tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டம்– பாஜகவின் பொய் பிரச்சாரத்தை எதிர்கொள்வது எவ்வாறு? பாகம்-3

தேசப்பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானிலும், கிழக்கு பாகிஸ்தானிலும் மதரீதியிலான மக்கள்தொகை தேசப்பிரிவினைக்குப் பிறகு ஒரே மாதிரியாக இருக்கவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏறத்தாழ முஸ்லீம்கள் மட்டுமே கொண்டதாக மேற்கு பாகிஸ்தானும், ஹிந்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததாக கிழக்கு பாகிஸ்தானும் உருவாகி இருந்தன. இதேபோன்று தேசப்பிரிவினையின் போது, அந்த காலகட்டத்தில் மேற்கே பஞ்சாபிலும், கிழக்கே வங்காளத்திலும்  நடைபெற்ற இடப்பெயர்வுகளும் தங்களுக்குள் வேறுபட்டே இருந்தன.

தேசப்பிரிவினை குறித்தும், 1947இல் இந்திய பிரிவினையின் போது நடந்த இடப்பெயர்வு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்ட எம்தத் ஹாக் என்ற ஆய்வறிஞர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்ற ’அகதிகள் ஆய்வு குறித்த ஆய்விதழ்’ என்ற இதழில் தனது ஆய்வு முடிவுகளை 1995ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த ஆய்வுக் கட்டுரையில், ’1947 ஜுன் 3 அன்று அறிவிக்கப்பட்ட பிரிவினைத் திட்டம், 1947 ஆகஸ்ட் 14 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் (1947–1951) நடந்த இடப்பெயர்வு வலுக்கட்டாயத்தின் பேரில் நடைபெற்றதாகவும், பின்னர் 1951-1961 காலகட்டத்தில் நடந்த இடப்பெயர்வுகள் தன்னிச்சையாக, வலுக்கட்டாயமாக என்று இருவகைகளிலும் நடைபெற்றன’ என்று குறிப்பிடுகின்ற அவர், மேலும் பல முக்கியமான தகவல்களைத் தருகிறார்.

”கிழக்கிந்திய கம்பெனியும், வங்க நிலக்கிழார்களும் வங்க  நிலப்பகுதியிலிருந்து வசூலிக்கப்படும் வேளாண்மை நிலவரி வருவாயை தங்களுக்குள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று தங்களுக்கிடையே செய்து கொண்ட ’வங்க நிரந்தரத் தீர்வு’ என்ற ஒப்பந்தத்தின் விளைவாக வங்க ஹிந்து நிலக்கிழார்களுக்கிடையே எழுந்த பொருளாதார எழுச்சி (முகர்ஜி, 1957), தாங்கள் இழந்து விட்ட ஆளுகின்ற வர்க்கம் என்ற அந்தஸ்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என்று மேற்கிந்தியாவில் இருந்த முஸ்லீம்களிடையே இருந்த பேராசை (கோபால், 1959) என்று மிகமுக்கியமான இரண்டு சமூக காரணிகள், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையே இருந்து வந்த மதரீதியான  பிளவுகளை அதிகப்படுத்தின என்ற கருத்துக்கள் பல ஆய்வாளர்களிடம் இருந்து வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி, அதைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரையிலும் வங்காளத்தில் நடைபெற்ற விவசாயிகளின் இயக்கங்கள், இவ்வாறு மதரீதியான வர்க்க முரண்கள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. ஆளுகின்ற உரிமை வேண்டுமென்ற ஆவலுடன் பம்பாய், கராச்சி பகுதிகளில் வணிகம் மற்றும் தொழில் சார்ந்து முன்னேறியிருந்த முஸ்லீம்கள் இருந்து வந்தனர். வங்காளப் பகுதியில் நிலம் சார்ந்து இருந்த முஸ்லீம்களிடம் இருந்து வந்த முஸ்லீம்லீக் தலைமையை தங்கள் பக்கமாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடிந்தது. இருதேசக் கோட்பாடு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலை, வர்க்கப் போர், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, தனிப்பட்ட விரோதங்கள் போன்று பல காரணங்கள் இந்திய தேசப் பிரிவினை, அதைத் தொடர்ந்த மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இருந்ததாக கெல்லர் (1975) குறிப்பிடுகிறார்.

ஹிந்துக்களும், முஸ்லீம்களும் அறநெறிக் கோட்பாடுகள், மதநம்பிக்கை, வாழ்க்கை முறை, சமூகக் கட்டமைப்பு என்று பலவகைகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவர்களாகவே இருந்தனர். 1888ஆம் ஆண்டிலேயே முஸ்லீம்களுக்கு தனிச்சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சையத் அகமத்கான் முன்வைத்திருந்த போதிலும், இருவேறு தேசங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஜின்னா முன்வைக்கின்ற வரையிலும் முஸ்லீம்களிடம் அந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறவே இல்லை. மதச்சார்பற்ற, ஒன்றுபட்ட இந்தியாவிற்குள் மட்டுமே தங்களுடைய உரிமைகளை முஸ்லீம்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை கொண்டிருந்த ஆசாத் போன்ற முஸ்லீம் தலைவர்களும் அப்போது இருந்து வந்தனர். 

பல்வேறு வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான காரணங்களே பிரிவினைக்கு காரணமாக இருந்ததாக குறிப்பிடும் கெல்லர், அரசியல் கட்சிகள், மதக் குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையே இருந்த முரண்கள், அவநம்பிக்கை, நடைபெற்ற பல்வேறு வகுப்புவாதக் கலவரங்கள், தலைவர்கள் முதுமையை எட்டியது போன்ற காரணங்கள் பிரிவினைக்குப் போதுமானவையாக இருந்தன என்று குறிப்பிடுகிறார். வரலாறு உருவாக்கி வைத்திருந்த பொருளாதார, அரசியல், கலாச்சார ஒற்றுமையைச் சிதைக்கின்ற வகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் பல்வேறு மதம், சாதி சார்ந்த மக்களை ஒருவருக்கெதிராக மற்றவரை நிறுத்தி வைத்ததாக ஹன்கோவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

1946ஆம் ஆண்டு நடைபெற்ற வகுப்புவாதக் கலவரங்களுக்குப் பிறகு, சுதந்திரம் அடைந்த வேளையில் மீண்டும் லாகூர், அமிர்தசரஸ், டெல்லி, கல்கத்தா போன்ற இடங்களில் கலவரங்கள் வெடித்தன. சுதந்திரம் அறிவிக்கப்பட்ட 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய நாட்களுக்குப் பிறகு, பத்து தினங்களுக்குள்ளாக மேற்கு பஞ்சாபில் இருந்த லாகூரில் இருந்து 75 சதவீத முஸ்லீம் அல்லாதவர்கள் இந்தியா நோக்கியும், எதிர்திசையில் கிழக்கு பஞ்சாபில் இருந்த அமிர்தசரஸில் இருந்து 70000 முஸ்லீம்கள் லாகூர் நோக்கியும் புறப்பட்டனர். மொத்தத்தில் மேற்கு பஞ்சாபில் இருந்து 75 லட்சம் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவிற்கும், கிழக்கு பஞ்சாபில் இருந்து 60 லட்சம் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்ததாக கெல்லர் குறிப்பிடுகிறார்.

மத அடிப்படையில், குறிப்பிட்ட மக்களின் இடப்பெயர்வு காரணமாக மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எலாஹி மற்றும் சுல்தானா (1985) ஆகியோர் ஆய்வு நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து  50 லட்சம் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், இந்தியாவில் இருந்து 60 லட்சம் முஸ்லீம்கள் குடிபெயர்ந்ததன் விளைவாக 1941ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 79 சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள்தொகை, 1951ஆம் ஆண்டில் ஏறத்தாழ 97 சதவீதமாக அதிகரித்திருந்தது. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து  இந்தியாவிற்குள் ஹிந்துக்களின் வெளியேற்றம் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு நடந்து வந்ததால் 1941ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில்  71 சதவீதமாக இருந்த முஸ்லீம்களின் மக்கள்தொகை 1951ஆம் ஆண்டு 75 சதவீதமாகவும், 1961 ஆம் ஆண்டில் 80 சதவீதமாகவும் அதிகரித்தது.  பிரிவினைக்கு முன்னர், கிழக்கே சுமார் 1.3 கோடியாக இருந்த சிறுபான்மை (ஹிந்துக்கள்) மக்கள் தொகை, 1961இல் அது 90 லட்சம் என்று குறைந்தது.  இறப்பைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தத்தில் 45 லட்சம் ஹிந்துக்கள் மட்டுமே கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று மதிப்பிட்ட லஹிரி (1964), கெல்லர் குறிப்பிடுவது போன்ற இடப்பெயர்வையும் உறுதிப்படுத்துகிறார்.

மேற்கு பஞ்சாபில் இருந்து கிழக்கு பஞ்சாபிற்கு இடம் பெயர்ந்த சீக்கியர்களும், ஹிந்துக்களும் கிடைத்த வேலைகளைச் செய்து நாட்டின் பல்வேறு பொருளாதரம் சார்ந்த பகுதிகளுக்குள் பரவினர். ஆனால் கிழக்குப் பகுதியில் இருந்த வங்காளி ஹிந்துக்கள் மேற்குவங்காளம், அசாம், திரிபுரா என்று குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே சென்று, அங்கே விவசாயம் சார்ந்த வேலைகளில் மட்டுமே ஈடுபட்டனர் என்று முகர்ஜி (1985) குறிப்பிடுகிறார். மேற்குப் பகுதியில் பெரும்பாலும் வன்முறை நிறைந்த கலவரங்கள், கொலைகள், ஆள்கடத்தல், துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களால் பெரும்பாலும் வலுக்கட்டாயத்தின் பேரில் 1947-1951 காலகட்டத்தில் இடப்பெயர்வுகள் நடைபெற்றன. ஆனால் கிழக்கே வங்காளப் பகுதியில் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய இடப்பெயர்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அவ்வப்போது ஏற்பட்டு வந்த வகுப்புவாத முரண்களால் மட்டுமல்லாது, தொழில் மற்றும் நிர்வாக ரீதியான பதவிகளுக்கு கிழக்கு பாகிஸ்தானில் இருந்த முஸ்லீம்லீக் அரசாங்கம் முஸ்லீம்களுக்கே முன்னுரிமை தந்ததால் அதுவரையிலும் விவசாயம் சாராத வேலைகளில் ஈடுபட்டு வந்த உயர்சாதி ஹிந்துக்களும், இன்னும் கூடுதலாக பொருளாதார நலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் தொடர்ந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்து கொண்டே இருந்தனர் (தேவி, 1974). இந்தப் பகுதியில் இருந்த ஹிந்துக்கள் தங்களுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தின் காரணமாக இல்லாமல், சமூக, பொருளாதார காரணங்களாலேயே கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்தனர்”.  

பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருக்கும் எம்தத் ஹாக்கின் இந்த ஆய்வுக் கட்டுரை, இவர்கள் முன்வைக்கின்ற பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தப் போதுமானதாக இருக்கின்றது. பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஒரே பகுதியாக இருக்கவில்லை, முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை மேற்கே 3 சதவீதம், கிழக்கே 22 சதவீதம் என்று பாகிஸ்தானின் இரண்டு பகுதிகளிலும் மதவாரியான மக்கள்தொகை முதலில் இருந்தே வெவ்வேறாக இருந்தன. அந்த இரு பகுதிகளிலும் நடைபெற்ற இடப்பெயர்வுகளும் முற்றிலும் மாறுபட்டவையாக, வேறு காரணங்களை முன்னிறுத்தி வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தவையாக இருந்திருக்கின்றன எனும் போது, வெறுமனே தேசப் பிரிவினை, மதமாற்றம், மத துன்புறுத்தல் என்று மேலோட்டமாக இந்தப் பிரச்சனைக்குள் செல்வது அறிவார்ந்தவர்களுக்குச் சாத்தியமாகாது.  

இவர்கள் குறிப்பிடுகின்றவாறு தேசப்பிரிவினைக்குப் பிறகு  ஒட்டுமொத்த பாகிஸ்தான் பகுதியில் முஸ்லீம்கள் அல்லாத மக்கள்தொகை 14.2 சதவீதம் என்ற அளவிலேதான் இருந்தது. அதையே இவர்கள் இன்றைய பாகிஸ்தான் பகுதியில் இருந்ததாகக் கூறி  பொய்யுரைக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில், அன்றைக்கு இருந்த முஸ்லீம்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை 3.44 சதவீதம் என்பதே உண்மை. இதையே, அந்தப் பகுதியில் (இன்றைய பாகிஸ்தான்) பிரிவினைக்கு முன்பாக 79 சதவீதம் இருந்த முஸ்லீம்களின் மக்கள்தொகை, பிரிவினைக்குப் பிறகு 97 சதவீத அளவிற்கு உயர்ந்து விட்டது என்று கெல்லர் தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தானில் இன்றைக்கும் அதிகரித்து வரும் ஹிந்து மக்கள்தொகை

1961ஆம் ஆண்டு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் மேற்கு பாகிஸ்தானில் இருந்த முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்தது. அதாவது, 1951ஆம் ஆண்டில் 3.44 சதவீதம் இருந்த முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை, 1961ஆம் ஆண்டில் 2.83 சதவீதம் என்று குறைந்தது. வங்கதேசப் போரின் விளைவாக, 1971ஆம் ஆண்டு மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 1972ஆம் ஆண்டில்தான் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டது. அந்த 1972ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை 2.83 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகவும், அதற்கடுத்து 1981இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 3.30 சதவீதமாகவும் உயர்ந்திருந்தது. 1981க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளாத பாகிஸ்தான் அரசாங்கம் 1998ஆம் ஆண்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அந்த கணக்கெடுப்பிலும் முஸ்லீம் அல்லாதவர்களின் எண்ணிக்கை 3.70 சதவீதம் என்று அதிகரித்தே இருந்தது.

ஆக இந்தப் பகுதியில், அதாவது இன்றைய பாகிஸ்தான் பகுதியில் பாஜகவினர் குறிப்பிடுவதைப் போன்று, ஹிந்துக்களின் எண்ணிக்கை ஒருபோதும் 15 அல்லது 18 சதவீதம் என்பதாக இருந்ததே இல்லை. பாகிஸ்தானில் இருக்கின்ற ஹிந்துக்களின் எண்ணிக்கை இவர்கள் சொல்வது போல குறையவில்லை, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.     

இந்தியாவிற்குள் அமைந்திருக்கும் வங்கதேசம்

வங்கதேசப் பகுதியில் 22 சதவீதம் இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 9.5 சதவீதமாக குறைந்திருக்கிறது என்று சொல்வதும் இதே போன்று தரவுகளைத் திரித்துக் கூறுகின்றதகாவே இருக்கின்றது. வங்கதேசம் என்ற நாடு 1971ஆம் ஆண்டில் உருவானது என்பதை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தால், 1951ஆம் ஆண்டில் இவர்கள் கூறுகின்ற வங்கதேசத்தின் மக்கள்தொகை கணக்கு என்பது ஒட்டுமொத்த (கிழக்கு மற்றும் மேற்கு) பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் வழியாக கிடைத்த கிழக்கு பாகிஸ்தான் குறித்தது என்பதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு 1951ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்பதாக கொண்டு பார்த்தால், அங்கே 22 சதவீதம் பேர் ஹிந்துக்களாக இருந்தனர் என்று இவர்கள் குறிப்பிடுவது உண்மைதான். வங்கதேசம் மேற்கொண்ட 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஹிந்துக்கள் 8.3 சதவீதமாக அங்கே இருப்பதும் உண்மைதான். 

ஆனால் வங்கதேசப் பகுதியில் ஹிந்துக்களின் எண்ணிக்கை இவ்வாறு குறைந்திருப்பதற்கு வெறுமனே மதரீதியான துன்புறுத்தல் மட்டுமே காரணம் என்று கூற முடியாது என்பதை எம்தத் ஹாக் ஆய்வுகளின் வழி முன்னரே பார்த்தோம். அந்தக் காரணங்களை மறைத்துக் கொண்டு, ஒற்றையாக முஸ்லீம்கள் மீது குற்றம் சுமத்தி இவ்வாறாக இவர்கள் சொல்கிறார்கள் என்றால், அது இந்தியாவில் உள்ள ஹிந்துக்களை அச்சுறுத்தி துருவமயப்படுத்துவதற்கான தந்திரமாக மட்டுமே இருக்க முடியும். வங்கதேசத்திலிருந்து ஹிந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களும் கூட வெளியேறியிருக்கின்றனர் என்பதை அசாம் பிரச்சனையின் வழியாக அறிந்து கொள்ள முடியும். வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைவது மிக எளிது என்ற அமைப்பிலேயே வங்கதேசம் என்ற நாடு, சுற்றிலும் இந்திய மாநிலங்களால் சூழப்பட்டு, இந்தியாவிற்குள் அமைந்திருக்கின்ற நாடாக இருக்கிறது என்பதை நாம் இங்கே கருத்தில் கொள்வது அவசியம். 

 

image.png

இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைப் பகுதிகளைப் பொறுத்தவரை, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கிடையே உள்ள எல்லைப்பகுதி 4096 கிலோமீட்டர் நீளத்துடன், உலக அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 2217 கி.மீ., திரிபுராவில் 856 கி.மீ., மேகாலயாவில் 443 கி.மீ., மிசோரமில் 310 கி.மீ., அசாமில் 263 கி,மீ. என்று வங்கதேசம் தனது எல்லைப் பகுதியை ஐந்து இந்திய மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.  

வங்கதேசத்தில் நிலவி வந்த, வருகின்ற சமூக, பொருளாதார நிலைமைகள் இவ்வாறு ஹிந்துக்களும், முஸ்லீம்களும் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவிற்குள் நுழைவதைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றன. எனவே வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஹிந்து மக்கள்தொகை குறைவை, வெறுமனே இவர்கள் கூறுவதைப் போன்று மதரீதியான துன்புறுத்தல் மூலமாக மட்டுமே நடந்தது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சமூக, பொருளாதார காரணங்களே முக்கியமானவை என்பதை நாம் எந்த விதத்திலும் புறந்தள்ளி விடக் கூடாது. மிகஅண்மையில் வெளியாகி இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களின் மூலம் இதனை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

சுஷ்மா ஸ்வராஜ் சொன்ன உண்மை

2009ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து, இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்குள் ஹிந்துக்கள் செல்வது அதிகரித்திருக்கிறது என்று 2018ஆம் ஆண்டு வெளியான தகவல் இவர்களின் பிரச்சாரத் ’திறமை’யை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்று வங்கதேசத்தில் முத்திரை குத்தப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளாகி இருக்கின்ற ஷரியார் கபீர் என்ற பத்திரிக்கையாளர் ”கடந்த பத்தாண்டுகளில் 2,50,000 ஹிந்துக்கள் இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்குத் திரும்பியுள்ளனர். வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் யாரும் புதிதாக நுழைந்திருப்பதாகத் தெரிய வரவில்லை. இந்த இடப்பெயர்வின் காரணமாக ஹிந்துக்களின் எண்ணிக்கை வங்கதேசத்தில் 2.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது” என்று கூறியிருந்தார். இதனை அப்படியே வழிமொழிந்து 2018 ஜுலை 19 அன்று மாநிலங்களவையில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “2011ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் 8.4 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டில் 10.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று மக்கள்தொகை குறித்து கணக்கெடுக்கின்ற வங்கதேசத்தின் புள்ளியியல் துறை அறிவித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

தங்களுடைய கட்சியைச் சார்ந்த மூத்த அமைச்சர் ஒருவரே அதிகாரப்பூர்வமாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கூறியவற்றை மறைத்து, அமைதி காத்து நிற்கின்ற பாஜகவினரிடம் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான திறமை இருப்பதாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர, வங்கதேசத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?  இந்தியாவில் மதரீதியாக ஹிந்துக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகி வங்கதேசத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்திருப்பதாலேயே, வங்கதேசத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை இப்போது  அதிகரித்திருக்கிறது என்று இவர்களைப் போல நம்மால் கூற முடியாது என்பதை நன்றாக அறிந்தே இவர்கள் இவ்வாறு பொய் பரப்பி வருகிறார்கள். 

இவ்வாறு வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களாலேயே அசாமில் இன்று வரை பிரச்சனை நிலவி வருவதையும், இப்போது எழுந்திருக்கின்ற பிரச்சனையின் அடிநாதமாக இருக்கின்ற குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கான மையப் புள்ளியாக இந்த எல்லைப் பகுதிகளில் இவ்வாறு நடந்தேறியிருக்கின்ற ஊடுருவல்களே காரணமாக இருக்கிறது என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.  

அன்றே பயமுறுத்தினார்கள் . . .

இந்தியாவில் 1947இல் 85 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 2011இல் 79.8 சதவீதமாக குறைந்தும், அதே காலகட்டத்தில் இந்திய முஸ்லீம்களின் எண்ணிக்கை 9.5 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்று அடுத்து கூறுகிறார்கள். இந்தியாவில் ஹிந்துக்களின் மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது என்ற வாதம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. 1881ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 75.1 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 1901ஆம் ஆண்டில் 72.9 சதவீதமாக குறைந்து விட்டது என்பதாக, பிரிட்டிஷ் இந்தியாவிலேயே முஸ்லீம்கள் ஹிந்துக்களை மிஞ்சி விடுவார்கள் என்ற அச்ச உணர்வை ஹிந்துக்களின் மத்தியில் இவர்கள் பரப்பினார்கள். அன்று சொன்னதையே சற்றும் சுருதி பிசகாது, சுதந்திர இந்தியாவில் 1951ஆம் ஆண்டு 84.1 சதவீதம் இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை  2011ஆம் ஆண்டில் 79.8 சதவீதமாக குறைந்து விட்டது என்று இன்றைக்கும் சற்றும் சளைக்காமல் கூறி வருகிறார்கள்.

1881ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் 75.1 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை, 1951ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் 84.1 சதவீதமாக ஏன் அதிகரித்தது என்ற கேள்வியை இவர்களிடம் வைத்தால், நமக்கு கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்? மிக எளிதான இந்த கேள்விக்கு, தேசப்பிரிவினைதான் காரணம் என்ற நேரடியான பதிலைக் கூறாமல், மிகவும் சிக்கலான மதச்சாயம் பூசப்பட்ட பதிலைத் தேடுவதற்கான காலத்தைத்தான் இவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.   

(தொடரும்)

முனைவர் தா.சந்திரகுரு

;