tamilnadu

img

யாருக்கு இது ‘நல்ல’ நெருக்கடி? - டி.கே.ரங்கராஜன்

“Never waste Good crisis” நல்ல நெருக்கடியை வீணாக்காதே, என்பது முதலாளித்துவம் விரும்பும் ஆங்கிலப் பழமொழியாகும். நெருக்கடி என்றாலே அது கெட்டதுதான், ஆனால் அந்த காலத்தை பயன்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் லாபம டைய வேண்டும் என்பதைத்தான் ‘நல்ல’ என்ற சொல் குறிக் கிறது. உலகமே எதிர்கொள்ளும் கொரோனா பெருந் தொற்றினை அப்படியான ‘நல்ல’ நெருக்கடியாக பயன்படுத்த லாம் என்று இந்தியாவின் ஆளும் வர்க்கம் நினைக்கிறது. 

தொழிலாளர் உரிமைகளை பலிகேட்பதா?

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பெருந்தொற்று மரணங்களால் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் இருக்கும் முதலீடுகள் இந்தியாவுக்கு மாறலாம் என்ற எதிர்பார்ப்பில் அரசு உள்ளது. முதலீடுகள் வந்து தொழில்கள் தொடங்கப்பட்டால் நல்லதுதான். ஆனால் முத லீடுகளை ஈர்ப்பதன் பேரால் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. உ.பி., முத லமைச்சர் யோகி ஆதித்யநாத், அவசர சட்டங்களின் வழியே  35 தொழிலாளர் நலச் சட்டங்களை செயலிழக்கச் செய்தி ருக்கிறார். இதனால் குறைந்தபட்ச கூலி நிர்ணயிப்பு, வேலைநிறுத்தம், சங்கம் அமைக்கும் உரிமைகள் மேலும் பாதிக்கப்படுகின்றன. பாரதமாதாவின் பெயரைச் சொல்லிக்கொண்டே, பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ கால விடுப்பு கூட இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் என்பது தான் பெருங்கொடுமையாகும். 

மோடி அரசாங்கம் மத்திய அளவில் கொண்டுவந்த தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்கள் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனையில் உள்ளன. எனவே தனது கைவசம் உள்ள மாநில அரசுகளை பயன்படுத்தி தொழிலா ளர் உரிமைகளை காவு வாங்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. உ.பி., ம.பி. ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்க ளில் 8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப் பட்டுள்ளது. 

சட்டவிரோதத்தை சட்டமாக்குதல்

ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், ஐடி தொழி லிலும் 12 மணி நேர சுரண்டல் சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளது. உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. அவர்கள்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இந்தியா முழுவதும் சென்று தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் வேலை செய்கிறார்கள். கொ ரோனா பாதிப்பால் சொந்த ஊர்களுக்கு திரும்பியிருக்கும் அவர்களுக்கு பாஜக கொடுத்துள்ள பரிசு இருக்கும் உரிமை களையும் பறித்துக்கொண்டதுதான். 

அரசுதான் இப்படி நடக்கிறதென்றால் நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று   “இப்போதைக்கு தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் கொடுக்கப்படாத பிரச்சனையில் நட வடிக்கை எடுக்கப்படாது” என்று கருத்து வெளியிட்டுள்ளது. ஒரு அரசு தனது பொருளாதார கொள்கைகளை மாற்றுகிற போது அந்த பொருளாதார கொள்கைக்கு ஆதரவாகத்தான்  நீதிமன்றமும் நிர்வாக இயந்திரமும் செயல்படுகிறது. அரசின் பிரிக்க முடியாத பகுதியாகத்தான் நீதித்துறை உள்ளது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அடக்கு முறைத்தன்மையும் அதிகரித்துள்ளது. நீதிமன்றங்களின் போக்கும் அரசுக்கு உதவிகரமாகிறது.

வேலை நேரத்திற்கான போராட்டம்

8 மணி நேர வேலைக்காக உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்றி ருக்கின்றன. இங்கிலாந்திலும் அதன் காலனி நாடுகளிலும் தொழிற்புரட்சிக்கு பின் தீவிரமான போராட்டங்கள் அதி கரித்தன. இதனை ஒட்டித்தான் 10 மணி நேர வேலைக்கான சட்டம் என்பது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த சட்டம் பற்றி பிரெடெரிக் ஏங்கெல்ஸ் “அவசியமான திசையில் ஒரு அடி முன்னேற்றம்” என்று தெரிவித்தார்.

தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களை இரண்டு விதமாக வகைப்படுத்தலாம், முதலாவது புரட்சிகர மாறு தலை நோக்கியவை, மற்றொன்று சீர்திருத்த வகை. இரண்டையுமே சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இருக்கும் அமைப்பிற்குள்ளேயே சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது தொழில் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. தொழிலாளர் போராட்டங்களை மட்டுப்படுத்தும் விதமாக சில கோரிக்கைகளை ஆளும் வர்க்கம் ஏற்கிறது. தனது சுரண்டலை வேறு வழிமுறையில் மாற்றிக் கொள்கிறது. இவற்றை இணைத்து புரிந்துகொண்டுதான் மார்க்ஸ்  தனது உபரி மதிப்பு கோட்பாட்டையும் அது குறித்த விளக் கத்தையும் வழங்கினார். லெனினும் அவர் தலைமையி லான கட்சியும் சரியாக புரிந்துகொண்டதால்தான் ஜார் ரஷ்யாவில் சோசலிச சோவியத் யூனியன் புரட்சி மூலம் உருவாக்கப்பட்டது. 

புரட்சிகர முன்னேற்றத்தின் பலன்கள்

1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி, உலகம் முழுவ துமே தொழிலாளர் நலவாழ்வில் தாக்கம் செலுத்திய போது முதலாளி வர்க்கத்திற்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகளை ஒத்துக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. 1919 ஆம் ஆண்டில் ஐ.எல்.ஓ 8 மணி நேர வேலையை ஏற்றது. தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, ஓய்வூதியம், சுகாதார பாதுகாப்புகள், காப்பீடு போன்ற உரிமைகள் உருவாகின. இன்றும் கூட அவைகள் மிகப்பெரிய போராட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. 

சோவியத் யூனியன் தகர்ந்துபோன பிறகு, உலகமெங் கும் உரிமைப் பறிப்பு தொடர்கதையானது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய நீண்ட உரையில் ‘ 70 ஆண்டு களில் ஏமாந்ததுபோல இனிமேல் ஏமாற மாட்டோம்’ என குறிப்பிட்டார். இங்கிலாந்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் தொழிற்சங்கங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தினார். சங்கங்களை உடைத்தார், பலவீனப்படுத்தினார். புரட்சிகர வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவானது சீர்திருத்த முழக் கங்களையும் பாதிக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

நேரம் குறைந்தால்  வேலை குறையும்

இந்தியாவுக்கு வருவோம், மோடி அரசாங்கமும், பாஜக வின் பல்வேறு மாநில அரசுகளும் பெருந்தொற்றுக் காலத்தை ‘நல்ல’ நெருக்கடியாக பயன்படுத்த நினைக்கி றார்கள். எனவே அவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் ஆதரவாக, தொழிலாளர், விவசாயி மற்றும் ஊழியர்கள் உரிமைகளின் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள். 

இதற்கு எதிராக குரல்கள் உயர்ந்தால் உடனே அரசுக்கு ஆதரவான ‘நல்லவர்கள்’ வந்து உலகமே நெருக்கடியை எதிர்கொள்கிறது, மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டா மா? என கேள்வி கேட்கிறார்கள். அடடா என்ன ஒரு நியாய மான கேள்வி?. அவர்களிடம் நாம் வேறு ஒரு வரலாற்று உதா ரணத்தை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. 1930களில் உலகமே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. அமெரிக் காவும், ஐரோப்பிய நாடுகளும் சிக்கலுக்கு ஆளானார்கள். ஆனால் அந்தக் காலத்தில்தான் அமெரிக்காவில் வேலை யில்லாக் கால உதவித்தொகை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்காவி லும், ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு வாரத்திற்கு 40 மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட்டது. 

பெரும் நெருக்கடி சூழ்கிற நேரத்தில் மக்களை அரசு மேலும் சுரண்டுமானால் அது தொழில்களுக்கு தேவை யான அமைதியைக் கொடுக்காது. இதே பாணியில் ஆட்சி நடக்க முடியாது என்று கலகங்கள்தான் வெடிக்கும். இப்போ தும் கூட அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு 40மணி நேரம் தான் வேலை வாங்க முடியும், ஐரோப்பிய நாடுகளில் 36 மணி நேரம் முதல் 40 மணி நேரமாக இந்த வரம்பு உள்ளது.  மக்கள் சீனத்தில் வாரத்திற்கு 40 மணிநேர பணி வரம்பு உள்ளது. சில தொழில்களில் மட்டும் இது 44 மணி நேரமாக உள்ளது. பிரான்சில் வாரத்திற்கு 35 மணி நேர பணி வரம்பே உள்ளது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலுமே வேலையின்மை பெரும் பிரச்ச னையாக எழவுள்ளது. இந்த சூழலில் வேலை நேரத்தை உயர்த்தும் முடிவானது வேலை இழப்பைத்தான் ஏற் படுத்தும். உதாரணமாக 24மணி நேரம் இயங்கக்கூடிய சிமெண்ட், சர்க்கரை, ஜவுளி ஆலைகளை எடுத்துக்கொள் வோம். 3 ஷிப்டுகளில் தொழிலாளர்கள் அங்கே பணியாற்று வார்கள். இப்போது வேலை நேரம் உயர்த்தப்பட்டால் 2 ஷிப்ட் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். 300 பேர் ஒரு ஆலையில் பணியாற்றினால் 100 பேர் வேலை இழப்பார்கள். 

உழைக்கும் வர்க்கம் எழுச்சிகொள்ள வேண்டும்

மோடி அரசு தனது வர்க்கங்களுக்கு சாதகமாக பயன் படுத்தும் ‘நல்ல’ நெருக்கடியின் பொருள் இதுதான். இது தொழில்களையும் வளர்க்காது, விவசாயத்தையும் வளர்க்காது. நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி சிக்கல்களை கூட்டத்தான் செய்யும். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பெருந்தொற்றால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வேலை நேரத்தை குறைக்க முயற்சிக்கவில்லை. இந்தியா வுக்கு வரக்கூடிய முதலீடுகள் அந்த நாடுகளில் இருந்து வருமென்றுதானே ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்?  இந்தியாவில் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களும், ஒரே அணியாக நின்று மோடி அரசாங்கத்தின் போக்கினை எதிர்க்கின்றன. மூலதனத்தை பாதுகாப்பதற்காக மக்களை பலிகொடுக்கும் இந்த போக்கினை செங்கொடி இயக்கம் முன்னணியில் நின்று எதிர்க்கும். அனைத்து வழிகளிலும் போராடி தடுக்கும். 

கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

“இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்க மாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்துபோகின்றன.”

“இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியிலான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ அல்லது சிறுபான்மையினரின் நல னுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப்பெரும்பான்மையினர் பங்குபெறும் மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும் தன்னுணர்வுடன் கூடிய சுயேட்சையான இயக்க மாகும்.” அவரின் சொற்களை நடைமுறையில் கொண்டு வருவது கம்யூனிஸ்டுகளின் முன்னுள்ள கடமை.

கட்டுரையாளர் : மத்தியக் குழு உறுப்பினர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)






 

;