tamilnadu

வாக்குப்பதிவு நாள் அன்று 100 நாள் வேலை கொடுத்து வாக்குரிமையை பறித்த அநீதி

நாகப்பட்டினம், ஏப்.22- ஏப்ரல்-18 அன்று, நாடாளுமன்றத்திற்கான வாக்குப் பதிவு நாள். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும், இது ஜனநாயகக் கடமை, 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என அனைத்து வகையிலும் அரசு விளம்பரம் செய்து, அன்று அனைத்து நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விடுமுறையும் அளித்திருந்தது.  ஆனால், நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், மோகனூர் ஊராட்சியைச் சேர்ந்த புலவனூர் கிராமத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக, அரசு விதிமுறைகளுக்கு எதிராக ஓர் அநீதி நடந்துள்ளது. ஆளுங்கட்சியின் பின்னணியில், அரசு அலுவலர்கள், அந்த கிராமத்தில், தேர்தல் நாளன்று 100 நாள் வேலைக்கு வருமாறும், அன்றைக்கு வேலைக்கு வருபவர்களுக்குத் தான் தொடர்ந்து 100 நாள் வேலை கொடுக்க ப்படும் என்றெல்லாம் அறிவிப்புச் செய்து, 100 நாள் வேலை கொடுத்து, அன்று அந்த மக்கள் வாக்களிக்கச் செல்லாமல் சதி செய்துள்ளனர்.இப்படி, 100 நாள் வேலை செய்பவர்கள் எல்லாம், ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் தலித் மக்கள். இன்னும் சொல்லப் போனால், பெரும்பாலும் இவர்கள் இடது சாரிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள். நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசுக்கு உறுதியாக வாக்களிப்பவர்கள் என்பதை அறிந்தே, அந்த மக்களை வாக்களிக்கச் செய்யாமல் இந்தச் சதி வேலை நடந்துள்ளது.தேர்தல் நாளன்று 100 நாள் வேலை கொடுக்க உத்தரவு கொடுத்தவர் யார்? இப்படி யார் கொடுக்கச் சொன்னது? அன்று வேலைக்கு வராவிட்டால், தொடர்ந்து வேலை கிடைக்காது என அந்த அப்பாவி மக்களை அச்சுறுத்தியது எப்படி? இது என்ன ஜனநாயகக் கொடுமை? இது சட்ட விரோதம் அல்லவா? அநீதி அல்லவா? அரசும், மாவட்ட நிர்வாகமும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? இதற்கு விளக்கமும் நியாயமும் வேண்டும். இந்த அநீதியைச் செய்த அரசு அலுவலர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ப்பட்டிருக்கிறது.

;