tamilnadu

img

தென்காசியில் புதிய சளி மாதிரி சேகரிப்பு மையம்

தென்காசி
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட சளி சேகரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பொதுமக்களின் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நலனுக்காக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் முருகவேல் ஆலோசனையின்படி புதிய வித்தியாசமான சளி மாதிரி சேகரிப்பு மையத்தை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  உருவாக்கியுள்ளார். நோயாளிகளுக்கு கொரோனா தொற்று  உள்ளதா என கண்டறிய மூக்கிலும் தொண்டையிலும் சளி எடுப்பதற்காக புதிதாக  உருவாக்கப்பட்ட அமைப்பை மாவட்ட ஆட்சியர்  அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார். இந்த புதிய சேகரிப்பு மையத்தில் சளி மாதிரி எடுக்கும்போது  ஒரு கொரோனா தொற்று நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கோஅல்லது நோயாளியிடம் இருந்து மருத்துவமனை பணியாளர்களுக்கோ பரவ வாய்ப்பில்லை என மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கினர்.

சளி சேகரிப்பு மையம் பற்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கூறியதாவது :  கொரோனா தொற்றின் வீரியத்தையும், அது பரவும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் நலன் கருதியும், மருத்துவமனை பணியாளர்களின் நலன் கருதியும் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக புது முயற்சியாக இணை இயக்குனர்  ஆலோசனையின்படி அனைத்து மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் இந்தப் புதிய சளி சேகரிப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம்.

மையத்தில் ஒரு நோயாளிக்கு சளி மாதிரி எடுத்தவுடன் ஐந்து நிமிடத்தில் அந்த மையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் கூற அதை அப்படியே ஏற்று உடனடியாக வடிவமைத்துக் கொடுத்த அரசு பொறியாளர்கள் இப்ராஹிம், உதயகுமார், ஒப்பந்த பணியாளர் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

;