tamilnadu

img

ஆபத்தின் பிடியில் திருச்சி

ஜூன் 22 நிலவரப்படி, திருச்சியில் கொரோனா தொற்றால் தடைசெய்யப்பட்ட பகுதிகள் 8ஆக அதிகரித்துள்ளன. மக்களுக்குத் தெரிந்தே, தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகள் பலவும் தடைசெய்யப்படாமல் உள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை.
உதாரணமாக, திருச்சியில் உள்ள எல்ஐசி அலுவலகம் ஒன்றிற்கு வந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த அலுவலகம் ஏதோ தீட்டுக் கழிப்பதுபோல, கிருமிநாசினி தெளித்துச் செயல்பட அனுமதிக்கப்பட்டதுடன், ஊழியர்களும் பணிக்குவர வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எல்ஐசியின் முகவர் என்பதால், திருச்சியிலேயே உள்ள பிற எல்ஐசி அலுவலகங்களில் ஒன்றிரண்டுக்குச் சென்றதாகவும் தகவல்கள் இருந்தாலும், வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அவர் வந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நாளில் வந்த வாடிக்கையாளர்கள் பட்டியலைத் தயாரிக்கவோ, அவர்களையெல்லாம் சோதனைக்குட்படுத்தவோ எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையே, சென்னையிலிருந்து அனுமதியின்றி, அதாவது, தொற்று கண்டறியும் சோதனைக்கெல்லாம் உட்படாமல், நான்காயிரம் பேர் திருச்சிக்கு வந்துள்ளதாகவும், அவர்களைக் கண்டறிய வீடுவீடாகச் சோதனை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர், ஓர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார், அதே அலுவலகத்திற்கு அன்று வந்த மக்கள் அனைவரையும் பட்டியலாகத் தொகுக்கவும் முடியுமென்ற நிலையிருந்தாலும், அதற்கே நடவடிக்கை எடுக்காத அரசு, யாரென்றே தெரியாதவர்களை வீடுவீடாகத் தேடுகிறது என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவும் இல்லை. அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை.

திருச்சியில் மிக வேகமாகத் தொற்று பரவுகிறது என்பது, மறைக்க முடியாத வகையில் வெளிப்பட்டாலும், புதிதாக எவ்விதத் தடுப்பு நடவடிக்கைகளும் இன்றி, இயல்பு நிலையிலேயே திருச்சி தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26 அன்று, ஒரு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் திருச்சிக்கு வருவதாகவும், அதற்குமுன் முழுமையான லாக் டவுன் அறிவிக்கப்பட்டால் முதல்வர் நிகழ்ச்சிக்கு மக்களைத் திரட்ட முடியாது என்பதால் அதுவரை லாக் டவுன் ஒத்திப்போடப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையெனில், தொற்று குறித்த எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி அரசு செயல்படுகிறது என்பதற்கு அதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இது திருச்சிக்கு மட்டுமான நிலையல்ல. மாநிலம் முழுவதுமே இப்படித்தான் கொரோனா தொற்று கையாளப்படுகிறது என்பதற்கான சான்றே, மிகஅதிக தொற்று பரவிய மூன்றாவது மாநிலம் என்ற இடத்திற்குத் தமிழகம் சென்றிருப்பது. முதலில் தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களுள் ஒன்றான, அருகிலுள்ள கேரளா, பாதுகாப்பான நிலையிலிருப்பதோடு ஒப்பிட்டால், தமிழகத்தின் நடவடிக்கைகள் எவ்வளவு மோசமாக இருந்துள்ளன என்பது எளிதில் விளங்கும். ‘பெட்டர் லேட் தேன் நெவர்’ என்பது ஆங்கிலப் பழமொழி. இப்போதாவது, உரிய துறையினருடன் சரியான ஆலோசனைகளைப் பெற்று, உடனடியாகச் செயல்படத் தொடங்கினால், தமிழகத்தில் தொற்று பரவலின் வேகத்தையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்.

====அ.அறிவுக்கடல்===

;