tamilnadu

img

காவலர்கள் 2 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு ... போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு

தூத்துக்குடி:
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம்விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி இதுவரை 10 பேரை கைது செய்தது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில் முத்து, பிரான்சிஸ் தாமஸ் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 3 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் சில தினங்களில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த 6ஆம் தேதி தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை வியாழன் அன்று காணொலிக் காட்சி மூலம் வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி யோகேஷ்வரன், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனிடையே தந்தை -மகன் கொலை வழக்கில் கைதான காவலர்களை 15 நாட்களுக்குள் போலீ்ஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

;