tamilnadu

img

செங்கொடி காத்த புரட்சியாளர் தோழர் ஜி.எஸ்.மணி நினைவு தினம்..

தோழர் ஜி.எஸ்.மணி நம்மைவிட்டு பிரிந்து 40 ஆண்டுகள்கடந்து விட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் மனதை விட்டு விலகாத தலைவர் ஜி.எஸ். மணி என்பதில் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையடைகிறது. ஆம், இன்று புதிய தலைமுறை ஜி.எஸ்-ஐ தேடுகிறது. காரணம் அவர் வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது.

“நீல திரைக்கடலோரத்தில் நித்தந்தவஞ்செய் குமரி” என்று மகாகவியின் கவிதைவரிகளால் புகழ்ந்துரைக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம். இம்மண்ணில் பிறந்துபுகழ் பெற்ற தமிழ் இலக்கணம், இலக்கியம்எது குறித்தும் ஒரே நேரத்தில் நூறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் படைத்த சதாவதானி செய்குதம்பி பாவலர், மனிதநேய பண்பாளர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழக தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரும் தனது பேச்சாற்றல், எழுதும் புலமையால் பல்லாயிரக்கணக்கானோரை சுதந்திர போராட் டத்திற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஈர்த்த ப.ஜீவானந்தம், நாடக கலையின் மூலம் சமூக சீர்திருத்த கருத்துகளையும், சுதந்திர போராட்ட லட்சியத்தையும் பரவச் செய்த டி.கே.சண்முகம் சகோதரர்கள் போன்ற தவப்புதல்வர்கள் பிறந்த குமரி மண்ணில் உழைப்பாளிகளுக்காக ஏழை- எளிய விவசாய மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தொண்டால் பொழுதளந்த தூயோன். கொடிய சிறைவாசம்- விவரிக்க இயலா சித்திரவதைகளை தாங்கிய ஓர் அரிய மனிதன் ஜி.எஸ்.மணி.

முதலாவது மாவட்டச் செயலாளர்
ஞானசிகாமணி என்கிற இயற்பெயர் கொண்ட தோழர் ஜி.எஸ்.மணி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் 1911 ஆம்ஆண்டில் பிறந்தார். பள்ளிப் படிப்பைமட்டுமே முடித்த ஜி.எஸ்.மணி சிறுவயதிலே அச்சக தொழிலில் ஈடுபட்டார். அந்தநேரத்தில் மக்களுடனான தொடர்பு அதிகரித்தது. குறிப்பாக தோட்ட தொழிலாளர் பிரச்சனையில் அவருக்கு ஈடுபாடு அதிகரித்தது. இக்காலத்தில் திருவிதாங்கூரின் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்களோடும் தொடர்பு ஏற்பட தொடங்கியது. 
பி.டி.புன்னூஸ், எம்.என்.கோவிந்தன் நாயர், கே.சி.ஜார்ஜ் ஆகியோர் அடிக்கடி குமரி மாவட்டத்திற்கு வந்து ஜி.எஸ்.மணியுடன் சேர்ந்து தோட்ட தொழிலாளர் சங்கத்தை அமைத்தனர். 1942 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை மார்த் தாண்டத்தில் உருவாக்கப்பட்டது. 1947-இல் ஒரு முறையான மாவட்டக்குழுவின் செயலாளராக ஜி.எஸ்.மணி தேர்வு செய் யப்பட்டார். ஜி.எஸ்.மணியின் அரசியல் போராட்டம் தேச விடுதலை போராட்டம், தாய் தமிழக இணைப்பு போராட்டம், விடுதலைக்கு பின்தோட்ட தொழிலாளர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, ஏழைமக்களின் குடியிருப்பு பிரச்சனை, நிலப் போராட்டம் எனஅவரது பங்களிப்பு மகத்தானது. பனையேறும் தொழிலாளர் சங்கம், கயிறு தொழிலாளர் சங்கம், முந்திரி தொழிலாளர் சங்கம்,மீன்பிடி தொழிலாளர் சங்கம் என பல்வேறுஅமைப்புகளை உருவாக்கி தலைமை பொறுப்பு ஏற்று போராட்ட களங்களை உருவாக்கினார். 
மன்னர் ஆட்சியை ஒழிக்கவும், தாய்தமிழகம் உருவாக்கவும் போராடி பலமுறை திவான் சர் சி.பி.இராமசாமி அரசின்அடக்குமுறைக்கு ஆட்பட்டு சிறையில்அடைக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து மாவட்ட மக்களின் தலைவராக பரிணமித்தார். அவர் மட்டுமின்றி அவர் குடும்பத்தினரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அடக்குமுறைகளை எதிர் கொண்டனர். 

சட்டமன்ற உறுப்பினராக
1962-ல் விளவங்கோடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 21388 வாக்குகளை பெற்று மாவட்ட மக்களை ஆச்சரியப்படுத்தினார். 1977ல் விளவங்கோடு தொகுதியில் பெரும்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றம் சென்றார். சட்டமன்றத்தில் அவரது குரல் தமிழக மற்றும் குமரி மாவட்ட வளர்ச்சிக்கும், பாடுபடும் உழைப்பாளி மக்களின் குரலாகவும் ஒலித்தது. தொழிலாளி வர்க்கத்திற்கு அமைப்பைத்தவிர வேறு ஆயுதம் இல்லை என்கிறார் லெனின். ஜி.எஸ்.மணியும் லெனின் கூற்றுப்படி மாவட்டம் முழுவதும் நகரம் கிராமந்தோறும் கட்சியின் அமைப்பை கட்டுவதிலும், தொழிற்சங்கம், விவசாய சங்கம் போன்ற அமைப்புகளை கட்டுவதிலும் அக்க
றையுடனும், அர்ப்பணிப்புடனும் அதிக கவனம் செலுத்தினார்.

ஒரு புரட்சிக்காரனுக்கு தேவையான அனைத்து செயல்பாடுகளும் கொண்டவராக ஜி.எஸ்.மணி திகழ்ந்தார். எனவே அவர்கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கம்யூனிஸ்ட் தலைவர்களை உருவாக்கினார். ஜி.எஸ்.மணியின் தியாகத்தால் ஈர்க்கப்பட்டகுமரி மாவட்ட மக்கள் மாவட்டம் முழுவதும் செங்கொடியை பறக்க விட்டனர். இன்றும் மாவட்டம் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகவே உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று மக்களை சவக்குழிக்கு அனுப்பும் அவலத்தை விடகன்னியாகுமரி மாவட்டத்தை மிக மோசமான பயங்கரவாத ஆர்எஸ்எஸ் வைரஸ் மதவெறி, பொய், பித்தலாட்டம், ரவுடித் தனம் போன்றவற்றால் சாகடிக்க வந்துள் ளது. வளர்ச்சி இல்லை, அமைதியில்லை, இளைஞர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க விடுவதில்லை. இந்துமதம் என்ற ஒரு மாய முகமூடியை அணிந்து மக்களை அடிமைகளாக்கி இந்தியாவை பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு விற்பனை செய்யும் கைக்கூலிகளுக்கு உதவும் வகையில் அப்பாவி இந்து நம்பிக்கையாளர்களையும் இளைஞர்களையும் மாற்றுகின்றனர். இடதுசாரிகளுக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தையும், பொய் செய்திகளையும் பரப்புகின்றனர். 

தொடரும் மக்கள் பணி
இப்படி தேச விரோத, வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக களத்தில் இறங்கி போராட எந்த முதலாளித்துவ அரசியல் கட்சியும் தயாரில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே மக்களுக்காகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் நித்தம் நித்தம்சித்தாந்த ரீதியிலும், களத்திலும் போராடி வருகின்றனர். எனவே தான் மார்ச் மாதம் 24 ஆம் தேதிமுதல் அரசு அறிவித்த கொரோனா ஊரடங்குகாலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாதர்களும் தங்கள் கரங்களில் செங்கொடியினை ஏந்தி அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தேவையான நிவாரணம், மருத்துவ வசதி கேட்டும்போராடுவதை காண முடிகிறது. இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குமரி மாவட்டத்தில் செங் கொடி ஏந்திய இளைஞர்கள் மாதர்கள் முத்திரை பதித்துள்ளனர். வாக்கு அரசியல் என்பது இன்று முழுக்கமுழுக்க மோசடியாக மாறும் போது இந்தியாவை பாதுகாக்க செங்கொடி தோழர்களும், முற்போக்காளர்களும் தொழிலாளர், விவசாயிகள், ஜனநாயக சக்திகளும் மேலும் பலமடங்கு உறுதியுடன் களத்தில் இறங்க வேண்டியுள்ளது. மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். திசை மாற்றப்பட்ட இளைஞர்கள் நல்வழியில் நடைபோட தொடங்கியுள்ளனர். செங்கொடி காத்த புரட்சியாளன் ஜி.எஸ்.மணி நினைவு தினத்தில் துணிச்சலுடன் போராடி முன்னேற உறுதியேற்போம். 5.10.2020 மாலை 6 மணிக்கு CPIM Kanyakumari முகநூல் பக்கத்தில் ஜி.எஸ்.மணி நினைவு தின கருத்தரங்கம் பார்க்கலாம்.

===என்.முருகேசன், சிபிஎம் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்===

;