tamilnadu

img

இந்நாள் ஜுன் 23 இதற்கு முன்னால்

1942 - இரண்டாம் உலகப்போரில், ஜெர்மன் போர் விமானம் ஒன்று,பிரான்ஸ் என்று தவறாகக்கருதி, இங்கிலாந்தில் தரையிறங்கி மாட்டிக்கொண்ட விநோதம் நிகழ்ந்தது. 1941இன் பிற்பகுதியில் எஃப்.டபிள்யூ.-190 என்ற வகைப் போர்விமானத்தை ஜெர்மனி களத்தில் இறக்கியதிலிருந்தே, வான் போரில் ஜெர்மனியின் கை ஓங்கத் தொடங்கியது. அதுவரை, வானில் ஓங்கியிருந்த இங்கிலாந்து உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு, இந்தப் புதிய விமானத்தை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது.

இவ்வகை விமானத்தில் ஒன்றைக் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு அதன் பலம்-பலவீனங்களை அறிந்தால் எதிர்க்கலாம் என்பதற்காக, ஏற்கெனவே ஏராளமாகக் கைப்பற்றப்பட்டிருந்த மெஸ்ஸர்ச்மிட் வகை ஜெர்மன் போர் விமானங்களில் ஒன்றில், இங்கிலாந்து விமானப்படை அலுவலர்களில் ஒருவரை, ஜெர்மன் விமானப்படை சீருடையில் அனுப்பி ஒரு விமானத்தைத் திருடலாம், அல்லது படகில் இருவரை பிரான்சிற்குள் அனுப்பி, அங்குள்ள ஜெர்மன் எதிர்ப்பாளர்கள் உதவியுடன் திருடலாம் என்றெல்லாம் இங்கிலாந்து விமானப்படை திட்டமிடுமளவுக்கு இந்த விமானம் சிம்மசொப்பனமாக விளங்கியது. 1942 ஜூன் 23இல் தாக்குதலில் ஈடுபட்ட ஜெர்மன் விமானப்படை விமானங்களை, இங்கிலாந்து விமானப்படையின் ஸ்பிட்ஃபயர் விமானங்கள் தாக்கின.

இதில் தன் அணியைவிட்டுப் பிரிந்து, நாய்ச்சண்டையில்(குறைந்த தொலைவில் விமானங்கள் போரிட்டுக்கொள்வது டாக்ஃபைட் என்று அழைக்கப்படுகிறது!) மாட்டிக்கொண்ட, ஜெர்மனியின் ஆர்மின் ஃபேபர் என்ற விமானி, எதிரியை வீழ்த்தினாலும் வழிதவறிவிட்டார். எரிபொருளும் தீர்ந்துகொண்டிருந்தநிலையில், பிரிஸ்டால் கால்வாயை ஆங்கிலக் கால்வாய் என்று தவறாகக் கருதி, (ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட)பிரான்சுக்குப் பதிலாக, இங்கிலாந்தில் பெம்ப்ரே என்ற இடத்திலிருந்த, இங்கிலாந்து விமானப்படை விமானதளத்தில் தரையிறங்கிவிட்டார். நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள், இங்கிலாந்துப் படையினர் அவரைக் கைதுசெய்துவிட்டனர். எஃப்.டபிள்யூ.-190 விமானத்தை திருடியாவது ஆய்வுசெய்ய எண்ணியிருந்தவர்களுக்கு, பரிசளித்ததுபோல, சிறிதும் சேதமின்றி முழுமையாக அவ்விமானம் கிடைத்தது. அவ்விமானத்தின் பலவீனங்களையறிந்து எதிர்த்தாக்குதல் நடத்தியதுடன், அதன் சிறப்புத்திறன்களை பின்னர் உருவாக்கப்பட்ட இங்கிலாந்துப் போர்விமானங்களிலும் பயன்படுத்த உதவிய இந்த நிகழ்வு, வான்போரில் ஜெர்மனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியதில் முக்கியக் காரணியாக அமைந்தது.