tamilnadu

img

பனாரஸ் காந்தியும், வாரணாசி மோடியும் - ராமச்சந்திர குஹா

(2015 - காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூறாண்டு நிறைவுற்ற நிலையில், 2014ஆம்
ஆண்டு நடந்து முடிந்திருந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி போட்டியிட்ட வாரணாசித் தொகுதியுடன்
தொடர்புடையதாக இருந்த பனாரஸுக்கு காந்தியின் வருகைகள் குறித்து ராமச்சந்திர குஹா எழுதியிருந்த
கட்டுரை)

தனது கிராமங்களில் இந்தியா வசிக்கின்றது என்று காந்தி அடிக்கடி கூறுவார். நகரங்களை நவீன நாகரிக
அவலத்தின் அடையாளமாகப் பார்த்த அவர், தென்னாப்பிரிக்காவில் இரண்டு கிராமப்புற குடியிருப்புகளையும்,
இந்தியாவில் இரண்டு கிராமக் குடியிருப்புகளையும் நிறுவினார். ஆயினும் காந்தியின் சொந்த வாழ்க்கையின்
பல முரண்பாடுகளில் ஒன்றாக, அவர் நகரங்களாலேயே வடிவமைக்கப்பட்டவராக இருந்தார். லண்டன்
வெஜிடேரியன் சொசைட்டி மூலமாகவே, ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் மதிப்பை அவர்
முதன்முதலாகக் கற்றுக் கொண்டார். அந்த சொசைட்டியின் பத்திரிகையில் தான் எழுத்தாளராக தன்னுடைய
பயிற்சியை அவர் ஆரம்பித்தார். அவர் தன்னுடைய முதல் ஆங்கிலேய (கிறிஸ்தவ) நண்பர்களை லண்டனில்
தான் உருவாக்கிக் கொண்டார்.

நகர வாழ்க்கை அனுபவங்களால் மாற்றத்திற்குள்ளானதாகவே காந்தியின் ஏறத்தாழ இருபதாண்டு கால
தென்னாப்பிரிக்க வாசமும் இருந்தது. ஏற்கனவே பம்பாய், ராஜ்கோட்டில் மேற்கொண்டு தோல்வியடைந்திருந்த
வழக்கறிஞர் தொழிலை, முதன்முறையாக தான் தங்கியிருந்த துறைமுக நகரமான டர்பனில் காந்தி
வெற்றிகரமாக நடத்தி வந்தார். அவருடைய கட்சிக்காரர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாகவும், தமிழர்களாகவும்
இருந்ததால், அவருடைய சமூக அனுபவ எல்லை நன்கு விரிவடைந்திருந்தது. வழக்கறிஞர் தொழிலில் அவர்
பெற்ற வெற்றி, பின்னர் அவருடைய பொதுவாழ்க்கையிலும் தொடர்ந்தது. 1893இலிருந்து 1901 வரையிலும்
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வசித்து வந்த காந்தி, நேட்டல் இந்தியன் காங்கிரஸ் என்ற அமைப்பை
நிறுவி, அதன் மூலமாக எண்ணிலடங்காத குறை தீர்க்கும் மனுக்களை அரசுக்கு அனுப்பி வைத்து புலம் பெயர்
இந்தியர்களின் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

1901இல் இந்தியாவிற்குத் திரும்பிய காந்தி, பம்பாயில் தனது வழக்கறிஞர் தொழிலை மீண்டும் துவக்கினார்.
மீண்டும் தோல்வியடைந்ததன் காரணமாக, 1902 டிசம்பர் மாதம் அவர் தென்னாப்பிரிக்காவிற்கே திரும்பினார்.
அந்த இரண்டாவது காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ளமைந்துள்ள ஜோகன்னஸ்பர்க் நகரிலேயே
பெரும்பாலும் வசித்து வந்தார். அங்கே இருந்த போது, தனக்கென்று பத்திரிக்கை ஒன்றைத் துவக்கி
நடத்தியதோடு, சத்தியாகிரகம் பற்றிய கருத்துக்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். ஜோகன்னஸ்பர்கில்
இருந்த போது தன்னுடைய முதல் சிறைவாசத்தைப் பெற்ற காந்தி, பின்னர் நெடுங்காலம் கழித்து நெல்சன்
மண்டேலா அடைக்கப்பட்ட சிறையிலும் ஒரு முறை அடைக்கப்பட்டிருந்தார்.

காந்தியின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றியவையாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில்
இருந்த நகரங்கள் இருந்தன. இந்தியாவிலும் அது அவ்வாறாகவே இருந்தது. 1919இல் ரௌலட்
சட்டத்திற்கெதிராக அவர் நடத்திய சத்தியாகிரகம் பம்பாயிலிருந்தே நிதி பெற்று அவரால் நடத்தப்பட்டது. நாடு
முழுவதும் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கமும் பம்பாயிலிருந்தே நடத்தப்பட்டது. மேலும் பல
இயக்கங்கள் நகரத்திலிருந்தே நடத்தப்பட்டன. 1947 செப்டம்பரில் கல்கத்தாவில், 1948இல் தில்லியில் என்று
உண்ணாவிரதமிருந்து தனியொரு மனிதனாக வகுப்புவாதக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திய நிகழ்வுகளும்
நகரத்திலே நடந்தவையாகவே இருந்தன.

லண்டன், டர்பன், ஜோகன்னஸ்பர்க், பம்பாய், டெல்லி, கல்கத்தா ஆகிய நகரங்களுடனான காந்திக்கு இருந்த
தொடர்புகள் குறித்து வரலாற்றாய்வாளர்கள், வாழ்க்கைக் குறிப்பு எழுதுபவர்கள் ஏராளமாக எழுதியுள்ளனர்.
மற்ற நகரங்களைக் காட்டிலும், அதிக கதைகளைத் தன்னிடம் கொண்டிருக்கும், மிகப் பழமை வாய்ந்த நகரில்
அவருக்கு ஏற்பட்ட போராட்டங்களைப் பற்றியே, நான் இந்தக் கட்டுரையில் எனது கவனத்தைச் செலுத்த
விரும்புகிறேன். பனாரஸ் என்ற அந்த நகரம் இசை, நாட்டுப்புறப் பாடல்கள், கலை, திரைப்படங்கள் என்று
மதிப்பிற்குரியதாக, மறக்கவியலாத இடமாகத் திகழ்ந்தாலும், காந்தி மற்றும் காந்தியக் கொள்கைகளைப் பற்றிய
ஆய்வுகளைப் பொறுத்தவரை அவ்வாறாகத் தோன்றவில்லை. ஹிந்து மதத்தின் முதன்மை நகரமாக பனாரஸும்,
தலை சிறந்த நவீன ஹிந்துவாக காந்தியும் இருக்கின்ற போது அது உண்மையில் மிகவும் பரிதாபமான
நிலைதான். காந்தி இந்த நகரிலே எதிர்கொண்ட பல போராட்டங்களின் மூலமாக, இன்று இந்தியாவில்
வாழ்வதற்கான வினோதமான அதிர்வுகளுடன், இந்தியாவின் முக்கியமான மதத்தின் கோட்பாடு,
நடைமுறைகள் மீது நம்மால் கூர்மையான கவனத்தை ஈர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

100 வருடங்களுக்கு முன்பாக இந்த மாதத்தில்தான் காந்தி மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியிருந்தார். அவர்
தனக்கான பொதுவாழ்வைக் கட்டமைப்பதற்கான ஆவலுடன் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் அவருடைய வேலைகள் அனைத்தும் அந்த நாட்டில் வசித்து வந்த 150 000
இந்தியர்களைச் சுற்றி மட்டுமே இருந்து வந்தன. சமுதாயத் தலைவராக இருப்பதைத் தன்னுடைய
குறிக்கோளாகக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. தாய்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை
வழிநடத்த ஆர்வம் கொண்டவராகவே அவர் இருந்தார்.
இந்தியாவிற்கு வருகின்ற வழியில், தன்னை வழிநடத்துபவராக இருந்த கோபாலகிருஷ்ண கோகலேவைச்
சந்திப்பதற்காக காந்தி லண்டனில் இறங்கினார். இந்தியாவை விட்டு விலகி நீண்ட காலமாக மிகவும்
தொலைவிலே இருந்ததால், நாட்டைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் முதல் ஓராண்டைச்
செலவழிக்குமாறு காந்திக்கு கோகலே அறிவுரை வழங்கினார். பல்வேறு பின்னணியில் வாழ்ந்து வருகின்ற
மக்களைச் சந்திப்பதற்காக இந்தியாவிற்குள் பரவலாகப் பயணம் மேற்கொள்ளுமாறும், ஆனால் இந்திய
அரசியலைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றும் கோகலே அவரிடம் கேட்டுக் கொண்டார்.
காந்தி இந்தியாவிற்குத் திரும்பிய ஒரு மாதத்திற்குள்ளாகவே, 1915 பிப்ரவரியில் கோகலே மரணமடைந்தார்.
ஆனாலும் அவரது வார்த்தையை அவருடைய சீடர் காப்பாற்றினார். 1915 முழுவதும் தொடர்ச்சியாக, கல்கத்தா,
பம்பாய், டெல்லி, மெட்ராஸ் என்று பல்வேறு இடங்களுக்கும் போனதோடு, உள்ளடங்கியிருந்த மிகச் சிறிய
நகரங்களுக்கும் காந்தி சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் பேசுவதை விடக் கவனிப்பதையே அவர்
வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பொதுமேடைப் பேச்சுக்கள் பெரும்பாலும் அவருடைய
தென்னாப்பிரிக்க அனுபவங்கள் குறித்தவையாகவே மட்டுமே இருந்தன.

ஜனவரி 1916இல் அவரது ‘தகுதி காண் பருவம்’ முடிவிற்கு வந்தது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை
முன்னின்று துவக்கிய அன்னி பெசண்ட், அலகாபாத் அறிஞர் மதன்மோகன் மாளவியா ஆகியோர்
பல்கலைக்கழக அடித்தள நாட்டு விழாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். பழமையான நகரத்தில்
நவீன கல்வியை வழங்குகின்ற வகையில் கல்வி மையத்தை உருவாக்குவதற்கான எண்ணம் முதன்முதலாக
பெசன்டிடம் எழுந்தது. அதற்கான பணத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுப்பது, அனைவரின் கவனத்தை
ஈர்க்கக் கூடிய வகையிலான வளாகத்தை உருவாக்குவதை மேற்பார்வை செய்வது என்று மாளவியா முக்கிய
பங்காற்றினார். செல்வாக்கு மிகுந்த மகராஜாக்கள் பலரும் புரவலர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும்
வைஸ்ராய் ஹார்டிங் பிரபுவால் திறந்து வைக்கப்படுகின்ற அந்த விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.
அனைவராலும் அறியப்படாதவராக இருந்த காந்தி 1902ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணியாக பனாரஸிற்கு
வந்திருந்தார். ஹிந்துவாக இருந்தமையால், இயல்பாகவே அவர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்ல
விரும்பினார். அங்கே அவர் கண்ட காட்சிகள் அவரை மகிழ்விக்கும் வகையில் இருக்கவில்லை. ‘மொய்க்கும்
ஈக்களும், கடைக்காரர்கள், பக்தர்கள் எழுப்பிய சப்தங்களும் சகிக்க முடியாதவையாக இருந்தன. அங்கே
எவரொருவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற தியானம், சமய வழிபாட்டிற்கான சூழல் நிலவவில்லை என்பது மிகத்
தெளிவாகத் தெரிந்தது’ என்று காந்தி அப்போது நினைவு கூர்ந்தார்.
அவர் கோவிலைச் சென்றடைந்த போது, அழுகிய பூக்களின் துர்நாற்றம் அவரை வரவேற்றது. அழகியல்
உணர்வற்ற பக்தரால் அங்கிருந்த பளிங்குத் தரை உடைக்கப்பட்டு, அழுக்கு சேரும் வகையில் இருந்தது.
கடவுளைத் தேடி கோவிலின் சுற்றுப்புறங்களில் நடந்து திரிந்த அவரால், அங்கே கிடந்த அழுக்கு, குப்பைக்குள்
கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத் திறப்பு விழாவிற்காக திரும்பவும்
பனாரஸிற்கு காந்தி அப்போது வந்திருந்தார். பல்கலைக்கழகத் திறப்பு விழாவிற்காக மிகப் பெரிய திறந்தவெளி
அரங்கம் கட்டப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பதினைந்து வெவ்வேறு நிலைமேடைகளில் அமர
வைக்கப்பட்டிருந்தனர். தங்களுடைய இடத்தைக் கண்டறிந்து அமரும் வகையில் பார்வையாளர்களுக்கு ஐந்து
வண்ணங்களில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. வைஸ்ராய் உள்ளே நுழைந்த போது ‘கடவுள்
மன்னரைக் காப்பாற்றட்டும்’ என்று பேண்டுகள் முழங்கின. அவரைச் சுற்றி மகராஜாக்களும், லெப்டினண்ட்
கவர்னர்களும், பேரரசின் மாவீரர்களும் அமர்ந்திருந்தனர்.
பிப்ரவரி நான்காம் தேதி மதியம் வைஸ்ராயின் உரையுடன் விழா ஆரம்பமானது. பிற்பகலில் சமஸ்கிருத
மந்திரங்கள் ஓதப்பட அவர் அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சிக்கென்று போடப்பட்டிருந்த பளபளக்கும்
மெட்டல் சாலையில் பயணித்து, விழா முடிந்த பிறகு ரயில்வே ஸ்டேசனுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
‘மிகப் பெரிய வெற்றிகரமான விழா… பனாரஸ் தர்பார் கவரும் வகையில் இருந்தது. அங்கே இருந்த
தலைவர்கள் மற்றும் பிறரும் பளபளப்பான ஆடைகளுடன், பலவண்ண டர்பன்களை அணிந்திருந்தனர்.
ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கே ஆர்வத்துடன் குழுமியிருந்தனர்’ என்று அங்கிருந்த நினைவுக்
குறிப்பேட்டில் அந்த சிறப்பு விருந்தினர் எழுதினார்.
முதல் நாள், பிப்ரவரி நான்காம் தேதி மட்டுமே வைஸ்ராய் அங்கே இருந்தார். ஐந்தாம் தேதியிலிருந்து எட்டாம்
தேதி வரையிலும் நடனம், நாடகங்கள், கிரிக்கெட் போட்டிகள், சொற்பொழிவுகள் என்று விழாக்கள்
தொடர்ந்தன. அறிவியலாளர்கள் போஸ், ராமன், பொருளாதார அறிஞர் ஹரால்ட் மான், சமூகவியலாளர்
பேட்ரிக் கெடெஸ், இசையறிஞர் பட்காந்தே, சமஸ்கிருத அறிஞர் ஹரபிரசாத் சாஸ்திரி என்று பலரும் அங்கே

உரையாற்றினர். அங்கே பயிற்றுவிக்கப்படப் போகின்ற பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும், புரவலர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையிலேயே அந்த ஏற்பாடுகள் இருந்தன.
இந்த அறிஞர்களைத் தவிர்த்து பொது வாழ்வில் ஈடுபட்டு வந்த சிலரும் சொற்பொழிவாற்றுவதற்காக
வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆறாம் தேதி மாலையில் அன்னி பெசண்ட் ‘நற்குணங்களைக் கட்டமைக்கின்ற
பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பிலே அங்கே உரையாற்றினார். அவருக்குப் பிறகு காந்தி உரையாற்றுவதாக
இருந்தது. அவர் என்ன தலைப்பில் பேசுகிறார் என்பது நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்படவில்லை என்றாலும்,
தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்திற்கு தான் ஆற்றிய சேவைகள் குறித்தே காந்தி பேசுவார் என்று
அங்கிருந்த பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
காந்தியின் சுயசரிதையில் இந்த பனாரஸ் பயணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது
வேண்டுமென்றே விடப்பட்டதா என்பது தெரியவில்லை என்றாலும், அந்தப் பயணம் கவனத்தை ஈர்ப்பதாகவே
இருக்கிறது. இந்திய அரசியலில் அவரது வரவை அறிவிக்கின்ற தருணமாகவே காந்தியின் பனாரஸ் பேச்சு
அமைந்திருந்தது. இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, கோகலே விதித்திருந்த ஓராண்டு மௌனத்தை உடைத்து,
தனது பொதுவாழ்வில் முதன்முதலாகப் பேசுவதற்கான இடமாக பனாரஸை காந்தி தேர்ந்தெடுத்திருந்தார்.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு, பொதுமக்களுக்கான தன்னுடைய முதல் செய்தியை வெளியிடுவதற்கான
தளமாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆரம்ப விழாவை காந்தி தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்.
புதிய பல்கலைக்கழகத்தின் முக்கிய புரவலர்களை நேரடியாகத் தாக்குகின்ற விதத்தில் காந்தியின் பேச்சு ஆற்றல்
மிக்கதாக இருந்தது. மிகவும் அழகுணர்ச்சி நிறைந்த விழாவாக இருந்தது என்று அவர் கூறிய போதிலும்,
ஏராளமான நகைகளையணிந்து அங்கே வருகை தந்திருந்த கொடையாளர்களுக்கும், அங்கே வருகை தர
முடியாத லட்சக்கணக்கான ஏழை இந்தியர்களுக்குமான முரண்பாடு குறித்து தன்னுடைய வருத்தத்தை
வெளிப்படுத்த தவறவில்லை. பேரரசின் மன்னரிடம் தங்களுடைய ராஜபக்தியை காட்டுவதற்காக, தங்களுடைய
நகைப் பெட்டகங்களைத் துருவித் தேடி, காலிலிருந்து பாதம் வரைக்கும் நகைகளை அணிந்து வருவது
தேவைதானா என்ற கேள்வியை காந்தி அந்தக் கூட்டத்தில் எழுப்பினார். அங்கிருந்த மதிப்பிற்குரிய
விருந்தினர்களைப் பார்த்து, உங்களுடைய நகைகளை இந்திய மக்களுக்காகப் பயன்படுத்துவதற்காக கழற்றி
பாதுகாப்பாக வைக்காதபட்சத்தில் நமக்கு விடிவுகாலம் கிட்டாது என்று அவர் கூறினார். விவசாயிகளின்
உழைப்பின் பலனை முழுமையாக நாம் சுரண்டுவது அல்லது பிறரைச் சுரண்ட அனுமதிப்பது நம்மை நாமே
ஆளுகின்ற சுயாட்சிக்கான ஆன்மாவாக இருக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
பொதுமக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கின்ற ஆபத்துடன் புதிய பல்கலைக்கழகம்
இருப்பதாக காந்தி கவலைப்பட்டார். ‘பொறுப்புணர்வை அறிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் கல்வி
கற்கும்போது, குறைந்தபட்சம் தனக்குத் தேவையான உணவைப் பெறுவதற்குப் போதுமானதைப்
பெற்றிருப்பதாக, தனக்குத் தேவையான துணிகளைப் பெற்றிருப்பதாக விவசாயி, இந்தியக் கைவினைஞன்
உணர்ந்தால் மட்டுமே நாட்டிற்கு விடிவு கிட்டும். இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் பல்கலைக்கழகத்தில்
கற்றுக் கொள்ளப் போவதில்லை...’ என்று மாணவர்களிடம் கூறினார்,

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத் திறப்பு விழாவில் பேசுவதற்கு முந்தைய நாள் விஸ்வநாதர் ஆலயத்திற்கு
காந்தி சென்றிருந்தார். 1902ஆம் ஆண்டைப் போலவே, மிகவும் மோசமான நிலையில் ஆலயம் இருப்பதை
அவர் கண்டார். இந்திய சமுதாயத்தின் அறிகுறியாகவே, கோவிலின் நிலையை அவர் கண்டார். பனாரஸ்
ஹிந்து பல்கலைக்கழகத்தில் தன் முன்பிருந்த பார்வையாளர்களை நோக்கி ‘மேலே இருந்து நேரடியாக இந்த
பெரிய கோவிலுக்குள் அந்நியர் ஒருவரை இறக்கி விட்டால், ஹிந்துக்களாகிய நாம் எவ்வாறு இருக்கிறோம்
என்பதைப் பார்க்கின்ற அவர் நம்மைக் கண்டனம் செய்வது நியாயம்தானே? இந்தப் பெரிய கோவில்
நம்முடைய குணத்தைப் பிரதிபலிப்பதாக அல்லவா இருக்கிறது? ஒரு ஹிந்துவாக நான் உணர்வுபூர்வமாகப்
பேசுகிறேன். நமது புனித ஆலயத்தின் பாதைகள் இந்த அளவிற்கு அழுக்காக இருப்பது சரிதானா? சுற்றியுள்ள
வீடுகள் ஏனோதானோ என்று கட்டப்பட்டுள்ளன. சந்துகள் மிகக் கொடூரமாக, குறுகியவையாக இருக்கின்றன.
தூய்மைக்கான முன்மாதிரிகளாக நமது கோவில்கள் கூட இருக்கவில்லையென்றால், நமது சுயராஜ்யம் எவ்வாறு
இருக்கும்? தங்களுடைய சொந்த விருப்பத்தினாலோ அல்லது நிர்ப்பந்தத்தினாலோ ஆங்கிலேயர்கள்
இந்தியாவில் இருந்து விடைபெற்றவுடன், நமது கோவில்கள் புனிதத்தன்மை, தூய்மை, அமைதி ஆகியவற்றின்
உறைவிடமாக மாறி விடுமா?’ என்று கேட்டார்.
மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் இளவரசர்களின் ஆடம்பரம், ஹிந்து பழக்கவழக்கங்களுக்கு எதிரான
காந்தியின் கண்டிப்பான பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரான ஆல்வார் மகாராஜா,
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேடையை விட்டு வெளியேறினார். அவர் இறங்கிச் செல்கின்ற வழியில், பனாரஸ்
ஆணையரைக் கடந்து சென்ற போது, ‘நான் வெறுப்படைந்திருக்கிறேன், அந்த மனிதன் பைத்தியமாகத்தான்
இருக்க வேண்டும்’ என்று கூறிச் சென்றார். ‘நல்லது மகராஜா சாஹிப், இது எங்களுக்கான இடமில்லை’ என்று
அந்த ஆணையர் பதிலளித்தார்.
அதுகுறித்து கவலைப்படாத காந்தி தன்னுடைய உரையைத் தொடர்ந்தார். இப்போது வைஸ்ராய் பனராஸுக்கு
வந்திருக்கும் போது, ​​தெருக்களிலும், வீடுகளின் கூரைகளிலும் ஏன் இந்த அளவிற்கு துப்பறிவாளர்கள்
இருந்தனர். அது பயத்தின் அடையாளமா? என்று கேட்டார். பின்னர், இந்தியாவை விட்டு வெளியேறும்
வகையில் உயரதிகாரிகள் அச்சுறுத்தலுக்குள்ளாவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் மீது குண்டுகளை வீச
முயன்ற வங்காளத்தின் அனார்கிஸ்டுகளைப் பற்றி அவர் பேசினார். சிலர் அந்தப் பயங்கரவாதிகளைப் போற்றி
வருவதையும் அவர் அறிந்திருந்தார். அவர்களாலேயே வங்கப் பிரிவினையை அரசாங்கம் ரத்து செய்ததாகக்
கூறிய காந்தி, அவர்களிடம் இருந்த வைராக்கியத்தை ‘தவறாக வழிநடத்தப்பட்டது’ என்றே அழைத்தார்,
அவர்கள் ஏன் ‘திறந்த வெளியில் வருவதற்குப் பயப்படுகிறார்கள்’ என்று கேள்வியெழுப்பினார்.
அப்போது, காந்தியின் பின்னால் அமர்ந்திருந்த அன்னி பெசன்ட் ‘நிறுத்துங்கள்! தயவு செய்து நிறுத்துங்கள்!’
என்றார். இளவரசர்கள் மேடையை விட்டு வெளியேறத் தொடங்கினர். மறுபுறத்தில் பார்வையாளர்கள்
பக்கமிருந்த மாணவர்கள் ‘தொடருங்கள்! தொடருங்கள்!’ என்று கூச்சலிட்டனர். தான் என்ன செய்ய வேண்டும்
என்று காந்தி கூட்டத் தலைவரிடம் (தர்பங்கா மகாராஜா) கேட்டார். ‘நீங்கள் உங்கள் பொருளை விளக்கலாம்’
என்று தலைவர் பதிலளித்தார். ‘இந்தியாவில் அனார்கிசத்திற்கு இடமில்லை’ என்று காந்தி கூறினார்.
‘இருபுறமும் இருக்கின்ற சந்தேகத்தை இந்தியாவிலிருந்து அகற்றி பரஸ்பர அன்பு, நம்பிக்கையின்
அடிப்படையிலான’ சாம்ராஜ்யத்தை உருவாக்கவே அவர் விரும்பினார்.

எச்சரிக்கைக்குப் பிறகு, காந்தி தன்னுடைய வாதத்தைத் தொடர்ந்தார். அரசு உயரதிகாரிகளைச் சூழ்ந்திருக்கின்ற
‘கொத்தடிமைத்தனம், பொய்மையை’ அவர் கண்டனம் செய்தார். அவர்களுடைய நடத்தை தாங்கிக் கொள்ள
முடியாததாக, கொடுங்கோன்மையுடன் இருப்பதாக அவர் வகைப்படுத்தினார். இந்தியர்களுக்கு ஒருபோதும்
சுயராஜ்யம் தானாக வழங்கப்பட மாட்டாது என்று பின்னர் கூறிய அவர், தென்னாப்பிரிக்காவில் போயர்கள்
செய்ததைப் போல, தாங்களாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசிற்கு எதிரான கிளர்ச்சி
செய்வதற்கான பரிந்துரை, மேடையில் இருந்தவர்களிடையே மேலும் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. பேசுவதை
நிறுத்துமாறு காந்தியிடம் மீண்டும் ஒரு முறை திருமதி பெசன்ட் கூறினார். மீதமிருந்த மற்றவர்களைப் போன்ற
பரம விசுவாசியான தலைவர் கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்.
இளவரசர்கள் மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, ​​மதன் மோகன் மாளவியா நடந்து சென்று
அங்கே கூடியிருந்தவர்களிடம் உரையாற்றினார். காந்தியின் பேச்சு ‘உயர்ந்த இடங்களில்’ இருப்பவர்களைச்
சிறுமைப்படுத்துவதாக இருந்தது என்று அவர் வருந்தினார். அனார்கிஸ்டுகள் பற்றிய காந்தியின் பேச்சு
தலைவர்களிடம் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருந்தது; மேடையில் இருந்தவர்கள் சிறிது நேரம்
காத்திருந்திருப்பார்கள் என்றால், காந்தி உண்மையில் அனார்கிஸ்டுகளின் வழிமுறைகள் குறித்து வருந்தியதைப்
பார்த்திருக்க முடியும். ‘திரைக்குப் பின்னால் மறைந்து, இளைஞர்களைத் தவறான திசையில் மாற்றுவோரின்
தீய தாக்கங்களிலிருந்து எல்லா நேரமும் நமது மாணவர்கள் தங்களைத் தாங்களே விலக்கி வைத்துக் கொள்ள
வேண்டும்’ என்று காந்தி சொல்ல விரும்பியதாக மாளவியா கூறினார்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய மறுநாளே, வன்முறை, அராஜகங்களுக்கு எதிராக மிகவும்
வலுவான கருத்துக்களைத் தான் கொண்டிருப்பதாகத் தெளிவுபடுத்தி தர்பங்கா மகராஜாவுக்கு கடிதம் ஒன்றை
காந்தி எழுதினார். நாட்டிற்கான மிக உயர்ந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பதே தன்னுடைய நோக்கம், ஆனாலும்
அதை ஒருபோதும் வன்முறையால் பெறுவது அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனாலும்
மகராஜாவின் மனம் மாறவில்லை. வைஸ்ராயின் வருகை குறித்து காந்தி தன்னுடைய கருத்தை மரியாதைக்குரிய
விதத்தில் தெரிவிக்கவில்லை என்று அவர் கோபமடைந்தார். 7ஆம் தேதி, மற்றொரு பொதுநிகழ்விற்குத்
தலைமை தாங்கிய தர்பங்கா மகராஜா, ‘திரு.காந்தியின் (முந்தைய நாள்) கருத்துக்களை நாங்கள் வருத்தத்துடன்,
வேதனையுடன் கேட்டோம்’ என்றும், தாங்கள் அனைவரும் ‘திரு.காந்தியிடம் இருந்த அணுகுமுறையை
ஏற்கவில்லை’ என்றும் கூறினார்.
இதற்கிடையில் காந்தி பனாரஸிலிருந்து பம்பாய்க்கு புறப்பட்டுச் சென்றார். நடந்த சம்பவம் குறித்த செய்தி தந்தி
மூலம் அவரைத் தொடர்ந்தது. பிப்ரவரி 9 அன்று, அசோசியேட்டட் பிரஸ்ஸின் நிருபர் ஒருவர், காந்தியின் பேச்சு
ஏன் இந்த அளவிற்கு சர்ச்சைக்குரியதாகி விட்டது என்று அவரிடம் கேள்வியெழுப்பினார். அனார்கிஸ்டுகளிடம்
‘தேசபக்திக்கான நோக்கங்கள்’ இருப்பதாக தான் நினைத்தாலும், அவர்களுடைய வழிமுறைகள் நீண்ட
நோக்கில் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தன என்பதை காந்தி தெளிவுபடுத்தினார். வன்முறைக்கு
அவர் ஒருபோதும் ஒப்புதல் அளிக்கவில்லை; ‘உண்மையில், திருமதி பெசன்டின் அவசரமான, தவறான
இடையீடு இருந்திருக்கவில்லை என்றால், அன்றைக்கு எதுவும் நடந்திருக்காது. எனது பேச்சு நிறைவு

செய்யப்பட்டிருக்குமேயானால், அதன் பொருள் குறித்து எந்த சந்தேகத்திற்கும் அது இடமளித்திருக்காது’
என்பதே அவருடைய உறுதியான நம்பிக்கையாக இருந்தது.
மெட்ராஸில் திருமதி பெசன்ட் அந்த நேர்காணலை வாசித்த போது, ​​ தன்னை தற்காத்துக் கொள்ள அவர்
முனைந்தார். தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த காவல்துறை அதிகாரி, ‘அவர் பேசுவது எல்லாம் குறித்துக்
கொள்ளப்பட்டு, ஆணையருக்கு அனுப்பப்படும்’ என்று சொன்னதைக் கேட்டதாக அவர் கூறினார். காந்தியின்
கருத்துக்கள் அவர் நினைத்ததற்கு மாறாக கட்டமைக்கப்படும் திறன் கொண்டவை என்பதால், ‘அந்தக்
கூட்டத்தில் அரசியலுக்கு இடமில்லை’ என்று தலைவரிடம் கூறியதாகவும், இளவரசர்களை தான் வெளியேறச்
சொல்லவில்லை என்றும் கூறினார். ‘கூட்டத்தை திரு காந்தி ஏற்பாடு செய்திருந்தால், அது வேறு யாருடைய
பிரச்சனையுமாக இல்லாமல், காந்தியின் பிரச்சனையாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் பல்கலைக்கழகக்
குழுவின் உறுப்பினராக, தான் அழைத்திருந்தவர்களுக்கு காந்தியின் கருத்துக்கள் தேவையற்ற ஆத்திரமூட்டலை
ஏற்படுத்துவதாக இருந்ததால், தானே அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்’ என்று பெசன்ட்
கூறினார்.
ஒரு வகையில் திருமதி பெசன்ட் சரியாகவே இருந்தார்; காந்தி பேசியதை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக்
கவனித்து வந்தது. அந்த ஆட்சேபணைக்குரிய பேச்சு குறித்து லக்னோவில் உள்ள தனது அதிகாரிகளுக்கு
பனாரஸில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் தந்தி அனுப்பினார். தி லீடர் என்ற பத்திரிகை தயாரித்த
அந்த உரையின் மொழியாக்கம் பெறப்பட்டது; அந்த செய்தித்தாள் காந்தியின் உரையை வெளியிடுவது
தடைசெய்யப்பட்டது. அந்த சம்பவம் குறித்து தயாரிக்கப்பட்டதொரு நீண்ட அறிக்கையில், ‘காந்தியின் உரை
மாணவர்களிடம் பெற்ற வரவேற்பு, அந்த உரையின் சாரம் அவர்களிடம் ஊடுருவிச் சென்றிருப்பதையே
குறிக்கிறது. ஆங்கிலத்தை விட்டொழிப்பது, மூட்டை முடிச்சுகளுடன் சாமான்களை எடுத்துக் கொண்டு
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது போன்ற கருத்துக்கள் மாணவர்களுடைய உற்சாகம்
வெளிப்படத் தூண்டிய கருத்துக்களாக இருந்தன’ என்று பனாரஸ் ஆணையர் மிகவும் கடுமையாகக்
குறிப்பிட்டிருந்தார்.
காவல்துறையும், ஐக்கிய மாகாண அரசாங்கத்திற்கான சட்ட நினைவுபடுத்துபவரும் காந்தியின் கருத்துக்கள்
தேசத்துரோகம் கொண்டவையாக, விசுவாசமற்றவையாக இருப்பதாக நினைத்தனர். இந்திய தண்டனைச்
சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்து வழக்குத் தொடர வேண்டும் என்று பரிந்துரைத்தனர். தலைமைச்
செயலாளர் அதை ஏற்கவில்லை; ‘காந்தி, ஏற்கனவே பிரபலமான தலைவர், வழக்கு விசாரணைகள் அவரை
இன்னும் மோசமாக்கி, மாணவர்களிடம் அவரது செல்வாக்கை அதிகரிக்கச் செய்து விடும். தியாகி என்று
முத்திரை குத்துவதை விட விஷயத்தை ஆறப் போடுவது சிறந்தது’ என்று அவர் குறிப்பிட்டார்
இதற்கிடையில், லீடர் பத்திரிகையின் ஆசிரியர் காந்தியின் உரையை முழுமையாக அச்சிடுவதற்கான
அனுமதியைக் கோரினார். அதன் உள்ளடக்கத்தைப் பற்றி ஏராளமான ஊகங்கள் இருந்தன. மன்னருக்கு மிகவும்
விசுவாசமான செய்தித்தாளான மெட்ராஸ் மெயில் ‘கேவலமான விஷயங்களை திரு.காந்தி பேசியதாகக் கூறிய
எந்தவொரு மனிதருக்கும் பொது விவகாரங்களில் மற்றொரு வார்த்தையைச் சொல்லும் உரிமை இல்லை. அவர்
அவற்றைச் சொன்னாரா?’ என்று எழுதியது. தவறாகப் புரிந்துகொள்வதைத் தவிர்ப்பதற்காக, ‘அனைத்து

தரப்பினருக்கும் நேர்மையாக இருக்கின்ற வகையில், அந்தப் பேச்சு வெளியிடப்படுவது விரும்பத்தக்கதாகவே
இருக்கும் என்றே தோன்றுகிறது’ என்று லீடர் பத்திரிகையின் ஆசிரியர் கூறினார். அவருக்கு அனுமதி
கிடைக்கவில்லை; வார்த்தைக்கு வார்த்தை தவறாது அந்த செய்தித்தாள் தயாரித்த ஆவணம் அரசு
செயலகத்திலேயே தக்க வைத்துக் கொள்ளப்பட்டது (இறுதியாக அது காப்பகத்தைக் கண்டடைந்தது).
ஐக்கிய மாகாண அரசாங்கத்தின் வெவ்வேறு துறைகளுக்கு இடையே குறிப்புகளும், கருத்துக்களும் அங்கேயும்
இங்கேயுமாகச் சென்று வந்து கொண்டிருந்தன. மார்ச் 17 அன்று, காந்தியின் உரை முடிந்து ஐந்து
வாரங்களுக்குப் பிறகு லெப்டினன்ட்-கவர்னர், ‘மிருகத்தனமான ஆற்றலை விட உயர்ந்த குணங்களை
வளர்ப்பதற்கான முக்கியத்துவம்.... தேசியவாத பிரச்சாரத்தில் வன்முறையைப் பயன்படுத்துவதை எதிர்த்துப்
பேசுகின்ற நோக்கத்துடனே காந்தி தன்னுடைய உரையைத் தொடங்கினார் என்பதே எனது சொந்தக் கருத்து.
ஆனால் அவருடைய உரை எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய சொல்லாட்சி
மற்றும் கவனமில்லாது அவரால் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகளால் மாணவர்களிடமிருந்து கிடைத்த
கைதட்டல்களால் தெளிவாக காந்தி தன்னிலை மறந்தார். கூடுதல் உற்சாகத்தில், தன்னுடைய கட்டுப்பாட்டை
இழந்த அவர் தன்னுடைய உண்மையான உணர்வுகளை கைவிட்டுவிட்டார். அவருடைய உரையின் ஒரு பகுதி
போற்றத்தக்கது; மற்றொரு பகுதி முற்றிலும் மோசமாக இருந்தது; மீதமுள்ளவை, வேண்டுமென்றே அல்லது
உள்நோக்கத்துடன் தேசத்துரோகத்தைத் தூண்டவில்லை என்றாலும், அது ஒட்டுமொத்தத்தில்
தேசத்துரோகமாகவும், கடுமையான ஆட்சேபணைக்குரியதாகவும் இருந்தன’ என்று குற்றவியல் நீதிபதிக்கான
தொனியில் சுருக்கமாக தந்து கருத்தை எடுத்து வைத்தார்.
சொந்த சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் காந்தியின் கருத்துக்களிலிருந்து தங்களைத் தூர விலக்கிக்
கொண்டனர் என்பதாலும், அவருக்கு எதிரான நடவடிக்கை பல்கலைக்கழகத் தொடக்க விழாவின் வெற்றியைக்
கெடுத்து விடும் என்பதலும் லெப்டினன்ட்-கவர்னர் வழக்குத் தொடர்வதற்கு எதிராகக் கருத்து
தெரிவித்திருந்தார். அரசாங்கம் அந்த விஷயத்தைக் கைவிட அனுமதிப்பது, காந்தியின் பேச்சால் ஏற்பட்ட
சம்பவத்தை ‘தெளிவின்மை மற்றும் மறதிக்குள் நழுவுவதற்கு’ அனுமதிப்பது ஆகியவையே ‘புத்திசாலித்தனமான
போக்கு’ என்று அவர் கருதினார்.

அனார்கிசம் பற்றிய கருத்துக்கள் காரணமாக காந்தியின் பனாரஸ் பேச்சு அதிகாரப்பூர்வ, விசுவாச
வட்டாரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியது. அனார்கிஸ்டுகளின் வழிமுறைகளிலிருந்து தன்னைப் பிரித்து
வைத்துக் கொள்ள அவர் விரும்பினாலும், அவர்களுடைய நோக்கங்கள் தேசபக்தி கொண்டவை என்ற அவரது
கருத்து அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தது. மகராஜாக்களை விட வேறு யாரும் பேரரசிற்கு
விசுவாசமானவர்களாக இருக்கவில்லை. மேலே இருந்து இந்தியர்களுக்கு பிரிட்டன் வழங்குகின்ற சலுகைகளை
நம்பியவராக இருந்த மாளவியாவும் ஒரு மிதவாதியாகவே இருந்தார்.
இளவரசர்களும், மிதவாதிகளும் வன்முறைப் போராட்டங்களைக் கண்டு திகில் அடைந்தவர்களாகவே
இருந்தனர். வைஸ்ராய் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் என்பது, அது ஒரு நிறுவன விவகாரம்
என்பதற்கான மேலதிகச் சான்றாகவே இருந்தது. காந்தி தெரிவித்த பயங்கரவாதம், படுகொலைகள் பற்றிய

கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தின. ஏற்கனவே 1912 டிசம்பரில் ஹார்டிங் பிரபு தன் மீது நடத்தப்பட்ட
கொலை முயற்சியில் இருந்து தப்பியிருந்தார் என்பதால், காந்தியின் பேச்சு பெரிதுபடுத்தப்படுத்தப்படக் கூடாத
விஷயமாக இருக்கவில்லை. டெல்லியில் நடந்த மிகப் பெரிய ஊர்வலத்தில் யானை மீது அவர் இருந்த போது,
குண்டு வீசப்பட்டது. அவர் மீதான இரண்டாவது தாக்குதலைத் தடுக்கின்ற வகையிலேயே, பனாரஸ்
தெருக்களில் வைஸ்ராய் பயணித்துச் சென்ற போது, அவருக்குப் பாதுகாப்பாக துப்பறிவாளர்கள் இருந்தனர்.
அனார்கிசம் பற்றிய கருத்துக்கள் ‘தேசத்துரோகமா’ என்பதிலேயே காந்தியின் உரையின் அதிகாரப்பூர்வ
வர்ணனை கவனம் செலுத்தியது. ஆனாலும் அந்த 1916 பேச்சு உண்மையில், வன்முறை, அகிம்சை தொடர்பான
தெரிவித்திருந்த கருத்துக்களாலேயே குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. இந்தியர்கள் தங்கள் விவகாரங்களை
எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பனாரஸில் காந்தி மூன்று அடிப்படைக் கூறுகளைக்
குறிப்பிட்டார்.
முதலாவதாக, இந்தியாவில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் இருக்கின்ற கூர்மையான ஏற்றத்தாழ்வுகளை
அவர் சுட்டிக்காட்டினார். பனாரஸில் மேடையிலிருந்த மகராஜாக்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை
பெரும்பான்மையான இந்தியர்களின் வறுமையுடன் அவர் ஒப்பிட்டார். ஏழைகள் மீது அதிக அக்கறையுடனும்,
பொறுப்புள்ள அணுகுமுறையுடனும் இருக்குமாறு செல்வந்தர்களை அவர் கேட்டுக் கொண்டார். தங்களுடைய
நகைகளைத் தூக்கி எறியுமாறு இளவரசர்களிடம் சொன்னார். விவசாயிகள், கைவினைஞர்கள்,
தொழிலாளர்களின் வாழ்வு குறித்து அறிந்து கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
இரண்டாவதாக, அரசு அதிகாரிகள் தங்களால் ஆளப்படுகின்றவர்களுடன் மிகவும் நெருக்கமாக அடையாளம்
காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தங்களை மக்களின் ஊழியர்களாக அடையாளப்படுத்திக்
கொள்வதைக் காட்டிலும், ஆளும் சாதியினராகத் தங்களைக் கருதிக் கொள்கின்ற இந்திய சிவில் சர்வீஸ்
அதிகாரிகளின் ஆணவத்தை அவர் குறை கூறினார்.
இறுதியாக, தற்போதைய ஹிந்து மதம் குறித்து இன்னும் அதிகமான விமர்சன அணுகுமுறை இருக்க வேண்டும்
என்று காந்தி கேட்டுக் கொண்டார். ஹிந்துக்களின் புனித நகரில் உள்ள புனிதமான கோயில் என்று காசி
விஸ்வநாதர் ஆலயம் கூறப்படுகிறது. அது ஏன் மிகவும் மோசமாக இருக்கின்றது? இந்தியர்களால் தங்களுடைய
வழிபாட்டுத் தலங்களைக் கூட சரியாகப் பராமரிக்க முடியாது என்றால், அவர்களால் தங்களுடைய
சுயராஜ்யத்திற்கான கோரிக்கையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.
காந்தியின் பேச்சு மிகவும் தைரியமான செயலாகவே இருந்தது. 1916 பிப்ரவரியில் தன்னுடைய தாய்நாட்டில்
எந்தவிதமான செல்வாக்கும், ஆற்றலும் இல்லாதவராகவே அவர் இருந்தார். ஆயினும்கூட செல்வந்த
இளவரசர்கள், முக்கியமான அதிகாரிகள், மதப் பழமைவாதத்தின் பாதுகாவலர்கள் மீது நேரடியான,
ஆணித்தரமான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். வெளிநாட்டிலே நீண்ட காலமாக தங்கியிருந்த
வழக்கறிஞர் ஒருவர், இந்தியாவின் புனித நகரில், வைஸ்ராயால் திறந்து வைக்கப்பட்ட. அவருடன்
முன்னணியில் இருந்து ஒத்துழைத்து வருபவர்களால் ஆதரிக்கப்பட்ட விழாவிலே நாட்டை மாற்றுவதற்கான
தன்னிடமிருந்த நம்பிக்கை மீதான கருத்துக்களை முன்வைத்தார்.
பனாரஸுக்கு காந்தியின் மிக நீண்ட வருகை 1934 ஜூலை-ஆகஸ்டில் நிகழ்ந்தது. அந்த நகரத்திலே அவர் ஒரு
வாரம் முழுவதும் கழித்தார். அதற்கு முந்தைய குளிர் மற்றும் வசந்த காலத்தில், தீண்டாமை என்ற
பாவத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுமாறு சக ஹிந்துக்களை வற்புறுத்துகின்ற வகையில், அவர்
தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா வழியாக மேற்கொண்டிருந்த ஹரிஜன் சுற்றுப்பயணத்திலே இருந்தார்.
சமீப காலங்களில், காந்தியைத் தவறாக மேற்கோள் காட்டி, சாதி அமைப்பிற்கு அடிபணிந்தவர் என்று அவர் மீது
இடதுசாரி சித்தாந்தவாதிகள் குற்றம் சுமத்தினர். ஆயினும் சாதி மீதான விமர்சனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
காந்தி மாறிக் கொண்டே இருந்தார் என்று டெனிஸ் டால்டன், அனில் நௌரியா போன்ற அறிஞர்கள்
நிரூபித்துள்ளனர். ஆரம்பத்தில் சாதியின் மற்ற விதிகளை அப்படியே விட்டுவிட்ட அவர், தீண்டாமை மீது
தாக்குதலை நடத்தினார். பின்னர் கோவில் நுழைவு இயக்கத்தின் மூலமாக, ஒன்று கூடுதல், ஒன்றாக
உணவருந்துதல் ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார். இறுதியாக, தலித் - சவர்ணத்தவருக்கு இடையிலான
திருமணமே தனது ஆசிரமத்தில் நடக்கின்ற ஒரே திருமணமாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார். அதன்
மூலம் சாதி அமைப்பின் அடிப்படையை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
தீவிர எண்ணம் கொண்டவர்களுக்கு, தீண்டாமையை ஒழிப்பதற்கான காந்தியின் அன்றைய பிரச்சாரம் இன்று
மிகமிகச் சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால் அந்த நேரத்தில் அது மிகவும் தைரியமான செயலாகக்
கருதப்பட்டது. அவருடைய பிரச்சாரம் ஹிந்து பழமைவாதத்தின் மையத்தைத் தாக்கியது. சிறிதளவே
சமஸ்கிருதத்தை அறிந்த வெற்று பனியா ஒருவர் தீண்டாமையைக் கட்டாயப்படுத்துகின்ற வேதத்தின்
உத்தரவுகளுக்கு எதிராக இருக்கின்றார் என்று சங்கராச்சாரியர்கள் கோபமடைந்தனர். காந்தியை ஹிந்து
மதத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று காலனித்துவ அதிகாரிகளுக்கு அளித்த மனுவில் அவர்கள்
கோரிக்கை விடுத்தனர். 1933-34ஆம் ஆண்டு நடைபெற்ற காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு சுற்றுப்பயணத்தின்
போது, ஹிந்து மகாசபா ஆர்வலர்கள் அவருக்கு கறுப்புக் கொடிகளைக் காட்டினர். அவர் மீது மலத்தை அள்ளி
வீசினர். 1934 ஜூன் மாதத்தில் புனேவில் அவரைக் கொலை செய்யவும் முயன்றனர்.
அதனால் 1934 ஜூலை கடைசி வாரத்தில் பனாரஸுக்கு வந்தபோது தீண்டாமை குறித்த விவாதம் காந்தியின்
மனதில் இருந்தது. ஹரிஜன் அல்லது இப்போது நாம் தலித் என்று அழைக்கின்ற பிரச்சனை குறித்து
அடுத்தடுத்த நாட்களில் அவர் இரண்டு உரைகளை ஆற்றினார். ஜூலை 29 அன்று, ஹரிஜன் சேவக் சங்கத்தின்
மத்திய வாரியத்திடம் பேசிய அவர், தன்னுடைய தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரத்தில் இணைந்த சமூக
சேவையாளர்களின் தரம், அளவு குறித்து, ‘முழு நேரத்தையும் அவர்கள் வேலைக்குத் தரவில்லை’, ‘அதை மிகவும்
நிதானமாகச் செய்கிறார்கள்’ என்று புகார் அளித்தார். ‘ஹரிஜன்களுக்காக தங்களுடைய உடல், மனம்,
ஆன்மாவை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை தங்களுடைய ஒரே லட்சியமாகக் கொண்ட பத்தாயிரம் பேர்,
தைரியமாகக் கூறுவதென்றால் ஆயிரம் பேர் எங்களிடம் இருந்திருந்தால்கூட வியக்கத்தக்க முடிவுகளை நாம்
கொண்டிருந்திருப்போம்’. அதுவே அவர் விரும்பியதும், நாட்டிற்குத் தேவையானதும்கூட.
அடுத்த நாள், ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார், அதில் பழமைவாதிகள் குறிப்பிடத்தக்க அளவில்
இருந்த போதிலும், பெரும்பான்மையாக இருக்கவில்லை. காந்திக்கு முன்பாகப் பேசிய உள்ளூரில்
மரியாதைக்குரிய துறவியாக இருந்த பண்டிட் தேவநாயகாச்சார்யா, தீண்டாமை என்பது சாஸ்திரங்களால்

அனுமதிக்கப்பட்டுள்ளது, அதனால் அது சனாதன தர்மத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை
வலியுறுத்தினார். ஆனாலும் தீண்டாமை என்ற நடைமுறை ‘ஹிந்து மதத்தின் மீதான கறை’ என்று காந்தி
விவரித்தார். பனாரஸிலும், இந்தியாவின் பிற இடங்களிலும் ‘தொட்டியிலிருக்கின்ற தண்ணீரை நாயால் குடிக்க
முடியும், ஆனால் தாகத்துடன் இருக்கின்ற ஹரிஜனச் சிறுவன் அவ்வாறு செய்து விட முடியாது. அவ்வாறு
அவன் செய்வான் என்றால், பிறரின் தாக்குதலிலிருந்து அவனால் தப்ப முடியாது. இன்று நடைமுறையில்
இருக்கின்ற தீண்டாமை நாயை விட மோசமாகவே மனிதனைக் கருதுகிறது’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அந்தப் பயணத்தின் போது தீண்டாமை என்ற பிரச்சனையை காந்தி வேறு பல சந்தர்ப்பங்களில் கையாண்டார்.
ஆகஸ்ட் 1 அன்று தலித் பார்வையாளர்களிடம் பேசிய அவர், ‘கால்நடைகள் வாழ்வதற்குக்கூட தகுதியற்ற
இடத்தில்’ குப்பை நிரம்பிய, நோயால் பாதிக்கப்பட்ட நகரப் பகுதிகளில் மக்களை வாழ வைத்ததற்காக பனாரஸ்
நகராட்சியை அவர் கண்டித்தார். அடுத்த நாள் பெண்களுக்கான கூட்டத்தில் பேசிய அவர், ஹிந்து சமுதாயத்தில்
மிகவும் பரவலாக ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பது, ஒன்றாக உணவருந்துதல் ஆகியவற்றின் மீதான
கட்டுப்பாடுகளை மறுத்தார். ‘பிறப்பு அல்லது குறிப்பிட்ட சடங்குகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவரின்
மேன்மையை அல்லது தாழ்வைத் தீர்மானிக்க முடியாது. குணம் மட்டுமே அதைத் தீர்மானிக்கின்ற
காரணியாகும்’ என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் ‘மனிதர்களை மேன்மையானவர்களாக
அல்லது தாழ்வானவர்களாக கடவுள் படைக்கவில்லை, ஒரு மனிதனை அவனுடைய பிறப்பின் காரணமாக
தாழ்ந்தவர் அல்லது தீண்டத்தகாதவர் என்று முத்திரை குத்துகின்ற எந்தவொரு சமயநூலும் நம்மிடமிருந்து
விசுவாசத்தைப் பெற முடியாது...." என்று அவர் தொடர்ந்தார்.
அவருடைய இந்த வாக்கியங்களை நாம் மீண்டும் கருத்தில் கொள்ளலாம். ‘பிறப்பால் ஒருவரின் மேன்மையை
அல்லது தாழ்வைத் தீர்மானிக்க முடியாது. குணம் மட்டுமே அதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்’ என்று
1934இல், 80 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வார்தைகளின் மூலம், பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டை
பாதுகாத்தார் என்று தன் மீது வீசப்பட்ட குற்றச்சாட்டை காந்தி ஊதித் தள்ளியிருந்தார்.

பனாரஸுக்கு காந்தியின் முதலாவது வருகை, நீண்ட நாட்களுக்கான வருகை குறித்து மறக்க முடியாததாக
உள்ளவற்றையே நான் இதுவரை விளக்கினேன். அந்த நகரத்திற்கு அவர் வருகை தந்த மற்ற
சந்தர்ப்பங்களிலிருந்து சில துணுக்குகளை இப்போது தருகிறேன். 1920 பிப்ரவரியில் காந்தியின் இரண்டாவது
மிக நீண்ட வருகையின் போது, மதன் மோகன் மாளவியாவின் வீட்டில் ஆறு நாட்கள் அவர் தங்கியிருந்தார்.
அதற்கு முந்தைய மூன்று மாதங்களை பஞ்சாபில் கழித்திருந்த அவர், போர் சட்ட நிர்வாகத்தின் கொடூரங்கள்,
ஜாலியன்வாலா பாக் படுகொலையின் தாக்கங்கள் குறித்து சாட்சியங்களைச் சேகரித்திருந்தார். பஞ்சாப்
பிரச்சனைகள் குறித்து அறிக்கை தயாரிக்க காங்கிரஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின்
முதல் வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு காந்தியிடம் வழங்கப்பட்டிருந்தது. அறிக்கையின் முன்வரைவைத்
தயாரிப்பதற்கு அவருக்கு தேவைப்பட்ட அமைதி, ஓய்வை பண்டிட் மாளவியாவின் வீடு அவருக்கு வழங்கியது.
1920 பிப்ரவரியில் நிகழ்ந்த அந்த வருகையின் போது, ​​ காந்தி காலையிலும் மாலையிலும் நீண்ட தூரம்
நடைப்பயிற்சி மேற்கொண்டார். பகலில் அந்த அறிக்கை குறித்த வேலைகளைச் செய்தார். தனது

நடைப்பயிற்சியின் போது பார்த்தவற்றை அவர் இவ்வாறு விவரித்திருந்தார்: ‘விடியலும் சூரிய உதயமும் எல்லா
இடங்களிலும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. கரைகளில் இருந்து பார்க்கும் போது அற்புதமாக இருந்தது.
விடியலின் ஒளியால் மேகங்கள் பிரகாசிக்கும் போது, ​​கங்கை நீரின் மேற்பரப்பு தங்கம் போன்று பளபளத்தது.
சூரியன் அடிவானத்திலிருந்து மேலே வந்த போது, ​​ஆற்று நீரில் தங்கத்தாலான பெரிய தூண் நின்று
கொண்டிருந்தது போல் தோன்றியது... இந்த அற்புதமான காட்சியைக் கண்ட பிறகு, சூரிய வழிபாடு,
நதிகளுக்கான வணக்கம், காயத்ரி பாடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கொஞ்சம் நன்றாகப் புரிந்து
கொண்டதாக நான் உணர்ந்தேன்’.
‘அந்த இடத்தில் நடந்து சென்றபோது, நமது நாட்டிற்கும் நமது மரபுகளுக்குமான பெருமை என்னுள்
நிறைந்திருந்தது, அதே நேரத்தில், தற்போதிருக்கும் நிலைமைகளைப் பற்றி எண்ணிய போது, ​​நான் மிகவும்
வருத்தப்பட்டேன். மக்கள் அந்த ஆற்றின் கரையில் மலம் கழிப்பதை நான் கவனித்தேன்... புனிதமான அந்த
இடத்தில் கண்களை மூடிக்கொண்டு வெறுங்காலுடன் நடப்பது சாத்தியமானதாக இருக்க வேண்டும்
என்றாலும், மிகுந்த எச்சரிக்கையுடனே இங்கு ஒருவர் நடக்க வேண்டியுள்ளது. அந்த இடத்தில் இருக்கின்ற
கங்கை நீரைப் பருகுவதற்கு ஒருவர் வெறுப்படையவே செய்கிறார். அந்த இடத்தின் அசுத்தத்தை நினைத்துப்
பார்த்துக் கொண்டிருக்கையில், காசி விஸ்வநாதர் கோவில் என்னுடைய நினைவிற்கு வந்தது. கோவிலுக்குச்
செல்லும் குறுகிய பாதை, துர்நாற்றம், நான் அங்கே பார்த்த அழுகிய பூக்களின் குவியல், பிராமண பூசாரிகளின்
கடுமை, தூய்மை இன்மை என்று அங்கிருந்த அனைத்தும் நினைவிற்கு வந்த போது, ஹிந்துக்களின்
சீரழிவிற்கான காரணம் நினைவிற்கு வர நான் பெருமூச்சு விட்டேன்’ என்று பின்னர் பதிவேட்டில் காந்தி
தொடர்ந்து எழுதியிருந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்திற்கான தன்னார்வலர்களைத் தேடி 1920ஆம் ஆண்டின் இறுதியில் காந்தி
பனாரஸிற்குத் திரும்பினார். 26 அன்று அவர் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசினார்.
கல்லூரிகளைப் புறக்கணிக்குமாறு காந்தி மாணவர்களுக்கு விடுத்திருந்த அழைப்பிலிருந்து பனாரஸ் ஹிந்து
பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், அது உருவாகக் காரணமாக இருந்தவருமான மாளவியா பகிரங்கமாக
விலகிக் கொண்டிருந்தார். ‘பல்கலைக்கழகம் பண்டிட்ஜியின் (மாளவியாவின்) உயிர்’ என்று கூறப்பட்டாலும்,
‘இந்தியாதான் அவருடைய உயிர்’ என்று சொல்வதே உண்மையாகும் என்று காந்தி மாணவர்களிடம் கூறினார்.
பின்னர் ‘உங்களுடைய ஆன்மா தீவிரமாக இல்லையென்றால், நீங்கள் என்னைக் காட்டிலும் பண்டிட்ஜியின்
பேச்சைக் கவனித்துக் கேளுங்கள்’ என்றார். (காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவராக
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரான மாளவியாவின் மகன் கோவிந்த், அந்த இயக்கத்தின் போது
சிறைக்குச் சென்றவர் இருந்தார்).
அடுத்த நாள், டவுன்ஹாலுக்கு வெளியே பெரிய கூட்டத்தில் காந்தி பேசினார். அந்த கூட்டத்திற்கு தத்துவஞானி
பகவான்தாஸ் தலைமை தாங்கினார். மோதிலால், ஜவஹர்லால் நேரு இருவரும் அதில் கலந்து கொண்டனர்.
ஹிந்து-முஸ்லீம் வன்முறை நடந்து வந்த காலத்தில், அங்கே கூடியிருந்த கலவையான பார்வையாளர்களிடம்
அந்தப் பகுதியில் மத நல்லிணக்கத்திற்கான முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசினார். ‘வாளை உருவ
வேண்டாம்’ என்று அங்கிருந்த பார்வையாளர்களை கேட்டுக்கொண்ட அவர், ‘அதனை உறையில் இடுங்கள்.
அந்த வாள் நமது தொண்டையையே அறுக்கும். ஹிந்துக்கள், முஸ்லீம்களுக்கிடையிலான ஒற்றுமை வெறுமனே

உதட்டளவிலான ஒற்றுமையாக இருக்கக்கூடாது; அது இதயங்களின் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று
கேட்டுக் கொண்டார்.
1925 அக்டோபரில் காந்தி மீண்டும் பனாரஸிற்கு வந்தார். காசி வித்யாபீடத்தில் பேசிய அவர் ‘நமது பண்டைய
நாகரிகம் கறைபடிந்து போய் விட்டது. தீண்டாமையை அகற்றுவதன் மூலமே அது சுத்திகரிக்கப்படும்’ என்று
குறிப்பிட்டார்.
1927 ஜனவரியில் அவரது அடுத்த வருகை இருந்தது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், 1916
பிப்ரவரியில் தனது புகழ்பெற்ற/மோசமான உரையின் முக்கியமான புள்ளியைத் தொட்டுப் பேசினார். பண்டிட்
மாளவியா மன்னர்கள் மற்றும் மகாராஜாக்களிடமிருந்து மீண்டுமொரு முறை நிதியைச் சேகரித்துப்
பெற்றிருந்தார். ‘பணக்கார இளவரசர்களிடமிருந்து வருகின்ற பணம் உண்மையில் லட்சக்கணக்கான நமது
ஏழைகளிடமிருந்தே வருகிறது. ஐரோப்பாவில் இருப்பவர்களைப் போலல்லாமல், நமது கிராமத்து மக்களின் -
அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒரு தடவைகூட உணவு கிடைக்காதவர்களாகவே இருக்கின்றார்கள்
- பணத்தைக் கொண்டே நமது நாட்டில் உள்ள செல்வந்தர்கள் பணக்காரர்களாக வளர்கிறார்கள். இன்று நீங்கள்
கல்விக்காகப் பெறுகின்ற பணம், அத்தகைய கல்விக்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லாது பட்டினியால் வாடிக்
கொண்டிருக்கும் கிராமங்களாலேயே செலுத்தப்படுகிறது’ என்று அந்த உரையில் காந்தி குறிப்பிட்டார்.

முதன்முதலாக பனராஸுக்குச் சென்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி இறுதியாக பனாரஸிற்குச் சென்ற
நிகழ்வு அமைந்தது. அப்போது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர்வபள்ளி
ராதாகிருஷ்ணனின் அழைப்பின் பேரிலே காந்தியின் அந்த வருகை நிகழ்ந்தது. காந்தியின் நீண்டகால
அபிமானியாக ராதாகிருஷ்ணன் இருந்தார். 1939ஆம் ஆண்டில், மகாத்மாவின் 70ஆவது பிறந்தநாளைக்
குறிக்கும் வகையில், காந்தி குறித்த ஏராளமான புகழுரைகளை அவர் ஒன்றிணைத்தார். உலகம்

முழுவதிலுமிருந்து பங்களித்திருந்தவர்களின் பட்டியலில், நாவலாசிரியர் பேர்ல் எஸ்.பக், தத்துவஞானி கில்பர்ட்
முர்ரே, அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கலை வரலாற்றாசிரியர் ஆனந்த குமாரசாமி, அரசியல்வாதி ஜான்
கிறிஸ்டியன் ஸ்மட்ஸ் ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருந்தது.
1942 ஜனவரியில் பனராஸுக்கு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உரையை வழங்க
காந்தி வந்திருந்தார். அது பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டாகும். ராதாகிருஷ்ணன், பனாரஸ் ஹிந்து
பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மதன் மோகன் மாளவியா என்று அவர்கள் இருவரும் கொண்டாட்டங்களுக்கு
தலைமை தாங்க காந்தி வர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். காந்தியின் உடல்நிலை
அப்போது ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்பதால், இறுதியாக அங்கே வருவதற்கு அவரை ஒப்புக்
கொள்ள வைப்பதற்கு அவர்கள் இருவரும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
காந்தியின் வெள்ளி விழா மாநாட்டு உரை எந்தவித ஆயத்தமும் இல்லாமல் வழங்கப்பட்டதாகவே இருந்தது.
அந்தச் சொற்பொழிவின் முதல் பகுதி தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்ததாக இருந்தது. தனக்கு முன்னர்
பேசியவர்கள் அனைவரும் பேசுவதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தது குறித்து காந்தி

மகிழ்ச்சியடையவில்லை. ‘ஒருவர் மாற்றி மற்றொருவர் என்று பேச்சாளர்கள் பேசி மேடையை விட்டு இறங்கிச்
சென்ற பிறகு, ஹிந்தி அல்லது உருது, அல்லது ஹிந்துஸ்தானி, ஏன் இன்னும் சமஸ்கிருதம், மராத்தியில் அல்லது
எந்தவொரு இந்திய மொழிகளிலாவது உரையாற்றுகின்ற ஒருவருக்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன்’
என்றார்.
ஹிந்துஸ்தானியில் பேசுவதையே காந்தி தேர்வு செய்து கொண்டிருந்தார். அவர் நன்கு அறிந்திருந்த
மொழிகளாக குஜராத்தியும், ஆங்கிலமும் இருந்த போதிலும், அங்கே, வட இந்தியாவில், அவர் அந்தப்
பிராந்திய மொழியில் (அது அவர் நன்றாக அறிந்த மூன்றாவது மொழியாக இருந்தாலும்) பேசினார். அவருக்கு
முனபாகப் பேசிய பேச்சாளர்களில் ஒருவர், புதிய பொறியியல் துறை பல்கலைக்கழகத்தின் பெருமையாக
தங்களை மகிழ்ச்சி கொள்ள வைப்பதாகப் பெருமை பேசியிருந்தார். பண்புரீதியாக அது மேற்கில் உள்ள
பல்கலைக்கழகங்களிலிருந்து பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை வேறுபடுத்திக் காட்டவில்லை, காட்டாது
என்று கூறிய காந்தி, இந்தியாவின் இரண்டு முக்கிய மத சமூகங்களுக்கிடையில் வழக்கமான, பரஸ்பர நன்மை
பயக்கும் உறவுகளை தீவிரமாக வளர்த்துக் கொள்ளுமானால், சிறப்பான, உண்மையில் தனித்துவமான
பங்களிப்பை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தால் வழங்க முடியும். மற்றொரு பெரிய பல்கலைக்கழகத்துடன்,
அதனுடைய பெயரில் ‘ஹிந்து’ என்பதை விட ‘முஸ்லீம்’ என்ற சொல்லைச் சுமந்திருக்கின்ற, வழக்கமான
தொடர்புகளை வைத்துக் கொள்வது அதனைத் தொடங்குவதற்கான நல்ல வழியாக இருக்கும். ‘உங்களுடைய
பல்கலைக்கழகத்திற்கு அலிகாரில் இருந்து இளைஞர்களை ஈர்க்க முடியுமா? அவர்களுடன் உங்களை
அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமா?’ என்று கேள்வியெழுப்பிய காந்தி, ‘அவ்வாறிருப்பது உங்களுடைய
சிறப்பான பணியாக, உங்களுடைய பல்கலைக்கழகத்தின் சிறப்பு பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று நான்
நினைக்கிறேன். பணம் வந்து சேர்ந்திருக்கிறது, கடவுள் இன்னும் சில வருடங்களுக்கு மாளவியாஜியை
நம்மிடையே இருக்க அனுமதித்தால் இன்னும் அதிகம் வரும். ஆனாலும் நான் விரும்புகின்ற அதிசயத்தை
எந்தவொரு பணத்தைக் கொண்டும் அடைய முடியாது. அதாவது நான் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
இடையிலான மனப்பூர்வமான ஒற்றுமையையே குறிப்பிடுகிறேன்’ என்று பார்வையாளர்களிடம்
சுட்டிக்காட்டினார்.

காந்தியின் பனாரஸ் பேச்சுகளிலிருந்து நான்கு குறிப்பிடத்தக்க முக்கியமான கருத்துக்கள்
வெளிப்பட்டிருக்கின்றன. 1916ஆம் ஆண்டு அவர் பேசிய பேச்சு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்
இடையிலான இடைவெளி, நமது வழிபாட்டுத் தலங்களில் தூய்மை இல்லாமை ஆகியவற்றின் மீது கவனம்
செலுத்தியது. அதிக அளவிலான சமத்துவமின்மை, வெகுஜனங்களிடம் உள்ள வறுமை ஆகியவற்றால்
பீடிக்கப்பட்ட சமூகத்தில், தங்கள் நகைகளுடன் அணிவகுத்த மகராஜாக்களின் கண்காட்சியைக் கண்டு காந்தி
திகைத்துப் போனார். ஹிந்து மதத்தின் புனித நகரில் உள்ள புனிதமான கோவிலை மோசமான நிலையில்
வைத்திருப்பதைக் கண்டு அவர் ஏமாற்றம் கொண்டவராக இருந்தார்.
அதர்குப் பின்னர் பனராஸுக்கு வருகை தந்த போதும், இந்த முக்கிய கருப்பொருள்களிடமே காந்தி திரும்பினார்
என்றாலும், 1920களில் இருந்து, வேறு இரண்டு முக்கியமான பொருள்கள் அவருடைய பேச்சுகளில் மிகவும்
வலுவாக இடம்பெறத் தொடங்கின. அவை ஹிந்து-முஸ்லீம் நல்லிணக்கத்திற்கான தேவை, தீண்டாமையை

முடிவிற்கு கொண்டு வருவது என்றிருந்தன. இந்தியாவில் இருந்த இரண்டு பெரிய மதச்
சமூகங்களுக்கிடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தை காந்தி தனது தென் ஆப்பிரிக்க நாட்களில் இருந்தே
உணர்ந்தவராக இருந்தார். இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர், தனது அரசியல் திட்டத்தின் முக்கிய பகுதியாக
அவர் அதை மாற்றினார். அவர் மேற்கொண்ட மறக்கமுடியாத சில உண்ணாவிரதங்கள் ஹிந்து-முஸ்லீம்
நல்லிணக்கத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. புனித ஹிந்து நகரான பனராஸுக்குச் சென்ற
போதெல்லாம், ​​பெரும்பான்மை சமூகத்தைச் சாராத இந்தியர்களிடம் சென்றடைய வேண்டியதன்
முக்கியத்துவத்தை, தார்மீக, அரசியல் முக்கியத்துவத்தை தனது பார்வையாளர்களிடம் நினைவுபடுத்துவதையே
அவர் தன்னுடைய இயல்பாகக் கொண்டிருந்தார்.
ஹிந்து பழமைவாதக் கோட்டையான பனாரஸில், தங்கள் ஆலயங்களை மிகவும் அசுத்தமாக
வைத்திருந்ததற்காக துறவிகளை காந்தி கண்டித்தார். பலமுறை தீண்டாமை மீது அவர் தாக்குதல் தொடுத்தார்.
அத்தகைய நடைமுறையை பண்டிதர்கள் அனுமதிப்பார்கள் என்றால், அவர்களுடைய வேதங்கள் பயனற்றவை
என்று அவர் கூறினார். தார்மீக உண்மையை இறையியல் அதிகாரத்திடம் பேசிய போது, சமஸ்கிருதம் அறியாத
அந்த பனியா உண்மையில் மிகவும் தைரியமானவராகவே இருந்தார்.

இந்திய நாகரிகத்தின் மதரீதியான சிந்தனையின் மையமாக எப்போதும் இருந்து வருகின்ற பனாரஸ், ​​2014
பொதுத்தேர்தலின் போது திடீரென்று இந்திய நாட்டின் அரசியல் சிந்தனைக்குள்ளே நுழைந்தது. வாக்குப்பதிவு
தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில், பிரதமராகப் போகிறவர்
என்று ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்த தலைவரான நரேந்திர மோடி - பனராஸிலிருந்து போட்டியிடுவது
என்ற தனது முடிவை அறிவித்தார். பத்து நாட்களுக்குப் பிறகு, மோடிக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக
அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அந்தப் புனித நகரில் கோலியாத்தை தாவீது கொல்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை என்றாலும், அவர் எந்த
அளவிற்கு அவரைக் காயப்படுத்துவார் என்பதே அப்போது கேள்வியாக இருந்தது. பனராஸில் நடந்த அந்தப்
போட்டி, மிகவிரைவிலேயே அந்தத் தேர்தலின் போது மிகவும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்ட போட்டியாக
மாறியது. தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் கங்கை ஓரத்தில் தங்களுடைய முகாம்களை அமைத்துக்
கொண்டனர். நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களும், ஆயிரக்கணக்கான பாஜக
தொண்டர்களும் அங்கே வந்திறங்கினர்.
அந்த வேடிக்கையைப் பார்த்த நான், இந்த நகரத்துக்கு காந்தி வந்திருப்பது குறித்து நரேந்திர மோடி அல்லது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது தெரியுமா என்று யோசித்துப் பார்த்தேன். தன்னை ஒரு ‘காந்தியன்’ என்று
நீண்ட காலமாக கெஜ்ரிவால் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். தான் மிகவும் நேசிக்கின்ற நபர்
மகாத்மா என்று அடிக்கடி அவர் கூறி வந்திருக்கிறார். காந்தி எழுதி ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட
‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற புத்தகத்தை நேரடியாக எதிரொலிக்கின்ற வகையில், ‘ஸ்வராஜ்’ என்ற புத்தகத்தை அவர்
2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார்.

மறுபுறத்தில் மோடி, தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் தாமதமாகவே காந்தியிடம் வந்து சேர்ந்திருந்தார்.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் கடுமையான, காந்தியை ஒருபோதும் மன்னிக்காத பள்ளியிலே அவர்
வளர்க்கப்பட்டிருந்தார். முஸ்லீம்களிடம் மிகவும் மென்மையானவர், நாட்டின் பிரிவினைக்கு அவர் தான்
காரணம் என்றும் கூறி பல ஆண்டுகளாகவே காந்தியிடம் கடுமையான, மன்னிக்காத மனப்பான்மையை
ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்தது. 1980களுக்குப் பிறகு, அவர்களுடைய தொனி மென்மையாகி விட்டது.
அவர்களைப் பொறுத்தவரையிலும் காந்தி குறைபாடுள்ளவர்தான் என்றாலும், தேசபக்தராக அவர்களால் காந்தி
ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

2002 கலவரத்திற்குப் பிறகு நான் குஜராத்தை பார்வையிடச் சென்றிருந்த போது, ‘மகாத்மா காந்தியின்
இரண்டாவது படுகொலைக்கு’ ஒத்ததாக இருந்தது என்று அகமதாபாத்தில் இருந்த மூத்த காந்தியர் ஒருவர்
என்னிடம் கூறினார். தான் முதல்வராக இருந்த முதல் சில ஆண்டுகளுக்கு, மோடி சபர்மதி ஆசிரமத்திலிருந்து
முழுமையாக விலகியே இருந்தார். காந்தியைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிட்டதே இல்லை.

ஆண்டுகள் செல்லச் செல்ல, மதத்தை விட வளர்ச்சிக்கான போர்வீரன் என்று தன்னை மறுபெயரிட்டுக்
கொண்ட போது, தன்னுடைய தாய்மொழியைப் பகிர்ந்து கொண்ட மனிதருக்கு இருந்த மிகப் பரந்த தேசிய
(மிகப் பரந்த சர்வதேச) அளவிலான ஈர்ப்பை அங்கீகரிக்கின்ற வகையில், ​​ அவ்வப்போது காந்தியை மோடி
வழிபடத் தொடங்கினார். குஜராத் மாநில அரசால் கட்டப்பட்டு, 2011ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
'மகாத்மா மந்திர்' என்ற கூட்ட அரங்கின் மூலம் காந்தியைக் கையகப்படுத்துதல் அவரால்
முறைப்படுத்தப்பட்டது. இப்போது அங்கே நடைபெற்று வருகின்ற வருடாந்திர நிகழ்வான 'துடிப்பான குஜராத்'
எனும் உச்சி மாநாட்டில், நரேந்திர மோடியை ‘மகாத்மா காந்திக்குப் பிறகான மிகப் பெரிய குஜராத்தி’ என்று
அரசை அண்டிப் பிழைக்கும் வர்த்தகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஆக காந்தியின் ரசிகர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டே 2014 மார்ச் மாதத்தில், கெஜ்ரிவால், மோடி
என்று இருவரும் பனாரஸுக்கு வந்து சேர்ந்தனர். ஆனால், மகாத்மாவைப் போல அல்லாமல், ஹிந்து
பழமைவாதத்திற்கு முறையான மரியாதை செலுத்துவதிலேயே அவர்கள் இருவரும் கவனமாக இருந்தனர்.
இருவரும் கங்கையில் சடங்கு நீராடினர்; தெய்வத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக இருவரும் காசி
விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றனர். அந்த ஆலயத்தை காந்தி பார்வையிட்ட பிறகு நூற்றுக்கும் மேலான
ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும், கோவிலுக்குள்ளும், அதன் சுற்றுப்புறங்களிலும் வெளிப்படையாக இருந்து
வருகின்ற குப்பை, அசுத்தத்தைப் பற்றி அவர்கள் இருவருமே எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

தேர்தல் போட்டி நடக்கின்ற போது உள்ளூர் மரபுகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை ஒருவரால் எளிதில்
புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று விட்ட பிறகு, காந்தியைப் பற்றிய
மோடியின் புரிதல் சடங்கிற்கு அப்பாற்பட்டதாக, காந்தியின் புத்தகங்களை வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு
பரிசளிப்பதற்கும் மேலாக, காந்தியின் பிறந்தநாளில் அரசு நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கும் அப்பாற்பட்டுச்
செல்லுமா என்பதைக் காண்பது சுவாரஸ்யமாகவே இருக்கப் போகிறது.
இந்த கட்டுரையை பிரதமர் வாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்றாலும், அவரது ஆலோசகர்கள்,
நலம் விரும்பிகளில் சிலர் வாசிப்பார்கள் என்று நம்பலாம். 1916 மற்றும் 1942க்கு இடையில் காந்தி ஆற்றிய
உரைகளில் இருந்த முக்கியமான கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. ஏழைகளின்
நிலைமையைப் பொருட்படுத்தாமல், பணக்காரர்கள் எப்போதும் கண்காட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்.
நான் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது, மும்பை தொழிலதிபர் ஒருவர் முப்பது மாடிக் குடியிருப்பைக்
கட்டத் திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் தனது அருகிலுள்ளவரைக் காட்டிலும் மிகக் குறைவாக இருபத்தேழு
மாடிகளே கொண்ட வீட்டை வைத்திருப்பவருக்கு அவர் சவால் விடுக்கின்றார். இதற்கிடையில் பார்த்தால், நமது
வழிபாட்டுத் தலங்கள் அசுத்தமாகவும், பாதுகாப்பற்றவையாகவும் இருக்கின்றன; காசி விஸ்வநாதர் ஆலயம்
இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது (கங்கை நதி காந்தியின் காலத்தில் இருந்ததை விட மிகவும்
அதிகமாக மாசுபட்டிருக்கிறது). இந்தியாவின் பல பகுதிகளில் (குறிப்பாக உத்தரபிரதேசத்தில்) ஹிந்துக்கள்,

முஸ்லீம்களுக்கு இடையில் அவ்வப்போது வன்முறை நிலவுகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட,
காந்தியின் வேலைமுறைக்கு முற்றிலும் எதிராகச் செயல்படுகின்ற அரசியல்வாதிகளால் அந்த வன்முறைகள்
தூண்டி விடப்படுகின்றன. இறுதியாக, இந்தியாவின் பல பகுதிகளிலும் (குறிப்பாக உத்தரபிரதேசத்தில்)
தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு தொடர்ந்து வருகிறது.
பெரும்பாலான ஹிந்துக்கள் பனராஸை வழிபாட்டுத் தலமாக, கற்றுக் கொள்ளும் இடமாக போற்றிப்
பாராட்டுகிறார்கள். அங்கே இறந்து போகும் ஹிந்து சொர்க்கத்திற்குச் செல்வார் என்பதால், அதனுடைய
புனிதத்தன்மை முழுமையானது என்று கூறப்படுகிறது. இதுபோன்ற புராணக்கதைகளுக்கு இணங்காதவராக
இருந்த பனாரசி நெசவாளரும், கவிஞருமான கபீர், தான் இறந்து கொண்டிருப்பதாக அறிந்ததும்,
வேண்டுமென்றே அந்த நகரத்தை விட்டு வெளியேறி அங்கிருந்த துறவிகளை அவர் புண்படுத்தினார் என்று
கூறப்படுகிறது. பல விஷயங்களை கபீருடன் காந்தி பகிர்ந்து கொண்டவராகவே இருக்கிறார். அவர் அந்தக்
கவிஞரின் மூதாதையர் செய்து வந்த தொழிலை தனது சொந்த தொழிலாக ஏற்றுக்கொண்டார் (நீதிமன்றத்தில்
தன்னை ஒரு விவசாயி, நெசவாளர் என்று வர்ணித்துக் கொண்டிருக்கிறார்). பழமைவாதம் பற்றி சந்தேகம்
கொண்டவராகவும் அவர் இருந்தார். கபீரின் கடைசி நாட்களில் பனாரஸை விட்டு வெளியேறுவது, ஆல்பர்ட்
ஹர்ஷ்மேன் வகுத்த புகழ் பெற்ற வகைகளில் இருக்கலாம். பாரம்பரியம், வேதம் ஆகியவற்றை எந்த
சிந்தனையுமின்றி ஏற்றுக் கொள்வதற்கு எதிராகக் குரல் கொடுப்பதே, பனராஸுக்கு மேற்கொண்ட அனைத்து
பயணங்களிலும் காந்தியின் செயல்பாடாக இருந்தது. தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் செயல்முறை
குறித்து எந்தவொரு கேள்வியுமின்றி, அதன் மீதான விசுவாசத்தைக் காட்டி வருகின்ற பெரும்பான்மையான
ஹிந்துக்களிடமிருந்து அவரைத் தனித்து பிரித்து வைக்கின்றது.

காந்தியின் மரணத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகும், பனாரஸ் ஹிந்து கலாச்சாரத்திலும், சமூகத்திலும்
தன்னுடைய முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான
யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் பனாரஸிற்கு வருகை தருகின்றனர். நமது பிரதமர் இந்த நகரிலிருந்து

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால், இந்த நகரத்திற்கான இடம் பொதுமக்களின்
கற்பனையில் மேலும் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு வந்த மிகப்பெரிய ஆளுமையான நவீன
ஹிந்து என்ன சொன்னார் என்பதை மறுபரிசீலனை செய்வதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
இப்போது இந்தியா ஒரு காலனியாக இருக்கவில்லை; அது செயல்படுகின்ற தேர்தல் ஜனநாயக நாடாக
இருக்கின்றது. இருந்தபோதிலும், பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தியால் அடையாளம் காணப்பட்ட அந்த
நான்கு அடிப்படைப் பணிகள் இன்னும் நிறைவேறப்படவில்லை. பனாரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
எம்.பி.க்கு ஏராளமான வேலைகள் உள்ளன. இன்னும் சொல்வதானால், நம் அனைவருக்கும்தான்.
https://magazine.outlookindia.com/story/battlefield-banaras/293068
நன்றி: அவுட்லுக் இந்தியா
தமிழில்: தா.சந்திரகுரு

;