tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்... சி.பி.ஐ. விசாரணை அறிக்கை செப்.16ஆம் தேதி தாக்கல்?

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக  சி.பி.ஐ. விசாரணை அறிக்கை வருகிற 16ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். போலீசார் மற்றும் பொதுமக்கள் பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ரவி துப்பாக்கி சூடுசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுசெய்தார்.

தொடர்ந்து சி.பி.ஐ. எஸ்பி சரவணன் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு ஆவணங்களை சேகரித்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு உள்ளனர். அதன்படி கூடுதல் வீடியோ ஆதாரங்களை கேட்டு மாவட்ட நிர்வாகத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அணுகி உள்ளனர். அதன்பேரில், துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோக்களை பெறுவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் வருகிற 16ஆம் தேதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

;