். மிகச் சிறு வசதிகளைக் கூட ஏற்க மறுத்தார். புரட்சி அவரை இரும்புக் கவசம் பூண்ட போர் வீரனாக மாற்றிவிட்டது.

லத்தீன் அமெரிக்க மக்களின் விதியை மாற்றி எழுத வேண்டுமானால், வறுமை - கொடுங்கோல் ஆட்சி ஆகியவற்றிலிருந்து அவர்களை காக்க வேண்டுமானால், ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமானால் - ஒரு சமூகப் புரட்சியை நடத்தி தீயை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்றார். இதற்காக லத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அங்கு தான் கண்ட கொடுமைகளை எல்லாம் உணர்ந்து, சமூக நீதி நிலை நிறுத்தப்பட வேண்டுமானால் சமூக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும் என உறுதி பூண்டார். கரும்புக் களஞ்சியமாக விளங்கும் கியூபாவில் ஒருபுரட்சிகர யுத்தம் நடக்கும் என்றும், உலகின் மேற்குபுறத்தில் சோசலிசக் கொடி பட்டொளி வீசி பறக்கும் முதல் நாடாக கியூபா மலரும் என்றும், அந்த நாட்களில் “சே” கருதிப் பார்த்திருக்கவில்லை.கியூப புரட்சி வெற்றி பெற்று, புரட்சிக்காரர்களின் தலைவர்களை வரவேற்க தெருக்களில் மக்கள் பெரு வெள்ளமாய் திரண்டிருந்தனர். அங்கே உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ,பாடிஸ்டாவிற்கு எதிராக நடந்த புரட்சிகரயுத்தத்தின் உண்மைக் கதாநாயகன் “சே” என புகழ்மாலை சூட்டினார்.

கியூபப் புரட்சியில் ஆயுதங்களை கையிலேந்தியவாறு இருந்த “சே” தனக்கே உரித்த தனித் தன்மையோடு இலக்கியஅரசியல் விமர்சனப் பணியினை செய்தார். பல்வேறு வடிவங்களில், பல்வேறு விஷயங்கள் பற்றி “சே” எழுதினார். கொள்கை பற்றிய கட்டுரைகள், போராட்ட உத்தி பற்றிய கட்டுரைகள், கொரில்லா யுத்தத் தந்திரங்கள் பற்றிய கட்டுரைகள் பாடிஸ்டாவுக்கு எதிராக நடத்தப்பட்ட கொரில்லா யுத்தம் பற்றிய நினைவுக் குறிப்புகள் இவைகளை லத்தீன் அமெரிக்க இலக்கியத்துக்கே உரிய செழுமையான மரபின்வழி நின்று எழுதினார். இவர் எழுதிய “பொலிலியன் டைரி” மிகவும் புகழ் பெற்ற படைப்பாகும். அவர் எழுதிய சகல விஷயங்களின், பேசிய பேச்சுக்களின், ஆற்றிய பணிகளின் லட்சியம் ஒன்றே ஒன்றுதான் - அதன் பெயர் “புரட்சி”

சோவியத் ஒன்றியமும் கியூபாவும்
கியூப புரட்சிக்குப் பின்னர், கியூபா சோவியத் யூனியனோடு நட்புறவு கொள்ள வேண்டும் என்று கூறிய முதல் கியூபத் தலைவர் “சே” தான். சோவியத் யூனியனோடு நட்புறவு கொண்ட பின் அந்த உறவைப் பலப்படுத்தவும், வளர்க்கவும் கடுமையாக உழைத்தார். “சோவியத் ரஷ்யாவின் மண்ணை மிதித்த நிமிடத்திலிருந்து, சோவியத் யூனியன் உலகத்தில் சோசலிசத்தின் தாயகமாக விளங்குகிறது என்று ஆயிரம் முறை கூற வேண்டும் போல் எங்களுக்கு தோன்றுகிறது” என்று பெருமிதப்பட்டார் “சே”. ஐக்கிய நாடுகள் அவையில் சோவியத் யூனியன் முன்வைத்த உலகு தழுவிய ஆயுதக் குறைப்பு என்ற திட்டம் குறித்து “சே” கூறினார்: “ஆயுதங்களுக்காக செலவழிக்கப்படுகிற பணத்தை மூலதனம் தேவைப்படுகிற நாடுகளுக்கு கொடுத்து உதவலாம். வேறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளிடையே சமாதான சக வாழ்வு என்பதே எங்கள் நோக்கம். சமாதானத்தை ஏற்றுக் கொள்கிற யாரோடும் நாங்கள் சமாதானமாக இருக்கத் தயார். ஆனால், சில காலத்திற்கு நாங்கள் எங்கள் கையில் இருக்கும் துப்பாக்கிகளை கீழே எறிய மாட்டோம். ஏனெனில் எங்களது எல்லைகளைக் கடக்கத் துடிக்கும் எதிரிகளிடமிருந்து நாங்கள் இந்தத் துப்பாக்கிகள் மூலம்தான் எங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள முடியும். எதிர்ப்புரட்சி வன்முறையை, புரட்சிகர வன்முறை மூலம்தான் அடக்க முடியும் என்பது யாவரும் அறிந்ததே. எங்கள் தீவை அடிமைப்படுத்தும் பொருட்டு எங்களுக்கு எதிராக தங்களது ஆயுதத்தை உயர்த்துகிறவர்களை நாங்கள் ஆயுதத்தின் மூலம்தான் விரட்டியடிப்போம்”.

240 மணி நேர உழைப்பு
காலனி ஆதிக்க மரபுக்கு மாறுபட்டது உழைப்பு தானமுறை, சே, தானே முன்னுதாரணமாக திகழும் பொருட்டு கரும்பு அறுவடை செய்தார். கப்பல்களிலிருந்து சரக்குகளை இறக்கினார். தொழிற்சாலையை சுத்தம் செய்தார். வீடுகள் கட்டும் பணியில் பங்கேற்றார். ஒரு கால் வருடத்தில் 240 மணி நேரம் உழைப்பு தானம் செய்தமைக்காக அவருக்கு “கம்யூனிசத்திற்காக உழைத்த தொழிலாளி” என்ற பட்டம் 1964 ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது.உற்பத்தி இலக்குகளை முறையாக எய்தியவர்கள், உழைப்பு தானத்தில் ஈடுபட்டவர்கள் கல்வியறிவை உயர்த்திக் கொண்டவர்கள், புரட்சியை பாதுகாக்கும் குழுவில் உறுப்பினராக இருந்து செயல் துடிப்போடு பணியாற்றியவர்கள் ஆகியோர் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக விண்ணப்பிக்க முடியும் என்பது கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் விதியாக இருந்தது. பல்வேறு தொழிற்சாலைகளில் உழைப்பு தானம் செய்கிற போது “சே” அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களோடு பழகினார். பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்களோடு பேசினார்.அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு தனது அறிவை விரிவு செய்தார்.

எங்கெல்லாம் ஏகாதிபத்தியம் இருக்கிறதோ...
கியூபப் புரட்சி வெற்றி பெற்று ஆட்சியதிகாரம் தொழிலாளி வர்க்கத்தின் கைக்கு வந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுமையும் தொழிலாளி வர்க்கத்தின் கைக்குவரவேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் “சே” வின் இறுதி லட்சியம். பொலிவியா நாட்டு விடுதலை வேட்கை இவரை அழைத்தது. கட்சித் தலைமை, மந்திரி பதவி, மேஜர் பொறுப்பு இவைகள் தனது லட்சியத்திற்கு சுமை என உணர்ந்தார். தனது புரட்சிகர “ரொசினென்ட்” குதிரையில் ஏறிக்கொண்டு செயலில் இறங்க துடித்தார். வெடி குண்டுகளும், மருந்துகளும், புத்தகங்களும் நிறைந்து கனக்கும் “முதுப்பை” யை சுமக்க முதுகு துடித்தது. துப்பாக்கியை சுமக்க வேண்டி அவரது தோள்கள் தினவெடுத்தன. பொலிவியா நோக்கி புறப்பட்டார் சே. அடுத்த புரட்சி அவரை அறைகூவி அழைத்தது. எங்கெல்லாம் ஏகாதிபத்தியம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்துப் போரிடும் புனிதப் பணியில் இறங்குகிறேன் என்று உணர்வோடு புதிய யுத்த களம் நோக்கி புறப்பட்டார் “சே”.

கியூபா மண்ணை பிரிந்து செல்கையில் “சே” தனது மாபெரும் தலைவன் பிடல் காஸ்ட்ரோவுக்கு உணர்ச்சிப் பூர்வமான ஒரு கடிதத்தை எழுதினான்: “நான் ஒரே நேரத்தில் மகிழவும், துக்கப்படவும் செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தங்களது மகனாக என்னை ஏற்றுக்கொண்ட அந்த மக்களை விட்டுப் புறப்படுகிறேன். இது என்னை வேதனைப்படுத்துகிறது. நீங்கள் என்னுள் ஊன்றிய நம்பிக்கை விதையையும், எனது மக்களின் புரட்சிகர ஆன்மாவையும் நான் என்னோடு எடுத்துக் கொண்டு புதிய யுத்தக் களத்தில்இறங்குகிறேன். எங்கெல்லாம் ஏகாதிபத்தியம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்துப் போரிடும் புனிதப் பணியில் இறங்குகிறேன் என்ற உணர்வோடு புதிய களம் நோக்கி புறப்படுகிறேன். இந்த உணர்வு என்னுள் மூண்ட வேதனையைப் பன்மடங்கு குறைக்கிறது. நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயங்களுக்காகவும், எனக்கொரு உதாரணப்புருஷராக திகழ்ந்ததற்காகவும் நன்றிகூறுகிறேன். இறுதி வரை உங்களுக்கு உண்மையுடையவனாக இருக்க முயலுவேன். நான் எங்கே சென்றாலும் ஒரு கியூபப் புரட்சிக்காரன் என்ற முறையில் என் பொறுப்புகளை நான் எப்போதும் உணர்ந்திருப்பேன். எனது குழந்தைகளையும், எனது மனைவியையும் நான் இங்கே விட்டுச் செல்கிறேன். அவர்களுக்கு என்று நான் எந்தவொரு சொத்தையும் வைத்துச் செல்லவில்லை. ஆனால் அது குறித்து நான் விரக்தியடையவில்லை. மாறாக மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் வாழ தேவையானவற்றை அரசு அவர்களுக்கு வழங்கும் என்பதாலும், அவர்களுக்கு கல்வி கொடுக்கும் என்பதாலும் அவர்களுக்காக நான் எதையும் கேட்கமாட்டேன். எப்போதும் வெற்றியே பெறுவோம்! தாய் நாட்டின் விடுதலை அல்லது வீரமரணம். உண்மையான புரட்சிகர ஊக்கத்தோடு உங்களை ஆரத் தழுவுகிறேன்.”

கடிதத்தை படித்து முடித்தபிறகு பிடல் கூறினார்: புரட்சிக்காரர்கள் இதயமற்றவர்கள். உணர்வற்றவர்கள், சூடற்றவர்கள் என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்கள் இந்த கடிதத்தை படிக்கட்டும். ஒரு புரட்சிக்காரன் இதயத்தில் மறைந்துள்ள வாய்மைக்கும், உன்னதத்திற்கும் இந்தக் கடிதம் ஒரு எடுத்துக்காட்டு: 

ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடுவதனை “சே” புனிதமான கடமை என்று கருதியதால் மட்டுமின்றி, அந்த யுத்தத்தில் தானே கலந்து கொள்ள வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாக விரும்பியதன் காரணத்தால்தான் அவர் கியூபாவை விட்டு புறப்பட்டார். சிஐஏவும், அதோடு இணைந்த உளவு நிறுவனங்களும் ஒன்றரை ஆண்டு காலமாக எந்த மனிதனைத் தேடி வந்தார்களோ, அந்த மனிதன் “சே” பொலிவியாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தது மிகப்பெரும் சாதனை.
முப்பதிலிருந்து ஐம்பது பேர் வரை இருந்தால் போதும்,இந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, லத்தீன் அமெரிக்காவின் எந்த நாட்டிலும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆரம்பித்துவிடலாம் எனச் சொல்வார் “சே”. கொரில்லாக்கள் கூட்டம் கூட்டப் பெற்றது. குழுவிற்கு“பொலிவிய தேச விடுதலை இராணுவம்” எனப் பெயரிடப்பட்டது. மக்கள் மத்தியில் படித்துப் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு மாத காலமாக கொரில்லா நடவடிக்கைகள் தொடர்ந்தது. ஆனால் விவசாயிகள் ஆதரவு கிட்டவில்லை. கொரில்லா போர் வெற்றி பெறுவது விவசாயிகள் காட்டும் ஆதரவில்தான் என்பதை “சே” அறிந்திருந்தார். ஒரு வகையில் பொலிவியப்புரட்சி தோல்வி கண்டது. பொலிவியப்புரட்சியின் தோல்வி குறித்து “சே” சொன்னார்:  “நான் தோற்றுப் போகலாம்; அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேருண்டு. ஆனால் இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது.”

கட்டுரையாளர் : நாகைமாலி, சிபிஐ(எம்), நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்

;