tamilnadu

img

இந்தித் திணிப்பை அனுமதியோம்... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவிற்கு ஒரு மொழி அவசியம் என்றும் அது இந்தி என்றும், அதனால்தான் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும்
என்றும் கூறியிருக்கிறார். இதில் ஆச்சர்யப் படுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இதுஆர்எஸ்எஸ்-இந்துத்துவாவாதிகளின் நிலைப்பாடாகும். மேலும் அமித் ஷா, இந்திநாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும்என்று மறைமுகமாகவும் கூறியிருக்கிறார்.

வி.டி. சாவர்க்கர்தான் முதன்முதலாக, “இந்தி, இந்து, இந்துஸ்தான்” என்று குரல்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்று கூறிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவாவாதிகள் நாட்டில் ஒரேயொரு தேசிய மொழியை மட்டும் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொண்டிடும் முயற்சிகள், நாட்டின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான ஒற்றுமைக்கு எதிரானதாகும்.அரசியல் நிர்ணயசபையில் நாட்டின் “தேசிய மொழி”யாக (“Rashtra Bhasha”) இந்தியை அறிவித்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்த சமயத்தில் இந்து மகாசபையின் தலைவராக இருந்தவரும் பின்னாட்களில் பாரதிய ஜனசங்கத் தின் தலைவராகவும் இருந்த, ஷியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியை தேசிய மொழியாக ஏற்படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இது ஏற்கப்படவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டம், இந்தி நாட்டின் அலுவல் மொழியாக இருக்கும் என்றும், மேலும்ஆங்கிலமும் 15 ஆண்டு காலத்திற்கு நாட்டின்அலுவல் மொழியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. பின்னர் ஆங்கிலத்தைத் தொடர்ந்து ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவதற்காக, ஆட்சி மொழிச் சட்டம் 1965இல் திருத்தப் பட்டது.

ஒரு தேசிய மொழிக்கு என்பதற்கு பதிலாக, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை 14 பிராந்திய மொழிகளைப் பட்டியலிட்டது. அந்தப் பட்டியல் இப்போது22ஆக வளர்ந்திருக்கிறது. இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து மொழிகளுமே சம அந்தஸ்து உடையவைகளாகும். மேலும் அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து ஒன்று, அனைத்து மாநிலங்களும் தங்கள் சொந்த ஆட்சி மொழியை அல்லது மொழிகளைப் பிரகடனம் செய்து கொள்வதற்கு வகை செய்கிறது. இந்தியாவின் பன்மொழித் தன்மையைக்கணக்கில் எடுத்துக் கொண்டுதான், அரசமைப்புச் சட்டத்தில் இவ்வாறாக மொழிகள் குறித்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட்டன. இவ்வாறு மாநிலங்களின்மொழிக்கொள்கை அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக, இந்தியா என்பது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்பதற்கான அடிப்படையாக அமைந்தது. இத்தகைய நாட்டில்உள்ள பல மொழிகளின் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகத்தான் ஆர்எஸ்எஸ்-பாஜகவகையறாக்கள் இந்தி மட்டும்தான் இந்தியாவின் தேசிய மொழி என்று கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. 

முந்தைய மோடி-1 அரசாங்கத்தின் காலத்திலேயே, இந்தி பேசாத மாநிலங்களில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் புகுத்திட எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போதும் அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்கான ஒரே மொழி இந்தி என்கிற அமித் ஷாவின் கூற்று, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள தலைவர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து, கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. இந்தியைத் திணிப்பதற்காக மேற்கொண்டிடும் எவ்விதமான முயற்சியும், இந்தியின் வளர்ச்சி வாய்ப்புக்கு ஊறுவிளைவிக்கவே இட்டுச் சென்றிடும். ஏனெனில், இந்தியாவில் இருக் கின்ற மக்களில் அதிகமானவர்களால் பேசக்கூடிய மொழி என்ற முறையிலும், மிகவும் விரிவான அளவில் மக்களால் புரிந்துகொள்ளக் கூடிய மொழி என்ற முறையிலும் இந்திக்கு இந்தியாவின் அரசியலிலும், சமூகத்திலும் ஒரு முக்கியமான பங்கு உண்டு. 

இந்தியை அரசின் தேசிய மொழியாக மாற்றிட மேற்கொள்ளும் முயற்சி, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும். அனைத்து இந்திய மொழிகளும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும். அம்மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் அவற்றின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மொழிகளின் சமத்துவம் மற்றும்மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகளைஅங்கீகரித்தல் ஆகியவை ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் வலுப் படுத்திடும். இத்தகைய ஜனநாயக மொழிக் கொள்கையிலிருந்து நழுவக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும். 
(தமிழில்: ச. வீரமணி)

;