நாமக்கல், மே 6- நாமக்கல்லில் அரசின் அறிவுறுத்தலை மீறி முடிவெட்டிய சலூன் உரிமையாளர் மற்றும் பணியாளர் ஆகியோர் கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் முடிவெட்டும் தொழில் செய்பவர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தேவாங்கபுரத்தை சேர்ந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பணிபுரிந்து வந்த ஒரு நபர் லாரி மூலம் வீடு திரும்பிய விவரம் வருவாய் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தெரிவந்தது. அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த நபருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவரது உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை செய்தபோது இவர் பள்ளிபாளையம் ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் ச.ஜெகன் மணிகண்டன் என்பவர் மூலம் முடிவெட்டிக் கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. இதன்காரணமாக முடிவெட்டிய ச.ஜெகன் மணிகண்டன் மற்றும் முடிதிருத்தும் நிலையத்தின் உரிமையாளர் த.சதீஸ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கொள்ளை நோய்த்தடுப்புச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டங்களின் கீழ் செவ்வாயன்று கைது செய்தனர்.