tamilnadu

img

பழுதடைந்த இராஜபாளையம்.... பரிதவிக்கும் மக்கள்

இராஜபாளையம் நகரத்தில் நடைபெறும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், இரயில்வே மேம்பால பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளை கொண்ட முதல் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியின் எல்லையோடு இணைந்த பகுதிகளாக தெற்கு வெங்காநல்லூர், சமுசிகாபுரம், மேலப்பாட்ட கரிசல்குளம், கிருஷ்ணாபுரம், இனாம் செட்டிகுளம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் செயல்படுகிறது.

இராஜபாளையம் நகரின் வளர்ச்சிக்காகவும் மக்களின் தேவைக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், இரயில்வே மேம்பாலம், பாதாளச் சாக்கடை திட்டம் போன்றவை செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் மற்றும் இராஜபாளையத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் கோரிக்கைகளால் தற்போது இப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பணிகளின் தொடக்கம்
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 197.79 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் ரூபாய் 258.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2018 செப்டம்பர் மாதமும், ரயில்வே மேம்பால பணிகள் ரூபாய் 41.89 கோடி மதிப்பீட்டில் 2018 அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.

மக்கள் பாதிப்பு
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை, இரயில்வே மேம்பால பணிகள் இராஜபாளையம் நகரின் வளர்ச்சி திட்டம் என்ற அடிப்படையில் ஆரம்ப கட்டத்தில் மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் சரியாக திட்டமிடப்படாத பாதாள சாக்கடை தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் மிகப் பெரிய பாதிப்புகளைஏற்படுத்தி வருகிறது எனவே மக்கள் அனுதினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிடுவதால் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல் ஆரம்பத்தில் வேகமாக நடைபெற்ற இரயில்வே மேம்பால பணிகள் கடந்த 6 மாதத்திற்கு மேலாக பணிகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. இப்பணிகளோடு சேர்ந்து தற்போது நெடுஞ்சாலைத் துறையால் மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் போக்குவரத்திற்கு மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆய்வு
இராஜபாளையம் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல சமூக வலைதளம் வாயிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10 கேள்விகளை உள்ளடக்கிய இணையம் வழி கருத்து கேட்பு படிவம் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 98 பெண்கள் 755 ஆண்கள் என மொத்தம் 853 பேர் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர் இதில் இராஜபாளையம் நகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 85.27% பேர். கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் 14.9% பேர் ஆகும்.

ஆய்வறிக்கையின் சுருக்க விபரம்
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை பணிகள் குறித்து..இத் திட்ட பணிகள் குறித்து ஏழு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.தங்கள் பகுதியில் பணிகள் நடைபெற்றதா? என்ற கேள்விக்கு 85.2 சதவீதம் பேர் ஆம் என்றும் 14.8 சதம் பேர் இல்லை என்றும் கூறியுள்ளனர். இல்லை என்று கூறியதில் பெரும்பாலானோர் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.பணியின் தரம் குறித்த கேள்விக்கு 54 சதவீதம் பேர் மிக மோசம் எனவும் 37.2 சதவீதம் பேர் மோசம் எனவும் நன்றாக இருக்கிறது என்று 8.8% பேரும் குறிப்பிட்டுள்ளனர்.

பணிகள் நடைபெற்று உள்ள பகுதிகளில் மேடு பள்ளம் இன்றி சரி செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு 96.8 சதவீதம் பேர் சரி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர்.குடிநீர் இணைப்பு சேதமடையும் போது சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? என்பது குறித்த கேள்விக்கு ஒரு வாரம் என 30.3 %மக்களும், 15 நாட்கள் என22.4 % மக்களும், ஒரு மாதம் என 22 % மக்களும், சரி செய்வதே இல்லை என 25.3 % மக்கள் கூறுகின்றனர்.
சேதமடைந்த குடிநீர் இணைப்புகளை சரி செய்ய லஞ்சம் பெறப்படுகிறதா? என்ற கேள்விக்கு இல்லை என 61.5 சதவீத மக்களும், லஞ்சம் பெறப்படுகிறது என 38.5 % மக்களும் கூறியுள்ளனர். லஞ்சம் பெறுவது ஆட்களைப் பொறுத்து எனவும் ரூபாய் 500 முதல் 10,000 வரை லஞ்சம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ரூபாய் 5,000 தானே கொடுத்துள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.மேற்கண்ட பணிக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளதா? என்ற கேள்விக்கு 96.8 சதவீதம் மக்கள் இல்லை எனக் கூறியுள்ளார்.

இப்பணிக்காக ஏற்பட்ட பாதிப்பு குறித்த கேள்விக்கு அவர்கள் அளித்துள்ள பதிலில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

1.    2 பேர் உயிரிந்துள்ளனர்.

2.    ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் ஐந்து பேர் முதல் 50 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

3.    கீழே விழுந்ததில் கை, கால்களில் காயம் மற்றும் எலும்பு முறிவு பலருக்கு ஏற்பட்டுள்ளது. 

4.    34 வது வார்டைச் சேர்ந்த ஒருவர் தனது உறவினர் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதில் ரூபாய் 8 லட்சம் மருத்துவ செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

5.    தனியார் பள்ளியின் வாகனம் குழியில் விழுந்ததில் 30 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.

6.    அனைத்து தெருக்களிலும் பாதுகாப்பில்லாத பயணமாக உள்ளது.

7.    18-வது வார்டில் -15 பேரும், 19 வது வார்டில் -10 பேரும், 11 வது வார்டில் -15 பேரும், 10வது வார்டில் -10 பேரும் பெரிய சுரைக்காய்பட்டி பகுதியில் - 65 பேரும், 25 வது வார்டில் -47 பேரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதர பகுதிகளிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மணி நேரத்திற்கு ஒரு விபத்து ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இரயில்வே மேம்பால பணிகள் குறித்து

இத் திட்ட பணிகள் குறித்து இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

இரயில்வே மேம்பால பணியின் தன்மை எவ்வாறு உள்ளது? என்ற கேள்விக்கு..

நினைவுச்சின்னம் போல் உள்ளது எனவும், அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளது, எனவும் கால் ஒடிந்த ஆமை போல் பணிகள் நடைபெறுவதாகவும், தெரிவித்துள்ளனர்.மேலும் கொரனாவை விட மோசம் எனவும் கன்னித்தீவு கதையாக உள்ளது எனவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாகவும், நகராட்சி மௌனமாக இருக்கிறது எனவும், பாதியில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது எனவும் கருத்து கூறியுள்ளனர்.
இரயில்வே கேட் பாலத்திற்கு அருகே செல்லும் பாதை அல்லது மாற்றுப் பாதை போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளதா? என்ற கேள்விக்கு அனைவருமே இல்லை என கூறியுள்ளனர்.

புதிய பாலம் தலையில் முட்டி காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செல்ல சிரமம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இப்பாதையில் பயணம் செய்வது சாகச பயணம்.. கரணம் தப்பினால் மரணம்.. எனவும் கூறியுள்ளனர். மாற்றுப்பாதை மேடு பள்ளமாக தூசி நிறைந்ததாக உள்ளது என கூறியுள்ளனர். மாற்றுப்பாதையிலும் பாதாளச் சாக்கடை பணிக்கு தோண்டிக் கொண்டிருப்பதால் மிகுந்த சிரமம் உள்ளது என கூறியுள்ளனர்.இராஜபாளையத்தில் நடைபெறும் மூன்று பணிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளீர்களா? எவ்வாறு என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்கள் நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது.81.1% மக்கள் தாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முதுகு தண்டுவட பிரச்சனை, கழுத்து வலி, கண்ணில் தூசி விழுதல், சுவாசக் கோளாறு, உடல் வலி, மன உளைச்சல், மற்றும் கீழே விழுந்து கை காலில் காயம் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளி மற்றும் தொழிற்சாலைகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை எனவும், பணம் வீணாவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாக காவல்துறை முறையாக பணி செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இராஜபாளையம் சாலைகளில் பயணம் செய்வதன் மூலம் வாகனம் அதிகமாக பழுதாகிறது மற்றும் பெட்ரோல் தேவையும் அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.மொத்தத்தில் இராஜபாளையம் நகரம் நரகமாக மாறியுள்ளதாக கருத்து கூறியுள்ளனர்.

ஆய்வறிக்கையின் தொகுப்பாக...
1. எங்களது ஆய்வின்போது 91.6% மக்கள் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் மோசமாக நடைபெற்று உள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் அடிப்படையில் உயர்மட்ட அளவிலான விசாரணை செய்து,அதனடிப்படையில் இப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மேலும் இதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 2.இப்பணிகளில் பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்தனர் பலருக்கு கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது மேலும் தாமிரபரணி பாதாளச் சாக்கடை, இரயில்வே மேம்பால பணிகளால் ஏற்பட்ட தூசி, புழுதி காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு அதன் மூலம் உயிரிழப்பும் நடந்துள்ளது .எனவே பாதிக்கப்பட்டோருக்கும் உயிரிழந்தோருக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

3. தாமிரபரணி குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பால பணிகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.எங்களது ஆய்வின்படி 81.1% நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி , சுவாசப் பிரச்சனை உள்ளது என்று கூறியதன் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

5.ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட மூன்று பணிகளும் துவங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . இன்னும் 50 சதவீத பணிகள் கூட முடிவடையாத நிலையில் மேற்கண்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் செலவு செய்யப்பட்ட தொகை நிர்ணயிக்கப்பட்ட காலம் , தாமதத்திற்கான காரணம் போன்றவைகளை மக்கள் மத்தியில் அரசு தெரிவிக்க வேண்டும்.

உடனடியாக செய்யவேண்டியது
1.    நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் பணியை துவங்க ஏதுவாக நில ஆர்ஜித பணியினை உடனடியாக முடிக்க வேண்டும்.

2.    மேம்பால பணி நடைபெறும் இடத்திற்கு கிழக்கே பள்ளி கல்லூரி தொழிற்சாலைகள் இருப்பதால் தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர். மேலும் சத்திரப்பட்டி ஆலங்குளம் பகுதி கிராமங்களில் இருந்து தினம் தோறும் வேலை வியாபாரம் நிமிர்த்தமாக ஏராளமான மக்கள் இராஜபாளையம் வந்து செல்கின்றனர் எனவே இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ செல்ல கணபதியாபுரம் P.A.C.R பாலிடெக்னிக் வழியாகச் செல்ல பாதையை சீரமைத்து சாலை வசதி தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். 

3.     பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மலையடிப்பட்டி 60 அடி சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

4.    நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்திட T.Pமில்ஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

5.     அனைத்து தெருக்களிலும் தாமிரபரணி பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சமன் செய்து தெருக்களை சீரமைக்க வேண்டும்.

6.     தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை, இரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

ஆமை வேகத்தில் கட்டுமானப்பணி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரபட்டி பகுதியிலிருந்து இராஜபாளையம் நகருக்கு செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. தினம்தோறும் வேலை, படிப்பு, வியாபாரம்
நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் இராஜபாளையம் சென்று திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆமைவேகத்தில் நடக்கும் மேம்பாலப் பணியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப் பணி ஆகியவையும் எப்போது முடியும்,தினம்தோறும் நரக வேதனையாக உள்ளதே என வேதனைப்படுகின்றனர் மக்கள். பணிகளை விரைவாக முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நட
வடிக்கை எடுக்கவேண்டும். - சிபிஎம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.முனியாண்டி

கொடும் வேதனையை அனுபவிக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள்
சேத்தூர், முகவூர், தளவாய்புரம், சுந்தரராஜபுரம், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய விளை  பொருட்களை நாள்தோறும்இராஜபாளையம் நகருக்கு கொண்டு வருகின்றனர். தளவாய்புரம், புத்தூர், செட்டியார்பட்டி. பகுதிகளிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள்  கார்மெண்ட்ஸ் பணிக்காக இராஜபாளையம் நகருக்கு வருகின்றனர்.தாங்கள் தினம்தோறும் “நரக வேதனையை” அனுபவிப்பதாகக் கூறுகின்றனர். அதற்குக் காரணம் சாலைகள் முழுவதும் குண்டும்-குழியுமாக மாறியிருப்பது தான். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். - மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ராமர்.

இராஜபாளையம் நகராட்சியில் நடைபெறக்கூடிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலப் பணிகளால் மக்கள்அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. அது தொடர்பான ஆய்வறிக்கையை நகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, நகர் செயலாளர் பி.மாரியப்பன், ராமர், பிரசாந்த், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மாடசாமி, வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் பாரத் மற்றும் நகர் குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன்’ சிவஞானம் பன்னீர் செல்வம், பகிர்வு அறக்கட்டளை செல்வகுமார் அறம் அறக்கட்டளை மணிகண்டன், அட்சயபாத்திரம் எம்.எஸ்.ஆர்.ராஜா, மனிதி அமைப்பின் நிர்வாகி செல்வி, கண்ணன், விஜயகுமார், அம்மாசி ஆகியோர் உடனிருந்தனர்.

தொகுப்பு: பி.மாரியப்பன்

இராஜபாளையம் நகரச் செயலாளர், சிபிஐ(எம்)

 

;