tamilnadu

img

முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன் நிதி ஒதுக்கீடு; புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

 

மஞ்சூர் அருகே முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.  

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகா, மஞ்சூர் மின்வாரிய அலுவலகம் அருகே அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், குறைந்த இடப்பரப்பில் ஒரே கூரையின் கீழ் பள்ளி இயங்கி வந்தது. இதனால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை நிவர்த்தி செய்ய கூடுதல் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது. இதையடுத்து டி.கே.ரங்கராஜன் எம்.பி., தனது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து பள்ளி கட்டிடம் கட்ட ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.  இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன. இந்த புதிய வகுப்பறை கட்டிட பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அவை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

எனவே, இந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பெற்றோர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திங்களன்று அப்பள்ளியின் பழைய கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், உட்புற சுவரிலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பயிலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்  அலியார், முரளிதரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

இதன்பின் குந்தா வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன், மாணவர்களின் பாதுகாப்பு கருதி டி.கே.ரங்கராஜன் எம்.பி.யின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளையும் உடனடியாக திறந்து மாணவர்களை அமர்த்தும்படி கேட்டுக்கொண்டனர்.  இதனடிப்படையில் குந்தா வட்டாட்சியர் தலையிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு புதிய வகுப்பறையை திறக்க ஏற்பாடு செய்தார். மேலும், கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் வருவாய்த் துறையினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, செவ்வாயன்று காலை புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள்  திறக்கப்பட்டு, மாணவர்கள் அங்கு அமர்த்தப்பட்டனர். அப்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைக்குள் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இப்புதிய வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டதால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 

;