tamilnadu

img

பொதுமக்கள் குறைகள் - புகார் தெரிவிக்க எஸ்பி அலுவலகத்தில் ஏற்பாடு செய்திட சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
கொரோனா காலத்திலும் சட்ட ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகும் மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்களையும் குறைகளையும் தெரிவிக்க ஏற்பாடு செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளால்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சுமார் 40 நாட்கள் ஆகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்கேற்ப மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்மனுக்களை தினசரி வாங்கும் வசதி இருந்து வந்தது.

ஆனால் தற்போது காவல் கண்காணிப்பாளர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவதால் அலுவலகத்திலிருந்து முறையாக வாங்கி வந்த புகார் மனுக்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வாய்ப்புள்ள சிலர் மட்டும் புகார்களை இணையதளத்தில் அனுப்புகின்ற நிலைமை உள்ளது. பெரும் பகுதி மக்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களுடைய புகார் மனுவை வாங்க மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

;