tamilnadu

img

5 ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடியைப் பறித்த மோடி அரசு

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, எல்ஐசி நிறுவனத்திடமிருந்து, கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சத்து 70 கோடியை நிதியாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.கடந்த 2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற
திட்டங்களை, தடாலடியாக அறிவித்தார். இதனால்,சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மட்டுமின்றி, பெருந்தொழில்களும் கடும் பாதிப்பைச் சந்தித்தன. சுமார் ஒன்றே கால் கோடிப் பேர் வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். உற்பத்தி முடங்கியது. ஏற்றுமதி குறைந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால், பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறிய மோடி அரசு, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் கடன்களைப் பெறத் தொடங்கியது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில் மட்டும், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்தது. சுமார்28 லட்சம் கோடி ரூபாயை வெளிநாடுகளி லிருந்து மோடி அரசு கடனாகப் பெற்றது.அது மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியிட மிருந்தும், கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயை, மோடி அரசு பிடுங்கியது.  அதிகபட்சமாக 2019-ஆம் ஆண்டில்  மட்டும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து பெற்றது. 

தற்போதோ, இந்திய மக்களின் வாழ்நாள் பாதுகாப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்தும்பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு என்ற பெயரில்  பெறத்துவங்கியுள்ளது.நீண்டகாலமாகவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை எல்ஐசி நிறுவனம்தான் வழங்கி வரு கிறது. கடந்த 2013-14 நிதியாண்டு வரை, சுமார் 11லட்சத்து  90  ஆயிரம்கோடி ரூபாயை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்திருந்தது. பாலிசி தாரர்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடாத வகையில், இந்த முதலீடுகளை எல்ஐசி செய்து வந்தது.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு எல்ஐசி நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது. ஐடிபிஐ வங்கியில் சுமார் 80.96 சதவிகித பங்குகளை மத்திய அரசு வைத்திருந்தது. எல்ஐசி 10.82 சதவிகித பங்குகளை வைத்திருந்தது. இந்நிலையில் தன்னிடமிருந்து 41 சதவிகித பங்குகளை வாங்கிக் கொள்ளுமாறு எல்ஐசி நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் அளித்த மத்திய அரசு அதன்மூலம் ரூ. 13 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றிக்கொண்டது. 
இதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில், எல்ஐசி நிறுவனத்தை ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் கோடிகள் அளவிற்கு முதலீடு செய்ய வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய இரண்டரை மாதங்களில் மட்டும் ரூ. 57 ஆயிரம் கோடியை எல்ஐசி-யிடமிருந்து கறந்துள்ளது. நிதி நெருக்கடியிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காக மோடி அரசு இவ்வாறு செய்துள்ளது.கடந்த 1956-ஆம் ஆண்டு முதல் 2014 வரை எல்ஐசி முதலீடு செய்த தொகை ரூ. 11 லட்சத்து 90 ஆயிரம் என்றால், கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் மட்டும் ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம்கோடி எல்ஐசி-யிடமிருந்து முதலீடு என்ற பெயரில்பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்ஐசி நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொண்டுள்ள முதலீடு ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.