tamilnadu

img

வெளிநாட்டிலிருந்து வந்த 450 பேர் நாகை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்

நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம், புதன்கிழமை அன்று, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   நாகை மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து இதுவரை  520 பேர் வந்துள்ளனர். அவர்களுள், 450 பேர் பரிசோதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறையால் ”தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்” என்னும் வாசகம் உள்ள ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது. மீதி 70 பேர் பரிசோதனைக்குப் பின், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாகை மாவட்டத்தில், கொரோனா   தொற்று அறிகுறியுடன் வரும் நோயாளிகளைத் தனிமைப் படுத்தும் விதமாக, நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 150 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகளும், மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகளும் அமைக்கப் பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, நோய் அறிகுறி உள்ளதா எனக் கண்காணித்து, அரசு மருத்துவ மனை மூலமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, நோய் உறுதியானால், உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளவேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
 

;