tamilnadu

img

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019 பின்னணி? -13ம் பாகம்

2014 ஆட்சி மாற்றம் - கல்வி அமைப்பின் மீது ஆர்எஸ்எஸ் விரித்த வலை

(இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் சியாம்லால் யாதவ் எழுதிய அந்தக் கட்டுரை இந்தியக் கல்வி அமைப்பின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய வலையை எவ்வாறு விரித்து வைத்திருக்கிறது என்பதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இனி அந்தக் கட்டுரை. . ).
 

ஸ்மிருதி இரானி மீது ஆதிக்கம்  
”2014 அக்டோபர் 30 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டெல்லியில் உள்ள மத்தியப் பிரதேச பவனில் 22 பேர் கொண்ட குழுவைச் சந்தித்துப் பேசினார். அமைச்சராக தான் பதவியேற்றுக் கொண்ட இந்த ஆறு மாதங்களில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அவர் நடத்திய ஆறு கூட்டங்களில், இந்த கூட்டமே அதிக எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்ட கூட்டமாக இருந்தது. அந்த 22 பேரும் கல்வி தொடர்பாக ஆர்எஸ்எஸ் பொறுப்பில் இருக்கின்ற 11 அமைப்புகளைச் சார்ந்தவர்களாக இருந்தனர். ஆறு மணி நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஸ்மிருதி இரானிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதுபோன்ற கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டம் நடந்து முடிந்து ஒன்பது நாட்களுக்குள்ளாக முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஆக்ராவைச் சேர்ந்த ராம்சங்கர் கதேரியா, ஸ்மிருதி இரானியின் கீழ் பணியாற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
 

கல்வியும் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளும்  
அரசாங்கத்துடனும், பாஜக கட்சியுடனும் கல்வி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக அர்திக் சமூகம், சேவா சமூகம், சிக்‌ஷா சமூகம், சுரக்‌ஷா சமூகம், ஜன் சமூகம், விசார் சமூகம் என்று ஆறு தனித்தனி அமைப்புகளை ஆர்எஸ்எஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஸ்மிருதி இரானியைச் சந்தித்து பேசிய அந்த 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிக்‌ஷா சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த 11 அமைப்புகளைச் சேர்ந்த 11 தொடர்பாளர்கள் ஸ்மிருதி இரானியுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களுக்கு வெறுப்பூட்டும் வகையிலேயே ஸ்மிருதி இரானியின் தீர்மானமற்ற நடவடிக்கைகள் இருந்தன. அந்த 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ”அவரால் ஒத்துக் கொள்ளப்பட்ட கூட்டங்களைக்கூட நடத்தவில்லை. சில பதவிகளுக்காக நாங்கள் பரிந்துரைத்த நபர்கள் மீதும் அவர் ஆர்வம் காட்டவில்லை” என்று கூறினார். அதன் பின்விளைவாகவே, ஆர்எஸ்எஸ்சின் ஆலோசனைகளை இரானியிடம் எடுத்துச் சொல்வதற்காக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உத்தரவின் பேரில் கதேரியா இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். ஆனாலும் கதேரியாவின் மதிப்பெண் சான்றிதழ் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக அவரது நியமனம் எடுபடாமல் போனது.
ஸ்மிருதி இரானிக்கு ஏற்பட்ட பிரச்சனை
புதிய கல்விக் கொள்கை குறித்து தொடர்ந்து பேசி வந்த ஸ்மிருதி இரானி, 2014 அக்டோபரில் வாரணாசியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழாவில் புதிய கல்விக் கொள்கை அடுத்த ஆண்டில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழி இனிமேல் கற்றுத் தரப்படமாட்டாது. அதற்குப் பதிலாக இந்திய மொழிகளில் ஒன்று, குறிப்பாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் என்று கேந்திரிய வித்யாலயா ஆளுநர்கள் கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் இரானி அறிவிப்பு வெளியிட்டார். இந்த கோரிக்கையை முன்னிறுத்தி வந்த சமஸ்கிருத சிக்‌ஷக் சங்கம் என்ற அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டதாக இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகாபல் மிஸ்ரா என்பவரின் தலைமையில் இயங்கி வந்தது என்பதால், இந்த அறிவிப்பு ஸ்மிருதி இரானிக்கு பிரச்சனையை ஏற்படுத்தித் தந்தது.
’சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட கல்விக் கொள்கை குழுக்களின் பரிந்துரைகள், செயலாக்கம் மற்றும் அவற்றின் பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் டிசம்பர் 13, 14 ஆகிய நாட்களில் மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இந்த அமைப்புகள் இணைந்து நடத்தவிருக்கின்றன. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி, விழுமியக் கல்வி, அறிவியலும் ஆன்மீகமும், தேர்வு முறைகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி என்று பல்வேறு தலைப்புகளில் அந்த கருத்தரங்கத்தில் விவாதங்கள் நடக்கவிருக்கின்றன.
செப்டம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உயர்கல்வியை நெறிமுறைப்படுத்துகின்ற அமைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்ட ’ஹிந்து கல்வி’ என்ற மூன்று நாள் கருத்தரங்கம் டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. இவ்வாறான முயற்சிகளில் இருந்து கிடைக்கின்ற ஆலோசனைகளைக் கொண்டே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தெரிகிறது.
 

ஆர்எஸ்எஸ் முன்வைத்த கோரிக்கைகள்
வெறும் பிரச்சாரங்கள் மட்டுமே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசாங்க காலத்தில்  செய்யப்பட்டன. ஆனால் இந்த முறை அவ்வாறான பிரச்சாரங்களைத் தவிர்த்து விட்டு செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானியுடன் நடைபெற்ற அந்த அக்டோபர் 30 கூட்டத்தில் சுரேஷ் சோனி பேசியதாக கூறப்படுகிறது. இந்தியப் போராட்ட வீரர்கள் குறித்து இன்னும் அதிகமாக வரலாற்று பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.
ஆர்எஸ்எஸ்சின் நீண்ட நெடிய கோரிக்கைகளை முன்னிறுத்தியே, இந்த 11 அமைப்புகளும் அமைச்சரிடம் பேசின. இந்தக் கோரிக்கைகளில் பலவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பள்ளி பாடத்திட்டங்கள் குறித்ததாகவே இருந்தாலும், அந்த தடைகளை எல்லாம் நீக்கி தன்னுடைய நோக்கங்களை நிறைவேறிக் கொள்வதற்கு பாஜகவின் வளர்ச்சி உதவும் என்றே ஆர்எஸ்எஸ் கருதியது. தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றின் மூலமாக கல்வியின் மீது தன்னுடைய முத்திரையைப் பதித்து விட முடியும் என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. ஆனாலும் ஸ்மிருதி இரானியின் நடவடிக்கைகள் இதற்கும் முட்டுக்கட்டை போடுவதாகவே இருந்தன.
கடந்த மாதம் காலியான தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை, கடந்த ஐக்கிய முற்போக்கு அரசால் நியமிக்கப்பட்ட மத்திய இடைநிலை கல்வி வாரிய தலைவர் இன்னும் மாற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இரானி மீது வைக்கப்பட்டன. உயர்கல்வியைப் பொறுத்த வரை, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஐஐடி, ஐஐஎம் இயக்குநர்கள், மற்றும் பல பதவிகளில் தங்களுடைய ஆட்களை நியமனம் செய்வதின் மூலம் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது எளிது என்பதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது. ஆனால் இதிலும் அதிகாரப் பசி கொண்ட பல குழுக்களின் ஆதிக்கத்தால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் ஒருவரை இரானி பரிந்துரை செய்த போது, தற்போது அமைச்சராகி இருக்கும் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தி விட்டார். முதன்முறையாக பெரும்பான்மையுடன் பதவியேற்றிருக்கும் இந்த பாஜக அரசாங்கத்திடம் இருந்து பதவிகளைப் பெறுவதில் பல மூத்த ஆர்எஸ்எஸ் சுயம்சேவக்குகள் போட்டியிட்டு வருகின்றனர். விளைவாக பாட்னா, புவனேஸ்வர், ஜபல்பூர் ஐஐடிகளில், ராஞ்சி, லக்னோ, கோழிக்கோடு ஐஐஎம்களில் தலைமை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் . . .
கல்வியில் ஆர்எஸ்எஸ் கொண்டு வரத் துடிக்கும் மாற்றங்கள் இப்போது பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் வெளிப்படத் துவங்கியுள்ளன.
 

ஹரியானா
ஆசிரியர்களுக்கு வழி காட்டுவது, பள்ளிகளுக்கான பாடவரைவைத் திட்டமிடுவது போன்ற பணிகளுக்காக மிகுந்த சர்ச்சைக்குரிய நபரான தினாநாத் பத்ரா தலைமையிலான ஆலோசனைக் குழுவை, ஹரியானவில் முதலமைச்சராகப் புதிதாக பதவியேற்றிருக்கும் முன்னாள் ஆர்எஸ்எஸ் அமைப்பாளரும், ஆசிரியராகப் பணி புரிந்தவருமான மனோகர்லால் கட்டார் நியமித்திருக்கிறார். கலாச்சாரம் சார்ந்ததாக பள்ளிக்கல்வி மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருக்கும் ஹரியானா மாநிலக் கல்வி அமைச்சரான பிலாஸ் சர்மா, இந்த தினாநாத் பத்ராவுடன் ஆசிரியராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மகாராஷ்ட்ரா
மகாராஷ்ட்ராவில் மிக மெதுவாகவே இந்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. பாடவரைவு திருத்தப்பட வேண்டும், இந்திய விழுமியங்களை முன்னிறுத்தும் வகையில் புதிய புத்தகங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்புகள் அங்கே கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. சிவாஜி, வீர சாவர்க்கர், மகாத்மா ஜோதிராவ் பூலே, சாகுஜி மகராஜ் போன்றவர்களின் வரலாற்றுப் பங்கை முன்னிறுத்தி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட வேண்டும் என்று அவுரங்காபாத்தில் உள்ள மராத்வாடா அம்பேத்கர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் கஜனன் சனப் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இவர்கள் அனைவரையும் பற்றி மகாராஷ்ட்ரா மாநில மாணவர்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்திய விழுமியங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத மாணவர்கள் நமது நாட்டிற்காக எவ்வாறு வேலை செய்வார்கள், அவர்கள் பிற நாடுகளுக்கே ஓடி விடுவார்கள் என்ற கருத்தையும் கஜனன் சனப் முன்வைத்தார்.
 

ராஜஸ்தான்
காங்கிரஸ் அரசாங்கத்தின் போது ராஜஸ்தானில் நியமிக்கப்பட்டிருந்த துணைவேந்தர்கள் ஆர்எஸ்எஸ் சார்பானவர்களின் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்சின் தலையீடு அதிகம் இருப்பதால், பல்கலைக்கழகப் பணிகளை தொடர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி தேவ் ஸ்வரூப் பதவி விலகியது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அவருக்குப் பதிலாக வேறு துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்காக ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கைலாஷ் சோத்னானி என்ற துணைவேந்தரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்சிக் மகாசங் என்ற அமைப்பைச் சார்ந்த இருவர் ராஜஸ்தான் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர்.  இவையால்லாம் நடந்த போதிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னிச்சையாகச் செயல்படுவதை தடுக்கின்ற வகையில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே செயல்பட்டு வருவதால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டங்கள் ராஜஸ்தானைப் பொறுத்த வரை மிகவும் தாமதப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
 

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்த வரையில், பாஜக அரசாங்கம் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறது. இருந்தாலும் ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் K.S.சுதர்சன், சுரேஷ் சோனி மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் இருவர் ஆகியோரின் பெயர் வியாபம் ஊழலில் அடிபட்டதால், பாஜக அரசாங்கம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையிலேயே இருந்து வருகிறது. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த போது, பாடவரைவுகளில் அக்பருக்காக இருந்த இடம் சிவாஜிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும், அண்மையில் அது போன்ற திட்டங்கள் எதுவும் அங்கே அரங்கேற்றப்படவில்லை. ஆர்எஸ்எஸ் அறக்கட்டளை ஒன்றின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகம் கட்டாய வாசிப்பிற்காக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்தப் புத்தகம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. பகவத் கீதையை பாடவரைவிற்குள் கொண்டு வரும் திட்டம் பற்றியும் அந்த மாநிலத்தில் பேசப்பட்டது.
 

சத்தீஸ்கர்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமின்மை, மாநிலத்தின் சகிப்புத்தன்மை, மதம், கல்வி ஆகியவற்றில் பாஜகவின் தலையீடுகள் இல்லாமை போன்ற காரணங்களால் இந்த காவிமயமாக்கலில் இருந்து அண்டை மாநிலமான சத்தீஸ்கர் தப்பித்து நிற்கிறது. மோடி அரசாங்கம் பதவியேற்றதில் இருந்தே ராமன்சிங் தலைமையிலான மாநில அரசாங்கம் பல்வேறு தொல்லைகளுக்குள்ளாவதும், ராமன்சிங்கை காப்பாற்றுவதற்காக தங்களுடைய ஆற்றலை இந்த அமைப்புகள் செலவழித்து வருவதும் கூடுதல் காரணமாக இருக்கலாம்.   
குஜராத்
மோடியின் சொந்த மாநிலத்தில் தினாநாத் பத்ராவிற்கு அமோக ஆதரவு தரப்பட்டு வருகிறது. குஜராத் பள்ளி பாடப்புத்தக நிறுவனம் ஜுலை மாதம் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் எட்டு புத்தகங்கள் பத்ராவால் எழுதப்பட்டவை. 42000க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் இந்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. குஜராத் பல்கலைக்கழகம், எம்.எஸ்.பல்கலைக்கழகம், வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஜூலை மாதம் மோகன் பகவத் கலந்து கொண்ட கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கல்வி தொடர்பான விவாதங்களே நடத்தப்பட்டதாக உறுதி செய்திருக்கின்றனர். ஜனவரி மாதம் அகமதாபாத்தில் நடைபெறவிருக்கின்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கான மூன்று நாள் கூட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் பதின்மூன்று வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
 

கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத ஸ்மிருதி இரானி
அதிக நிதி ஒதுக்கீடு, புதிய கல்வி நிறுவனங்கள், அதிக ஆசிரியர்கள் நியமனம் என்ற ஆர்எஸ்எஸ்சின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மத்திய அரசைப் பொறுத்த வரை மிகச் சிரமாமனாதாகும். நவம்பர் 13 அன்று நடைபெற்ற கூட்டத்தில் செலவினத்துறை அதிகாரிகள் பட்ஜெட்டில் ரூ11500 கோடி அளவிற்கு பணம் ஒதுக்கீடு குறையும் என்றும், உயர் மற்றும் தொழிற்கல்வி 4000 கோடி அளவிற்கும், பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி 7500 கோடி ரூபாயும் இழக்க வேண்டியிருக்கும் என்று கூறியதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் அவசரப்படப் போவதில்லை. ”நாங்கள் எதிர்பார்ப்பது போன்ற கல்வி அமைப்பைக் கொண்டு வருவது அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடியது என்பதால் ஒருபோதும் நாங்கள் அவசரப்படப் போவதில்லை” என்கிறார் ஸ்மிருதி இரானியுடன் அடிக்கடி கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆர்எஸ்எஸ் மூத்த உறுப்பினர் ஒருவர்” என்று 2014 நவம்பரில் எழுதிய கட்டுரையில் பின்னணியில் நடந்திருக்கும் விஷயங்களை சியாம்லால் யாதவ் அம்பலப்படுத்தியிருந்தார்.  இந்தக் கட்டுரையின் பின்னணியில், 2014ஆம் ஆண்டு பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஆரம்பித்து, இப்போது 2019 மே 31 அன்று கஸ்தூரிரங்கன் குழுவால் தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 சமர்ப்பிக்கப்படிருப்பது வரையிலும் பின்னணியில் நடந்திருக்க கூடிய விஷயங்கள் அனைத்தையும் நம்மால் ஊகித்து அறிய முடிகிறது. 
’கைக்கெட்டாது போகும் கல்விக் கொள்கை’ என்ற தலைப்பில் 2018 ஜூலை ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் சப்யசாச்சி பட்டாச்சார்யா எழுதிய கட்டுரையில், பாஜக, ஆர்எஸ்எஸ் அதிகார மையங்களுக்கிடையே இருக்கின்ற கருத்து மோதல்களை வெளிக் கொணர்வதன் மூலமே கல்விக் கொள்கை நமக்கு கிட்டும் என்பதாகச் சுட்டிக் காட்டுகிறார். அவரது கட்டுரையில் ”பாரம்பரிய கல்வி முறை, தாய்மொழியில் கல்வி, புனிதமான சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் என்று ஒருசாராரும், சர்வதேச அளவில் தரமன கல்வியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்வி அமைப்பு, ஆங்கில மொழி வழிக் கல்வி, சர்வதேச தரம் குறித்த ஆர்வம், கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே வசூலித்துக் கொள்வதற்கான சுதந்திரம் என்று மற்றொரு சாராரும் தங்களுடைய கருத்துக்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். இருவேறு முரணான வகையிலான கல்வித் திட்டங்கள் ஆளும் அதிகார மையங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையமும் மற்றதை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றது. இந்த எதிரெதிர் கருத்துக்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு விடுமா என்பதோடு, அடிப்படைக் கொள்கைகளில் உள்ள இந்த உள்முரண்களை ஆட்சியில் இருப்பவர்கள் தீர்த்து வைப்பார்களா என்பது போன்ற கேள்விகள் நம்மிடம் ஏற்படுகின்றன. கல்விக் கொள்கைகள் மீது தங்களுடைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்காக இவ்வாறு முரண்பட்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் முழுவதுமாக அறிந்திருக்கிறோமா? இந்த கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது யார் என்று அறிந்து கொள்வதற்கு, அவர்கள் ஒவ்வொருவரின் நிலை, அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், சமூகத்தில் அவர்களுக்குரிய முக்கியத்துவம் ஆகியவை பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்று சப்யசாச்சி பட்டாச்சார்யா தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார்.
ஆக முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே ஸ்மிருதி இரானி ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பிடிக்காதவராகிப் போகிறார். கல்விக் கொள்கைகள் குறித்து அதிகார மையங்களுக்கிடையே இருந்து வந்த வெவ்வேறு விதமான சிந்தனைகள் கல்விக் கொள்கை தயாரிப்பை தள்ளிப் போட வைக்கின்றன. இறுதியில் அந்தப் பொறுப்பு ஸ்மிருதி இரானியிடம் இருந்து பறிக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சொல்படி ஆடுகின்ற ஜவடேகரிடம் சென்று சேர்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஸ்மிருதி இரானியுடன் தொடர்ந்து பேசி அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்த முனைந்த ஆர்எஸ்எஸ் சார்ந்த 11 அமைப்புகள் யாவை, என்ன விதமாக தங்களுடைய வேலைகளை அந்த அமைப்புகள் கச்சிதமாகச் செய்து வருகின்றன, அதாவது கல்வி சார்ந்த அரசின் செயல்பாடுகளில் அவை எவ்வாறு தலையிட்டு வருகின்றன என்பது குறித்து சற்றே விளக்கமாக காணலாம்.
(தொடரும்) 
கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு
 விருதுநகர்.
 

;