tamilnadu

img

நூறு ஆண்டுக்கும் மேலாக வசிக்கும் மக்கள் குடியிருப்பை திடீரென காலி செய்யச் சொல்லி அறநிலையத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்

தரங்கம்பாடி, செப்.22- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், நீலவெளி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களை 15 நாட்களுக்குள் அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை மிரட்டி வருவதாகவும், பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  நீலவெளி கிராமத்தில் உள்ள சோமநாத சுவாமி கோயில் பெயரில் உள்ள இடங்களில் பெரும்பாலான மக்கள் தலைமுறை, தலைமுறையாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக  இக்கோயிலின் செயல் அலுவலராக கூறப்படுகிற அருகிலுள்ள பெரம்பூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலின் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய்த்துறையினர் துணையுடன் நீலவெளி கிராமத்தில் பொதுமக்களிடம் எந்தவித தகவலும் அளிக்காமல் இடங்களை அளவீடு செய்வதோடு, கோவில் பெயரிலுள்ள இடங்களில் வசிப்போரிடம் பணம் கொடுத்தால் கண்டு கொள்ள மாட்டோம் என மிரட்டி வருவதோடு. கடந்த 18-ம் தேதி அன்று கையெழுத்திட்ட ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலை 20-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளது.  அக்கடிதத்தில் 15 நாட்களுக்குள் குடியிருக்கும் இடங்களை காலி செய்ய வேண்டுமென்றும், மீறினால் நீதிமன்றம் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இது குறித்து கோயில் பெயரில் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் கூறும்போது, சுமார் 120 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது வசிக்கும் இடத்தில் குடியிருந்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பட்டா வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அறநிலையத்துறையினர் மிரட்டி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அறநிலையத்துறை மீண்டும் மிரட்டலில் ஈடுபட்டால் போராட்டங்களை நடத்துவோம் என கூறியுள்ளனர்.

;