சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவச கோவிட்19 தடுப்பூசி கொடுப்போம் என பாஜக அறிவித்தது. இந்தஅறிவிப்பு இயற்கையிலேயே பல எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறாவிட்டால் தடுப்பூசி கிடைக்காதா? பீகார் மாநிலம் தவிர ஏனைய மாநில மக்களுக்கு தடுப்பூசி தரமாட்டார்களா? இது தவறான அரசியல் நெறிமுறை அல்லவா? என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. பா.ஜ.க. அரசியல் நாகரிகம்அல்லது நெறிமுறைகளை பின்பற்றும் கட்சி அல்ல! இந்து ராஷ்டிராவை அமைக்க அரசியல் சட்டத்தை சிதைத்திட துணியும் ஒரு கட்சி அரசியல் நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் என எவராவது எண்ணினால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்.
இலவச தடுப்பூசி அறிவிப்பு ஒரு பொன்னான அரசியல்வாய்ப்பு என எண்ணிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தமிழக மக்களுக்கு தடுப்பூசி இலவசம் என அறிவித்தார். இதன்மூலம் தமிழக மக்களின் ஆதரவை அப்படியே அள்ளிவிடலாம் என முதல்வர் நினைத்தார் போலும்! கோவிட் பெருந்தொற்று ஒரு மிகப்பெரிய பேரிடர். இதற்கான தடுப்பூசி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை! அதனை பெறுவது மக்களின் மருத்துவ உரிமை! தடுப்பூசியை ஏதோ இரக்கப்பட்டு தருவது போல பேசும் முதல்வரும் மத்திய அரசாங்க தலைவர்களும் இவர்கள் தம்மை “நவீன சக்கரவர்த்திகள்” என நினைத்துக் கொள்கிறார்கள்!
தடுப்பூசி இன்றைய நிலைமை!
தடுப்பூசி உருவாக்க சுமார் 200 நிறுவனங்கள் பரிசோதனைகள் செய்ய முன்வந்திருந்தாலும் மூன்றாவது இறுதிக் கட்டத்தில் 4 சீன நிறுவனங்கள்/ 3 அமெரிக்க நிறுவனங்கள்/ 1 ரஷ்ய நிறுவனம்/ 1 ஜெர்மனி நிறுவனம்/2பிரிட்டன் நிறுவனங்கள் உள்ளடக்கிய 10 நிறுவனங்கள்தான் உள்ளன. சீனாவின் 4 நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமானவை. மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள். இந்தியாவின் சைடஸ் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் இரண்டாவது கட்டத்தின் தொடக்கத்தில்தான் உள்ளன. எனவே பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசியைத்தான் நாம் வாங்க வேண்டிய தேவை ஏற்படும்.
சீன அரசாங்கம் மட்டும்தான் தனது தடுப்பூசி உலகின்அனைத்து மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. வேறு எந்த தேசம்அல்லது நிறுவனமும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் என்ன விலையை நிர்ணயிப்பார்கள் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தைதான் எதிர்பார்ப்பார்கள் என்பது கடந்த கால அனுபவம். எனவே தமிழக மக்கள் சுமார் 8 கோடி பேருக்கு அல்லது இந்திய மக்கள் சுமார் 140 கோடி பேருக்கும் தடுப்பூசியை உத்தரவாதப்படுத்துவது ஒரு மிகப்பெரிய சவலாக இருக்கும். குறிப்பாக எவ்வளவு செலவு ஆகும்? எவ்வளவு விரைவில்தடுப்பூசி போடப்படும்? அதற்கான மருத்துவ ஊழியர்கள் மற்றும் இதர கட்டமைப்புகள் எவ்வளவு தேவை? இவைபற்றிய விவரங்கள் அரசிடம் இல்லை அல்லது அவை வெளியிடப்படவில்லை. இந்தச் சூழலில்தான் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் தடுப்பூசி பிரச்சனையில் ‘அரசியல் கொள்முதலுக்கு’ முனைகின்றன.
தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதா?
கோவிட் தொற்றை இந்தியாவிலேயே மிகத்திறமையாக கட்டுப்படுத்திவிட்டதாக தமிழக அரசாங்கம் சுயபாராட்டுப் பத்திரத்தை வாசித்துக் கொள்கிறது. எனினும் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் பொழுது அது உண்மை இல்லை என்பதை கீழ்க்கண்ட விவரங்கள் தெரிவிக்கின்றன: கோவிட் தொற்றை எதிர்கொள்வதில் மிக முக்கியமான அம்சம் அது எந்த அளவுக்கு மரணம் தடுக்கப்படுகிறது என்பதுதான். இந்த அம்சத்தில் தமிழகம் கேரளாவுக்கு மிகவும் பின்தங்கியுள்ளது. ஆந்திராவுடன் மட்டுமல்ல; அகில இந்திய சராசரியுடன் ஒப்பிடும் பொழுதும் பின்னால் உள்ளது. தொற்று மரண விகிதத்தில் தென் மாநிலங்களில் மட்டுமல்ல; அகில இந்திய சராசரியுடன் ஒப்பிடும் பொழுதும் தமிழகம்தான் மோசமாக உள்ளது. சில அம்சங்களில் தமிழகம் ஓரளவுக்கு செயல்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் குறிப்பாக மரணங்களை தடுப்பதில் தமிழகஅரசாங்கம் சாதித்ததாக கூற இயலாது. இந்தப் பின்னணியில்தான் தடுப்பூசி இலவசமாக தருவோம் எனும் முதல்வரின் அறிவிப்பை பார்க்க வேண்டியுள்ளது.
தமிழக அரசாங்கத்தின் திட்டம் என்ன?
இதுவரை எந்த நிறுவனமும் தடுப்பூசிக்கு என்ன விலை நிர்ணயிக்கப்படும் என்பதை அறிவிக்கவில்லை. சில வெளிநாட்டு ஆய்வாளர்கள் தடுப்பூசியின் விலை 3 முதல் 30 டாலர் (ரூ.240 முதல் 2400 வரை) வரை இருக்கும் எனகூறுகின்றனர். எனினும் ஆக்ஸ்ஃபோர்டு (ஆஸ்ட்ரா செனக்கா) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சீரம் நிறுவனம் (Serum Institute) எனும் இந்திய நிறுவனம் “கொவாக்ஸ் குழு” (Covax alliance) தேசங்களுக்கு ஒரு ஊசி ரூ.225க்கு தருவதாக கூறியுள்ளது. ஆனால் இந்தியா இந்த குழுவில் இன்னும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நபருக்கு இரண்டு ஊசிகள் போட வேண்டும்.ஆகவே தடுப்பூசி செலவு மட்டும் ஒரு நபருக்கு ரூ.450 ஆகும். 2020ல் தமிழக மக்கள் தொகை சுமார் 8 கோடி என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஆகும் செலவுரூ.450 எனும் அடிப்படையில் தடுப்பூசிக்கு மட்டும் ரூ.3600 கோடி தேவைப்படும். இந்த தடுப்பூசியை மைனஸ் 2முதல் 10 டிகிரி குளிரில் பாதுகாக்க வேண்டும். அதற்கான குளிர்பதன ஏற்பாடுகள் தேவை; ஏராளமான பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் தேவை; போக்குவரத்து மற்றும் ஊசிகள் செலவும் அடங்கும். அனைத்து செலவுகளையும் சேர்த்தால் சுமார் ரூ.5000 கோடி தேவைப்படும். தமிழகத்தின் சென்ற ஆண்டு மருத்துவ பட்ஜெட் ரூ.13,000கோடிக்கும் குறைவு. தடுப்பூசிக்கு மட்டும் மருத்துவ பட்ஜெட்டில் சுமார் 40% ஒதுக்கப்பட வேண்டும். ஒரு வேளை சீரம் நிறுவனம் விலையை உயர்த்தினால் இந்த தொகை இன்னும் கூடுதலாக தேவைப்படும்.
மாநில அரசுக்கு தைரியம் உண்டா?
கோவிட் மருந்துகள் அல்லது தடுப்பூசியை எந்த மாநில அரசாங்கமும் நேரடியாக வெளிநாடுகளிடமிருந்து வாங்கக் கூடாது என மோடி அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது. எனவே தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசியை அ.தி.மு.க. அரசாங்கம் மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மறுத்தால் வாதாடிப் போராடிப் பெற வேண்டும். அதற்கான அரசியல் தைரியம் அ.தி.மு.க. அரசாங்கத்துக்கு உண்டா?இந்த பெரிய தொகையை தமிழக அரசாங்கம் எப்படிதிரட்டும் என்பது மிக முக்கியமான கேள்வி. ஏற்கெனவேசுமார் ரூ.4 இலட்சம் கோடி கடனில் தமிழகம் திணறுகிறது. தடுப்பூசியை தமிழக அரசாங்கம் இலவசமாக தரும்படி மத்திய அரசிடம் வற்புறுத்துமா? தமிழகத்தில் நடைமுறையில் உள்ள குழந்தைகளின் தடுப்பூசி திட்டங்கள் பாதிக்கப்படாமல் எப்படி கோவிட் தடுப்பூசி திட்டத்தை அமலாக்குவது? தமிழகத்தில் உள்ள ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் விலையில்லா திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் எப்படி தடுப்பூசி அனைவருக்கும் தருவது?எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்பூசி கொள்முதலில் ஊழல் தடுக்கப்படுமா? ஏனெனில் முகக்கவசம்/ கோவிட் ஊழியர்கள் செலவு/ நோயாளிகள் உணவுச் செலவு என பலவற்றில் ஊழல் நடந்துள்ளது எனும் குற்றச்சாட்டுகள் உள்ளன. தனக்கு வரவேண்டிய ஒக்கி புயல் நிதி அல்லது ஜி.எஸ்.டி. நிதியை மத்திய அரசிடம் வலுவாக கேட்கும் தைரியம் அ.தி.மு.க. அரசாங்கத்துக்கு இல்லை என்பதை எப்படி புறந்தள்ள முடியும்?
தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி உத்தரவாதப்படுத்துவது அவசியம் ஆகும். அதேசமயத்தில் இந்த பெரிய சவாலை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசாங்கம் பல ஓட்டைகளை கொண்ட அரசுஇயந்திரத்தை மட்டுமே நம்பியிருக்கப் போகிறதா அல்லது அரசியல் கட்சிகள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பையும் பெற முயற்சிக்குமா? தடுப்பூசிக்கு ஆகும்நிதியை மற்ற எந்த திட்டமும் பாதிக்கப்படாமல் எப்படி திரட்டப்படும்? இவற்றை அ.தி.மு.க.அரசாங்கம் மக்களுக்கு தெளிவாக கூறவேண்டும். கோவிட் பெருந்தொற்று பேரிடரை குறுகிய அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்துவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை எடப்பாடி அரசாங்கம் உணர வேண்டும்!
மாநிலம் தொற்று எண்ணிக்கை மரணம் மரணம்./மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கு தொற்று மரண விகிதம் (CFR)
கேரளா 3,92,930 1,332 4 0.34
தமிழகம் 7,09,005 10,924 14 1.54
கர்நாடகா 8,02,817 10,905 16 1.36
ஆந்திரா 8,07,023 6,587 12 0.82
இந்தியா 78,64,811 1,18,534 9 1.51
==அ.அன்வர் உசேன்==