tamilnadu

img

வான்கூவரிலிருந்து விக்டோரியா வரை - நா.வே.அருள்

கனடாவின் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் சிலவற்றைப் பார்த்ததுமே பரவசம் தொற்றிக் கொள்கிறது.  இரைச்சலும் சந்தையுமாக இருந்த மனநிலைக்குச் சிறிது மாற்றாக இயற்கையின் மௌனப் பாடல்களைக் கேட்டது மாதிரி இருந்தது.  இப்போது விக்டோரியா நகரத்துக்கு போகிறோம்.  பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் தலைநகரம் விக்டோரியா.  இங்கு செல்வதற்கு ஃபெர்ரி என்று சொல்லக் கூடிய படகில் பயணிக்க வேண்டும்.  படகு என்றால் அது படகு அல்ல.  கப்பல்.  தண்ணீரில் நீந்திச் செல்கிறபோது ஒரு மிதக்கும் உணர்வு தொற்றிக் கொள்ளும்.  மீன்களின் மேல் பயணிப்பது போன்று இருக்கும்.சில நேர அசைவுகளில் பறவையின் மேல் பறப்பது போன்றதொரு பரவசம். இரண்டு மாடிக் கப்பல்.  மனிதர்களை மட்டுமல்ல.  ஏராளமான வாகனங்கள் பயணம் செய்கிற அளவில் அதன் பரப்பளவு இருந்தது.  ஏறக்குறைய 400 முதல் 500 வரைக்குமான கார்கள்.  ஒரு பெரிய கடைத்தெருவே இருப்பது போல விதவிதமான கடைகள்.  உணவு விடுதிகள் என ஒரு பெரிய ஊரே கப்பலுக்குள் இருந்தது.

வான்கூவர் சாசன் நிலையத்திலிருந்து விக்டோரியா சுவார்ட்ஸ் வளைகுடா வரவேண்டும்.   எங்கள் பயணம் இரண்டரை மணி நேரம் பிடித்தது.  குறைந்தது நான்கைந்து முறையாவது மேல்தளத்திற்கு வந்து வேடிக்கை பார்த்துத் திரும்பியிருப்போம்.  இந்தக் கப்பல் வருகிற கடல் வழி மார்க்கம் அமெரிக்காவின் ஒரு முனையைத் தொட்டுக் கொண்டு செல்கிறது என்பது ஒரு சிறப்பு. கனடா 49ஆம்  அட்சக் கோட்டில் இருப்பதால் பூமி பிளவுபடும் பகுதி இது எனலாம்.  இந்தக் கப்பல் போக்குவரத்து தரைப் போக்குவரத்துடன் மிகச் சரியாக இணைக்கப்பட்டிருக்கிறது.  காத்திருப்பும் நேர விரையமும் நடப்பதில்லை.  மிகத் துல்லியமான நிர்வாகத்தைப் பார்க்க முடிகிறது. நாங்கள் முதலில் நுழைந்த இடம் ஜென்னி புச்சார்ட் நிர்மாணித்த மிகப் பெரிய தோட்டம்.  தோட்டம் என்றால் தோட்டம் அல்ல. வனம்.  அதாவது 1904 ஆம் ஆண்டு சுண்ணாம்புக் கல் சுரங்கமாக இருந்த இடம்தான் இன்று உலகமெல்லாம் வந்து பார்வையிடக் கூடிய மிகப் பிரம்மாண்டமான தோட்டமாக உருவெடுத்திருக்கிறது.  சுண்ணாம்புக் கல் சுரங்கத்தையொட்டிய பகுதியில் ஒரு சிமெண்ட் ஆலையை நிர்மாணித்து இருக்கிறார் ராபர்ட்.  சுரங்கத்தின் சுண்ணாம்புப் பாறைகள் முழுதும் தீர்ந்தபின் அவரது மனைவி ஜென்னி புச்சார்ட் குதிரை வண்டிகளை வைத்து இதனை ஒரு தோட்டமாக உருவாக்கியிருக்கிறார்.   1906 முதல் 1929 வரையிலும் தோட்டத்தின் பல விரிவாக்கங்கள் நடைபெற்று இருக்கின்றன.  ஜப்பானியத் தோட்டம், இத்தாலியன் தோட்டம் மற்றும் ரோஜாத் தோட்டங்களென ஏராளமான ஏக்கர்களில் உருவாகியிருக்கின்றன.

அடுத்து, விக்டோரியா நாடாளுமன்றத்திற்கு வந்தோம்.  இந்தக் கட்டடம் கட்டிய விதமே சுவாரசியமானது.  டென்டர் விடுவது போல ஒரு போட்டியை நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்த விக்டோரியா அசெம்பிளி இருக்கின்ற கட்டடம்.  25 வயதுள்ள பிரான்சிஸ் ரத்தன்பரி என்கிற பொறியியலாளரின் கைவண்ணத்தில் உருவானதுதான் இந்த எழில்மிகுந்த ரோமானிய மறுமலர்ச்சி வகையைச் சேர்ந்த கட்டடம்.  9,23.000 டாலர்கள் செலவில் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.  500 அடி உயரம்.  நடுவில் வெள்ளைச் சலவைக்கல்லால் ஆன டோம். 1897 ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது.  நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்ளே சென்று பார்வையிடலாம்.  வெளியே வர மனமே இல்லாத நிலையில் வெளியில் வந்தோம். உலகின் மிகப் பெரிய உயிரியல் கண்காட்சியில் ஒன்றுதான் கேல்கரி நகரத்திலிருக்கும் கண்காட்சிக் கூடம்.  மிகப் பெரிய காட்டில் அதே சூழலில் கண்காட்சியை நிறுவியிருக்கிறார்கள்.  முதலில் எங்களை வரவேற்றது தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கும் பென்குவின்கள்.  அவை விநோத பாஷையில் பேசிக் கொண்டே இருந்தன.  வித விதமான நீச்சலடித்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் போவது அற்புதமான காட்சியாக இருந்தது. ஆப்பிரிக்கப் பகுதியில் நீர்யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், புலிகள், சிங்கங்களைப் பார்க்க முடிந்தது. முன் வரலாற்று கால கண்காட்சிக் கூடம் டைனோசர்களின் எச்சங்களால் வடிவமைக்கப் பட்டிருந்தன.  அங்கங்கும் முடியுதிர்ந்த காட்டெருமைகள் அசைபோட்டபடி இருந்தன.  லெமூர் குரங்குகள் அழகழகாகத் தாவித் திரிந்தன.

விக்டோரியா நகரம் என்பது முன்னொரு காலத்தில் கவாகுட்டில் என்கிற செவ்விந்தியர்களின் நகரம்.  அவர்கள்தாம் பூர்வ குடிகள்.  வான்கூவர் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தவர்கள்.  வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழ்ந்த அவர்களின் தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல். 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பானிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.  அவர்களுக்கு விலங்குகளின் மென்முடிகள் தேவைப்பட்டன.  பதிலுக்கு பழங்குடி மக்களுக்கு கோதுமை மாவு, ரெடிமேட் சட்டை, பேண்ட், போர்வை கண்ணாடி, கத்தி, அரிவாள், ஈட்டி, புகையிலை சர்க்கரை கொடுத்தார்கள்.  மிருது தங்கம் என்றழைக்கப்பட்ட அந்த மென்முடித் தேவைதான் ஐரோப்பியர்களை பழங்குடிகளைக் காலி செய்ய வைத்துவிட்டது.  பற்றாக் குறைக்குத் தங்க வேட்டைக்காகவும் ஐரோப்பியர்கள் வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள்.இதனால் பழங்குடி மக்களின் வாழ்க்கை அடியோடு சிதைந்து விட்டது.  கூடாரத்திற்குள் கால் வைத்த ஒட்டகம் கூடாரத்தையே காலி செய்த கதைதான்.

ஆதிப் பழங்குடி மக்களை ஐரோப்பியர்கள் அடித்துக் கொன்றார்கள்.  அவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டார்கள்.  அவர்களின் பெண்களை அபகரித்துக் கொண்டார்கள்.  சிதைந்து போன செவ்விந்தியர்கள் கூலிகளாகவும் எடுபிடிகளாகவும் மாறிப் போனார்கள்.  கடைசியில் காடுகளுக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள்.  எனக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி நாவல்தான் ஞாபகத்திற்கு வந்தது.  செவ்விந்தியர்களின் கம்பீரமான வாழ்க்கைப் பதிவை அந்த நாவலில் காணமுடியும்.  அப்படியொரு மேன்மையான குணத்திற்கு ஐரோப்பியர்கள் தந்த பரிசை நினைக்கிறபோது மனம் கனத்துப் போனது. இதுவரையிலும் இயற்கை எழிலில் உற்சாகமாகப் புரண்டுகொண்டிருந்த மனம் கனடாவின் வரலாற்றை மிகச் சுருக்கமாகவேனும் படிக்க ஆசைப்பட்டது.

-அடுத்த கட்டுரையுடன் பயணம் முடிகிறது

;