பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
தேனி, மே 25- போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஜனனி (35). இவரது மகள் 9 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளி விடுமுறையில் இருந்துள்ளார். அப்போது இதே ஊரை சேர்ந்த நவீன் (18) என்பவர் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனை ஜனனியும் அவரது கணவரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த மதன்குமார் (29) என்பவர் இருவரது காதலுக்கும் உதவுவதாகக் கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி இருவரையும் மே 18 ஆம் தேதி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அங்கு மதன்குமாரும், நவீனும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வியாழக்கிழமை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் தாய் ஜனனி போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா தேவி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மீதும் பாலியல் பலாத்காரம் செய்தல், போக்சோ சட்டம், மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர். மேலும் நவீனை தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகே இடி தாக்கி பெண் பலி
சிவகங்கை, மே 25- சிவகங்கை மாவட்டம் நடுமாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி என்பவரது மனைவி அழகேஸ்வரி (47). இவர் தனது வீட்டின் பின்புற பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் .
பிற்பகலில் மழை பெய்ய துவங்கியதும் மரத்திற்கு கீழ் நின்றார். அப்போது பலத்த இடி மின்னல் தாக்கியதில் அழகேஸ்வரி சம்பவ இடத்திலே பலியானார். அருகிலிருந்த பெருமாள், கருப்பையா ஆகிய இருவரும் இடி விழுந்த அதிர்ச்சியில் மயங்கிவிழுந்தனர். இருவரையும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த ஊருக்கு அருகில் உள்ள காயங்குளம் கிராமத்தில் தெய்வா என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த இரண்டு பசு மாடுகளும் இடி தாக்கியதில் பலியாகின.