tamilnadu

img

‘தேசத்துரோகம்’ என்னும் எரிச்சலூட்டும் செயல்

நாட்டின் புகழ்மிக்க குடிமக்கள் 49 பேர், பிரதமருக்கு ஜூலையில் திறந்த மடல் எழுதினார்கள் என்பதற்காக, அவர்களுக்கு எதிராக, பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள ஒரு காவல்நிலையத்தில், தேசத் துரோக வழக்குப்பதிவு செய்திருப்பது என்பது புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்களை, இதர மக்கள் மீது வெறுப்பைக் கக்கும் குற்றங்களை, குறிப்பாக மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள் என்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் வேண்டுகோள் விடுக்கவில்லை. அதுவும்கூட, அவர்கள் (குண்டர் கும்பல்கள்) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தேச ஒருமைப்பாட்டுக்கு சேதத்தை ஏற்படுத்திடும் என்ற முறையில்தான் கோரியிருந்தார்கள்.
நாட்டில் மதவெறித் தீ விசிறிவிடப்படும் இக்காலகட்டத்தில், ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எதிராக, பொதுமக்களின் மீது அக்கறைகொண்டு திறந்த மடல் ஒன்றில் கையெழுத்திட்டார்கள் என்பதற்காக கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு வழக்குரைஞர்  நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லைதான். ஆனால், அத்தகையதொரு ஆத்திரமூட்டும் புகாரை ஒரு தலைமை நீதித்துறை நடுவர் கோப்புக்கு எடுத்திருப்பதும், அதன்மீது காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திடுமாறு கோரியிருப்பதும்தான் திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திகைப்பும் அதிர்ச்சியும்
நீதித்துறை நடுவர்களுக்கு, கைது செய்தற்குரிய குற்றங்களின்மீது காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவதற்கு அதிகாரம் உண்டு என்பது உண்மைதான். உச்சநீதிமன்றமும் 2013, லலித் குமாரி (எதிர்) உத்தரப்பிரதேசம் வழக்கில் காவல்துறையினரால் பெறப்படும் புகார்களில் கைது செய்யப்படும் குற்றங்கள் புரிந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் (மற்றும் சில சமயங்களில் இது தொடர்பாக ஒரு பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளலாம்) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் என்று தீர்ப்பினை அளித்திருக்கிறது. எனினும், இந்த வழக்கில், திறந்த மடலில் உள்ள சாராம்சங்கள் தேசத்துரோகம் இழைக்கக் கூடியவை அல்லது அதுபோன்று ஏதேனும் ஒரு குற்றத்தைக் குறிக்கக்கூடியவை என்று எப்படி நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ முடிவுக்கு வந்தது என்பது திகைப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரைக் குறிவைத்து, தனியார் முறையீடுகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கமற்ற செயல் அல்ல. ஆனால், நீதிமன்றங்கள் இவ்வாறு பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போரை நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காகவே தாக்கல் செய்யப்படும் புகார்களின்மீது, போதுமான காரணங்களின்றி, நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்கள் போன்றவை இதுபோன்ற கருத்துக்கள் வரும்போது, அதனால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டது என்று கூறி வரும் புகார்கள் மீது அவற்றை அடக்குவதற்கோ ஒடுக்குவதற்கோ தலையிடலாம். ஆனால், கீழமை நீதிமன்றங்கள் இதுபோன்ற அற்பத்தனமான புகார்கள் மீது தாமாகவே நடவடிக்கை எடுப்பதை நிறுத்திக்கொள்வதற்கு இதுவே நேரமாகும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின்கீழான தேசத் துரோகக் குற்றம் குறித்து அதை சட்டப்புத்தகத்திலிருந்து ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி, தேசிய அளவில் விவாதங்கள் நடந்துகொண்டிருப்பது குறித்து நீதிமன்றத்திற்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். தேசத் துரோகக் குற்றப்பிரிவைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதற்கு எதிராக பொதுக்கருத்து உருவாவதற்காக நடந்துகொண்டிருக்கும் விவாதங்களை அடாவடித்தனமாக அவமதிக்கும் விதத்தில் தலைமை நீதித்துறை நடுவரும், காவல்துறையினரும் நடந்துகொண்டிருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறலாமா?
வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்கள் இருந்தால் மட்டுமே தேசத்துரோகக் குற்றச்சாட்டு ஈர்க்கப்படுகிறது என்றும், வெறுமனே அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், அவை எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் சரி, அது இக்குற்றப்பிரிவை ஈர்க்காது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் அளித்திருக்கின்ற போது அவற்றை நீதித்துறை நடுவர்கள் அசட்டை செய்வது மிகவும் மோசமாகும். விடுக்கப்பட்டுள்ள திறந்த மடலில், குண்டர் கும்பல்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரைக் கோரியிருப்பதற்கு மேல் வேறெதுவும் இல்லை என்பதை நீதிமன்றம் பார்க்காதது, துரதிர்ஷ்டவசமாகும். அரசியல் ஆதாயங்களுக்காக நீதித்துறையைப் பயன்படுத்திக்கொள்ள கேலிக்கூத்தானமுறையில் நடவடிக்கை எடுக்க முயற்சித்திருப்பதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திடும் என்று நம்புவோமாக.
நன்றி: தி இந்து தலையங்கம்
தமிழில்: ச.வீரமணி

;