tamilnadu

img

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

தரங்கம்பாடி, ஜூலை 10- நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் அருகேயுள்ள அப்பங்குளம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சாராய வியாபாரி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரம் போட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அப்பெண் சிகிச்சைப் பெற்று வருகிறார். திருவிழந்தூர் அப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக அருகேயுள்ள கழுக்காணிமுட்டம் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மகன் அலெக்ஸாண்டர் (22) என்கிற சுந்தர் அப்பெண்ணிடம் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் ஜூலை 7 (ஞாயிறு) அன்று இரவு 10.30 மணியளவில் கழுக்காணிமுட்டம் கோயில் அருகே வருமாறு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலெக்ஸாண்டர் போன் செய்து வரச் சொன்னார். இதை நம்பி அங்கு சென்ற அப்பெண்ணை, வெளிநாடு சென்று வந்த புதிய மணமகன் வினோத் (26), சாராய வியாபாரி அம்மாயி(27), வின்சென்ட் (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததை வாங்கி பருகிய அப்பெண் மயக்கமடைந்தார்.  இதை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் தூக்கி வீசி சென்றுள்ளனர் அந்த கொடூரன்கள். பலத்த காயங்களுடன் உடைகள் எதுவுமின்றி கிடந்த அப்பெண்ணை, நள்ளிரவில் அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், அப்பெண்ணின் முனகல் சத்தம் கேட்டு, தகவல் அளித்ததையடுத்து, பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  சாராய வியாபாரிக்கு சாதகமாக காவல்துறை மாற்றுத்திறனாளி பெண் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நான்கு கொடூரன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக ஒரு நபர் மீது மட்டும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. சாராய வியாபாரியான அம்மாயி-க்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர்கள் த. ராயர், எம்.மணி, எஸ்.மாசிலாமணி, அப்பங்குளம் கிளைச் செயலாளர் கண்ணன், கிராம பொறுப்பாளர்கள் ஞானகுமார், துரைராஜ், ஜெயபால், சீனிவாசன் ஆகியோர் ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு, குற்றவாளிகளின் உறவினர்கள் பணம் கொடுத்து மிரட்டி வருவதாகவும், காவல்துறை வழக்கை பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு துணையாக இருப்பதாக குற்றம் சாட்டுவதோடு உடனடியாக மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

;