tamilnadu

img

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தேனி:
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 21 பேர்.

மேலும் சிலர் அதற்கான அறிகுறிகளோடு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை குணமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களான என்-95 மாஸ்க், பிபிஇ  பாதுகாப்பு உபகரணம், கிருமி நாசினிகள் போதுமான அளவு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக, சுழற்சி முறையில் (மூன்று ஷிப்ட்) பணியாற்றுவோர்களுக்கு ஒரு நாளைக்கு  என்-95 மாஸ்க்-50, பிபிஇ-100 தேவைப்படும். இந்த அடிப்படையில் வரக்கூடிய நாட்களுக்கு இருப்பு வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றை உறுதி செய்ய 17 ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், சென்னை கீழ்ப்பாக்கம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகங்கள் தான் செயல்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. 

கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரை மக்களவை உறுப்பினர்  சு. வெங்கடேசன் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுமதி அளித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் தேவையான பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று சம்மந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தென்மாவட்டங்கள் முழுமைக்கும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் தான் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பிசிஆர் (Polymerase chain reaction) மற்றும், Culture பரிசோதனைகள் இப்போது வரை செய்யப்பட்டு வருகிறது. இதற்கும் போதிய பரிசோதனை கருவிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தேவையான அளவு மருத்துவப்  பணியாளர்கள் இல்லாதது போல் அறிகிறோம். மேலும் மருத்துவப் பணியாளர்கள் தினசரி பணிக்குச் சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்துதர வேண்டும்.

கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் அங்கே தனியாக இருப்பதற்கு தேவையான அறைகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள்ளே ஏற்படுத்தி தர வேண்டும்.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு அறிவித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மருத்துவக் கல்லூரியில் குளியலறை, கழிப்பறை சுகாதாரமாக இருப்பதற்கும், தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும்.
 

;